அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்
– எஸ். சுதர்சனம்
லோகசாரங்க முனிவரின் தோள்கள் மீதமர்ந்து ஸ்ரீரங்கநாதனைக் காண்கின்றார் திருப்பாணாழ்வார். அவருக்குக் கிடைத்த அரிய முதல் வாய்ப்பு. ஆழ்வார் உணர்ச்சி வசப்படவில்லை. அவர் கண்களில் நீர் இல்லை. திருவரங்கனை திருக்கமல பாதத்திலிருந்து அனுபவிக்கிறார். பாதகமலம், நல்லாடை, உந்தி, தேட்டரும் உதர பந்தம், திருமார்பு, கண்டம், செவ்வாய், வாட்டமில்லாத திருக்கண்கள், திருமேனி முழுவதும் கண்டுகளிக்கிறார். கொப்பூழ், திருவாபரணங்கள், திருமகள், எல்லாம் கண்டார். ஐயோ! அரங்கனின் அழகு என் நெஞ்சில் நிறை கொண்டதே – கவர்ந்ததே! என்கிறார். அரங்கனைக் கண்ட கண்கள் வேறு எதையும் காணமாட்டா என்று திட்டவட்டமாகப் பறை சாற்றுகிறார். (அமலனாதிபிரான் 10).
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன், என்னமுதனைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே.
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்கும் பாக்யம் கிடைத்த போதெல்லாம்”நாக அணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்தொறும் ஏக சிந்தையினாய்” (திருவாய்மொழி 5.10.11) இருக்க வேண்டும் என்கிறார் நம்மாழ்வார். பகவான் முன் நிற்கும்போது “ஏகசிந்தனை” அவனைக் கண்டு மகிழ்ந்து, அவன் கல்யாண குணங்களில் ஈடுபடுவது மாத்திரமே.”நாராயணனே நமக்கே பறை தருவான்ச” (திருப்பாவை 1) என்றாள் ஆண்டாள்.”ஏக சிந்தனையுடன் மஹாவிஸ்வாசத்துடனும்” அவனைக் கண்டு களிப்பதுவே நோக்கமாயிருக்க வேண்டும்.”மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று கீதாச்சார்யன் சொல்லிய வாக்காயிற்றே! அவன் ஒருவனையே சரணடைய வேண்டும். அவன் துயரறு சுடரடிகளே நமக்குக் குறிக்கோள். இப்படி ஏக சிந்தனையுடனும் மஹாவிஸ்வாசத்துடனும் பகவானைத் தொழுதால், கல்யாண குண சம்பூர்ணன், செல்வ நாரணன், இரவும் பகலும் இடையறாது, நம்மிடம் கருணை கொண்டு நம்மிடமே ஒன்றிவிடுவான். பிறகு,”மார்வம் என்பதோர் கோயிலமைத்து மாதவனென்னும் தெய்வத்தை நாட்டி, ஆர்வம் என்பதோர் பூவிட்டு” மகிழ்ந்திருக்கலாம். (பெரியாழ்வார்திருமொழி 4.5.3). எம்பெருமான் நம்மோடு ஒன்றிவிடும் நிலை எப்போது வரும்? “இலம் கதி மற்றொன்று எம்மைக்கும்” என்று நினைத்து “நலம் கழல் அடி நிழல்” என்று உறுதியுடன், திடமான மனத்தோடு துளி கூட சந்தேகம் இல்லாமல் பகவான் திருவடிகளில் சரணடைய வேண்டும்.
