600 வருஷங்களுக்கு முன் ஒரு மஹான் நமது தென்னாட்டில் வாழ்ந்திருந்தார். (1520–1593) அவர் பெயர் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. சிறந்த சிவ பக்தர்.அப்பா அம்மா வைத்த பெயர் விநாயக சுப்ரமணியன். ஊர் ஆரணி அருகே திருவண்ணாமலை ஜில்லாவில் உள்ள அடையபலம். அப்பா பெயர் ரங்கராஜுத்வாரி . ராமகவி என்ற குரு அவருக்கு சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் கற்பித்தார். தீக்ஷிதர் ஒரு சித்த புருஷர். ”என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா?” தானே இதை அறிந்து கொள்ள ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். சீடா்களை அழைத்தார். ”என் கையில் இருக்கும் ஊமத்தைச் சாற்றை குடிக்க போகிறேன். தன் நிலை மறந்து உன்மத்தம் ஆகிவிடுவேன். பைத்தியம் பிடிக்கலாம். அப் போது என் உடலிலே,உள்ளத்திலே, உணா்விலே, பேச்சிலே ஏற்படும் மாற்றங்களை ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளுங்கள்.பிறகு மாற்று மருந்தை எனக்கு கொடுங்கள். நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்”
ஊமத்தஞ் சாறு தீக்ஷிதரை உன்மத்தராக்கியது. அப்பய்ய தீட்சிதா் சிவனின் புகழைப் பாடிக் கொண்டேகுதித்தார், சிவனின் புகழைப் பாடிக்கொண்டே ஆடினார், பாடினார், உருண்டார்,அழுதார். பிறகு மாற்று மருந்தால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.”என்னை மறந்த நிலையில் நான் எப்படி இருந்தேன்?”என்று சீடர்களிடம் கேட்டார்.
” நீங்கள் முழுக்க முழுக்க சிவனின் புகழையே பாடி வழிபட்டீா்கள். அந்த ஸ்தோத்திரங்களை இதோ நாங்கள் எழுதி வைத்துள்ளோம்”என்று அவர் கள் சொல்ல ,மகிழ்ந்தார்.உன்மத்த நிலையில் அவர் இயற்றியது ” ஆத்மார்ப்பண ஸ்துதி “. அவருடைய இன்னொரு ஸ்தோத்ரம் “சிவார்க்க மணி தீபிகை”தீக்ஷிதரின் சிவ பக்தி சேவையை கௌரவித்து வேலூரை ஆண்ட ராஜா சின்ன பொம்ம நாயக்கன் தனது அரச சபையில் அவருக்கு தங்க புஷ்பங்களினால் கனகாபிஷேகம் செய்தான்.தீக்ஷிதரின் ப்ரம்ம சூத்ர ஸ்ரீ கண்ட பாஷ்யம் ஆதி சங்கரரின் பாஷ்யத்தை அடி ஒற்றி இருக்கிறது. சகுணோபாசனை மூலம் நிர்குண உபாசனை பெறுவது சுலபம் என்று விளக்கினார். தீக்ஷிதரின் ஆனந்தலஹரி சந்திரிகா ஒரு அற்புத படைப்பு.