அர்ச்சாவதார மூர்த்தியாய் ஆலயங்களில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான் காண அரியவன். அவனைக் கண்டு அனுபவிப்பதற்காகவே கலியுகத்தில் அர்ச்சா அவதாரத் திருமேனி. தொடர்ந்து அனுபவிக்க முடியாதபடி, உணர்ச்சி மேலிட்டதால், பரவசம் உண்டானதால், கண்களில் கண்ணீர் என்னும் திரை. பாவியேன் என்ன செய்வேன் என்று வருந்துகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.”ஆலோ” என்பது வருத்தத்தின் மிகுதியை உணர்த்துகிறது. எப்படி பகவானுடைய பெருமைக்கு எல்லையில்லையோ, அவனை அனுபவிப்பதால் உண்டாகும் ஆனந்தத்திற்கும் எல்லையில்லை. கண்ணீர் விடாமலும் இருக்க முடியாது. இப்படிப் பரிகாரம் காணமுடியாத பாபத்தைச் செய்து விட்டேனே! என் செய்வேன் என்று பாடுகிறார். சற்றே இடைவெளி விட்டு கண்களில் கண்ணீர் நிரம்பினால் பரவாயில்லை. அந்த இடைவெளியில் பகவானைக் கொஞ்சமாவது சேவிக்கலாம். அதற்கும் இடமில்லை. இடைவிடாமல் கண்ணீர் பெருகுகிறது. ஆதலால் பகவானை அனுபவிக்கமுடியவில்லை. ஆக, ஆலயம் செல்வதற்கு முன்பே எச்சரிக்கையுடன் உணர்ச்சி வசப்படாமல் இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பகவானை அனுபவிக்க முடியும். பகவான் நம்மைப் பார்க்க வேண்டும். அவன் திருக்கண்கள் நம்மேல் பட்டால் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.

“அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்”
என்று ஆண்டாள் பிரார்த்திப்பது போல் நாமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் கண்களும் பகவானை நன்கு அனுபவிக்க வேண்டும். பகவானின் திருக்கண்களும் நம்மைக் குளிர்ந்து கடாக்ஷிக்க வேண்டும். இந்த அனுபவம் பலம் பெற நாம் முயல வேண்டும்.
எம்பெருமானின் ஸ்வரூபம், ஆத்மகுணங்கள் பற்றிப் பெரியோர்களிடமிருந்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மனம், வாக்கு, செயல் மூன்றையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறார் நம்மாழ்வார். (திருவாய்மொழி 6.5.11).
“சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்
தேவ பிரானையே தந்தை தாய் என்று ……”
சிந்தை, சொல், செயல் மூன்றிலும் ஒன்றுபட்டு பகவானை வணங்க வேண்டும். எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்த மனத்தோடு பகவானை அணுக வேண்டும். நம்மாழ்வார் வழிகாட்டிக் கொடுக்கிறார்.
“மனமும் வாசகமும் செய்கையும் நீதானே” (திரு
வாய்மொழி 8.1.8)
“வாக்கும் மனமும் கருமமும் நமக்கு அங்கதே” (திருவாய்மொழி 9.5.4)
இப்படித் தொழுதால் உணர்ச்சி வசப்படாமல் பகவானை அணுகலாம்.
“தொழும் அத்திசை உற்று நோக்கியே” (திருவாய்
மொழி 6.5.5)
தேவபிரானான எம்பெருமான் அவதாரம் செய்திருக்கும் அத்திசைகளை நோக்கி வணங்கி வாழ வேண்டுமாம்.
“வைகல் நாள் தொறும், வாய்க் கொள் வாசகமும், மணிவண்ணன் நாமமே” (திருவாய்மொழி 6.5.6)
எப்போதும் பகவந் நாமங்களை விடமால் சொல்லிக் கொண்டிருந்தால்“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி 3.3.1)
எல்லாக் காலத்திலும் இடைவிடாது பகவானுக்குக் கைங்கர்யம் பகவத் அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்து, பகவான் திருவடி அடைவோம்.
திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனாக அவதரித்து திருப்பள்ளிக் கொண்டிருக்கும் எம்பெருமானைக் கண்ட தொண்டரடிப்பொடிஆழ்வார் கண்களிலிருந்து பனி அரும்பு- நீர்த்துளிகள் தோன்றியது. பார்வை மறைக்கப்பட்டது.
பகவானை இடைவிடாது சேவிக்க முடியாமல் தவித்த ஆழ்வார் தன்னைப் பாவி -பாக்கியமில்லாதவன் என்று நொந்து கொண்டார்.
எம்பெருமானின் பூர்ண அழகை பாத கமலம் முதல் தாமரை போல் மலர்ந்துள்ள அழகிய கண்கள் வரை, நல் ஆடை, உதரபந்தம், திருமார்பு, கண்டம், திருமுகம், திருமுடி -முழு திருமேனியின் அழகைக் கண்டு ரசித்தார்.
உடல் முழுவதுமே உருகலாயிற்று. பகவானைக் கண்ட பரவசம் -சந்தோஷம். எல்லா அவயங்களும் கட்டுக்கடங்காமல் உருகி நிற்கின்றன.
ஏன் இந்த நிலை என எண்ணிப் பார்த்தார் ஆழ்வார். உண்மை விளங்கியது. ஆயிரவாய் அரவரசன் ஆதிசேஷன் மீது யோக நித்திரை செய்தருளும் திருவரங்கன் எல்லா திக்குகளுக்கும் தன் சம்பந்தம் உண்டாகச் செய்பவன்.
சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் அழகைக் கண்டால் சரீரம் நிறைந்து கரைந்து உருகுவதில் என்ன ஆச்சர்யம்?
ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற காரியங்களைச் செய்யத் தானே மகாவிஷ்ணுவாக அவதாரம். பிரம்ம ருத்ராதி இந்திர தேவர்களைத் தோற்றுவித்து அவர்களிடத்தில் அந்தர்யாமியாக இருந்துகொண்டு உலகத்தை இயக்குகிற அழகே அழகு.
மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மரம், செடி, கொடி வாழ்வதற்கு, அவரவர்கள் புண்ணியம் பாபச் செயல்களுக்குத் தகுந்தவாறு பூமியைப் படைத்தான்.
புண்ணியம் மிகுந்த ஞானிகள் வாழ தேவலோகத்தைப் படைத்தான்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் திசைகளைப் படைத்து, ஒவ்வொரு திøŒக்கும் ஒவ்வொரு தேவதையைப் படைத்தார்.
பகவானுக்கு அங்கங்களாக இருக்கும் இத்தேவதைகளுக்குச் சந்தியாவந்தனம் செய்யும் பொழுது, காலை, பகல், மாலை மூன்று வேளைகளிலும் தேவதா வந்தனம் செய்கிறோம்.
குடதிசை என்றால் மேற்கு திக்கு.மேற்கு திசையில் திருவடியை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறான் அரங்கன்.
குணதிசை என்றால் கிழக்கு திக்கு. கிழக்கு திசையில் திருவடிகளை நீட்டிக்கொண்டு காட்சிதருகிறான். வட திசையில் தன் பின்னழகைக் காட்டுகிறான்.
தெற்குத் திசையில் தன் முன்னழகைக் காட்டி அனுகிரகம் செய்கிறான்.
நான்கு திசைகளிலும் உள்ளவர்கள் பயன் அடையவேண்டும் என்பதே அரங்கனின் திருவுள்ளம். இதோ பாசுரம் (திருமலை 19)
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே
பாராயணம் செய்யும் பொழுது இரு முறை சேவிக்கப்படும் முக்கியமான பாசுரம்.
ஸ்ரீரங்கநாதனின் இவ்வழகைக் கண்டு தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் உடல் உருகுவதில் வியப்பென்ன!
குடதிசை -மேற்கு திசை திருமுடி தரிசனம்.திருமுடியோடு திருமுகம் தரிசனம்.
முடியா@ன!மூவுலகம் தொழுதேத்தும் சீர் அடியானே என்று பாடுகிறார் நம்மாழ்வார். (திருவாய்மொழி 3.8.1)
திருஅபிஷேகம் நடக்கும்போது முடியையும் கிரீடமும் கண்டு மகிழ்கிறோம். திருமுடியும் கிரீடமும் பகவானின் சேஷித்துவத்தை நிரூபிக்கின்றன. பகவான் சுவாமி, நாயகன், தலைவன், முழுமுதற்கடவுள். திருமூர்த்தி சொரூபன் என்பதை நிரூபிக்கின்றன.
திருமுடிக்குக் கீழே திருமுகம். கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று ஸ்ரீஆண்டாள் வர்ணிக்கும் அழகே அழகு.
கிழக்கு திசை திருவடி தரிசனம். உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று பகவானுக்குப் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார். ஆழ்வாரின் குமாரத்தி ஸ்ரீ ஆண்டாள் திருவடியைப் பலவாறு புகழ்கிறார்.
பையத் துயின்ற பரமன் அடிபாடி –
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி-
செம்பொற் கழலடிச் செல்வா
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
துயர் அறு சுடர் அடி என்று கூறும் நம்மாழ்வார் திருவடிகளை தொழுது எழு என்று உபதேசம் செய்கிறார். வண்புகழ் நாரணன் திண் கழல் சேர்ந்தால் உய்யலாம் என்கிறார்.
—————————————————————————————————-
பச்சைமாமலை போல் மேனி, பவளச் செவ்வாய் கமலச் செங்கண்களையுடைய அரங்கனை – அச்சுதா, அமரரேறே, ஆயர் தம் கொழுந்தே, கோவிந்தா, அடியரானார்க்கு இரங்கும் பித்தனே என்றெல்லாம் சொல்லி பகவானைஅனுபவித்த தொண்டரடிப்பொடியாழ்வார் மெய்சிலிர்த்தார். அரங்கனே ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன் என்றார்.
பகவந் நாம சங்கீர்த்தனமும், திவ்யதேச நாம ஜபமும் உய்ய வழி என்று உலகுக்கு அறிவுரை கூறினார்.
வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர் கோன் அமரும் சோலை என்று பாடி, அரங்க மாநகருளானைக் கண்டு களித்தார்.
கரும்பு போல் இனியவன், ஆராவமுதன் அரங்கன் என்று திருநாம சங்கீர்த்தனம் செய்து பக்திப் பரவசமடைந்தார். ஆழ்வார் கண்களில் குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர்த்துளிகள் நிரம்பியது. அக்கண்ணீர் அரங்கனைப் பார்க்கமுடியாமல் தடுத்தது. அரங்கனின் செந்தாமரைக் கண்களையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயழகையும் முன் போன்று தற்போது கண்டு அனுபவிக்க முடியவில்லை. கண்ணீர்த்துளிகள் ரூபத்தில் பாபங்கள் வல்வினைகள் இடைவிடாமல் சுவர் போல் கண்களை மறைக்கின்றன. ஐயோ! என் செய்வேன்? பாவியேனே – கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று கதறுகிறார் – தன்னைத்தானே நொந்து கொள்கிறார். இதோ பாசுரம். திருமாலை 18.
“இனிதிரைத் திவலை மோத எறியும் தன் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும்பு உதிருமாலோ! என் செய்கேன் பாவியேனே?”
குளிர்ந்த காற்று வீசும் காவிரி ஆற்றின் கரை. அலைகளால் உண்டான நீர்த்துளிகள். குளிர்ந்த நீர்ப்பரப்பின் மீது திருக்கண் மலர்ந்துள்ள திருவரங்கன். இக்காவிரிக்கரையே திருப்பாற்கடல் என்று தோன்றுகிறது. இங்கே செங்கோல் செலுத்தும் அரங்கனைக் கண்டு, கை தொழுது, பக்திப் பரவசமடைந்து, கண்ணீர் கண்களில் நிறைந்தது.
அரங்கனாய் அவதரித்த கண்ணனைக் காணும் பாக்யத்தை இழந்தோமேயென்று வேதனையடைகிறார் ஆழ்வார். அர்ச்சா அவதார மூர்த்தியான பகவானைச் சேவிக்கும் போது உணர்ச்சி வசப்படக்கூடாது என்று நமக்கு உபதேசம் என்றே தோன்றுகிறது. பரவசமடைவதும் அதனால் கண்களில் நீர் பெருகுவதும், பகவானைக் காணத் தடுப்பதால், நல்ல பலன்களைக் கொடுப்பதில்லை என்பதுவே உணர்த்தப்படுகிறதோ?
“இனி திரைத்திவலை மோத” என்பதை இனிது இரைத்திவலை மோத – அலைகளில் உண்டான ஒலியோடு கூடிய நீர்த்துளிகள் இனிமையாக வீச என்று பொருள் கொள்ளலாம்.“பரவை” என்றால் கடல். காவிரி நதியைக் கடலுடன் ஒப்பிடுகிறார்.“தண் பரவை மீது” – குளிர்ந்த கடல் போன்ற திருக்காவிரியின் நதிக்கரையில்“தனிகிடந்து அரசு செய்யும் பகவான்”.
“தனி” என்றால் ஒப்பற்றவன், ஒப்பிடமுடியாத திருக்கல்யாண குணங்களை உடையவன், குறைவொன்றுமில்லாதவன், எல்லாம் நிறைந்தவன், உயர்ந்தவன் – பரமபதத்தில் திருமகளுடனும், பூமகளு
டனும், நீளா தேவியுடனும், நித்ய சூரிகளுடனும், முக்தர்களுடனும் கூடி அரசு செய்யும் பகவானே, ஸ்ரீரங்கத்திலும் சயனக் கோலத்தில் கண் வளர்கிறான் என்கிறார்.
விரோதிகளை, அதர்மர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் “தனிப்பெரு நாயகன்”. எல்லோரும் அவனை அணுகலாம்படி சுலபனாய், எளிமையானவனாய், மென்மையானவனாய் அவன் வடிவழகைக் காட்டி மயக்கித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்பவனாய் வீற்றிருக்கிறான். அந்தத் துயரறு திருவடிகளைத்தொழுதால் போதும். அவன் இனிய தாமரைக் கண்களைக் கண்டால் போதும். கொவ்வைப் பழம் போன்ற அழகிய திருப்பவள வாயைக் கண்டு களித்தாலே போதும். பாபங்கள் விலகும். கவலைகளும் துன்பங்களும் துயரங்களும் அகலும். இன்பம் வளரும்.
ஆனால் நம்மில் சிலர் அர்ச்சா அவதாரத் திருமூர்த்தியின் நிற்கும் பாக்யம் பெற்ற போது, உணர்ச்சி வசப்பட்டு கண்களை மூடிக் கொள்கிறோம். கண்களை மூடிக் கொண்டால் எப்படி பகவானின் வடிவழகை அனுபவிக்க முடியும்? கண்களைப் பெற்றிருப்பதே பகவானைக் கண்டு களிப்பதற்குத் தானே? பகவானைக் கண்டால் தானே தம்முள் இருக்கும் இருள் அகலும்.“காண் காண் என விரும்பும் கண்கள்” (மூன்றாம் திருவந்தாதி 35) பகவான் பொன் மேனியைக் காண என் கண்கள் ஆசைப்படுகின்றன என்கிறார் பேயாழ்வார்.
ஆகவே, கண்களை நன்கு திறந்து, பகவானைக் கண்டு அனுபவித்து, திருவடி முதல் திருமுடி வரை, அவன் திருமுகத்தையும், அவன் திருமேனியையும் அவன் திருமார்பில் என்றென்றும் அகலாது வீற்றிருக்கும் தாயாரையும் நம் மனதில் நன்கு பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். தியானம் செய்யும்போது, அந்தத் திருஉருவம் நம் மனதில் தோன்ற வேண்டும். அதுவே கண்கள் செய்யும் பாக்யம் என்று கருதப்படும்.
– தொடரும்.
