By S.Gokulachari
இங்கு இன்னுமொரு ஐயப்பாட்டை வாசகர்களுக்குச் சொல்லிவிட வேண்டும்.ஏகாதசி அனுஷ்டானம் செய்பவர்களில் சில பேர் கேட்கின்ற கேள்வி இது. ஏன் ஏகாதசி என்று இரண்டு நாட்கள் பஞ்சாங்கத்தில் போடப்பட்டு இருக்கின்றன? எந்த நாளை ஏகாதசி விரதத்திற்கு உரிய நாளாக எடுத்துக் கொள்வது?
பஞ்சாங்கத்தில் சிலநாட்களில் ஏகாதசி என்று போட்டிருக்கும்.ஆனால் அடுத்தநாள் சர்வ ஏகாதசி என்று போட்டிருக்கும்.
இங்கு ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.வைஷ்ணவ அனுஷ்டானத்தில் ஏகாதசி என்று போடப்பட்ட நாளில், சிறிதளவு தசமி என்கின்ற முன் திதி கலந்திருந்தாலும், அந்த நாளை ஏகாதசி அனுஷ்டான நாளாகக் கொள்வது இல்லை.
உதாரணமாக ஒரு நாளில் காலை ஆறரை மணி வரை தசமி இருக்கிறது. அதற்குப் பிறகு அந்த நாள் முழுக்க ஏகாதசி இருக்கிறது.
இப்பொழுது ஏகாதசியை எப்படி அனுஷ்டிப்பது என்கின்ற கேள்வி வரும் .சிராத்த திதியாக ஏகாதசி பஞ்சாங்கத்தில் போட்டிருந்தால் , அன்று சிராத்த திதியாக அனுஷ்டிக்கலாம். ஆனால் தசமி கலந்திருந்தால் அடுத்த நாள் தான் ஏகாதசி விரதத்திற்குத் தேர்ந்தெடுப்பார்கள்.
இதைப்பற்றிய பிரமாணங்கள்.
தசமி கலந்த ஏகாதசி அசுரப் ப்ரீதி என்பதை சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.தசமி கலந்த ஏகாதசி அசுரர் களுக்கு ஆயுளும் பலமும் தரும் .இந்த விரதம் பகவானுக்குப் பிடிக்காது என்பது பாத்ம புராணம்.
தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது.பல கேடுகளைத்தரும் என்பது பிரம்ம வைவர்த்தம் தரும் பிரமாணம்.
கருட புராணம், விரதங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருப்பின், ஏகாதசியை விட்டு விட வேண்டும் என்கிறது.
சூரியோதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.அன்று துவாதசி வந்து விடுகிறதே என்றாலும்கூட, அதைப்பற்றிப் பிரச்சனை இல்லை. அன்று ஒரு நாழிகை நேரம் ஏகாதசி இருந்தாலும் போதும்.
ஆனால், தசமி கலந்த ஏகாதசி ஸ்ரீவைஷ்ணவ அனுஷ்டானத்தில் பின் பற்றுவதில்லை.
இந்த அனுஷ்டான வேறுபாட்டினைக் கவனத்தில் கொண்டு, உங்களுக்கு உரிய அனுஷ்டானம் எது என்பதை நீங்கள் உங்கள் குடும்ப ஆச்சாரியரிடம் கேட்கலாம்.இதைக் குறித்து நீங்கள் பெரியோர்களிடம் விளக்கம் பெறுவது நல்லது.
சில நாட்களில் ஏகாதசி திதியே இல்லாமல் இருக்கும் துவாதசி திதியாக கூட இருக்கும் ஆனால் அன்று வைஷ்ணவ ஏகாதசி என்று பஞ்சாங்கம்/ விஷ்ணு ஆலயங்களில் வைஷ்ணவ ஏகாதசி என்று அன்றைய தினம் விரதம் அனுஷ்டிக்க கூறுவார்கள் வைஷ்ணவ ஏகாதசி கணக்கு எப்படி துவாதசி அன்று என்று எனக்கு நெடுநாட்களாக ஒரு சந்தேகம் அதற்கான விளக்கம் தான் இந்த பதிவு.
ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி எப்படி கணக்கிடுகிறார்கள்?
முதலாவது: தசமி அன்று ஒருபோது உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பர். தசமிக்கு நவமி வேதை. தசமி அன்று சூரியோதயம் ஆனபிறகு சிறிது நாழிகை நவமி இருந்தாலும் தசமி விரதம் கிடையாது. அதனால் தசமி விரதம் மறுநாள் ஆகி விடும். இதன் காரணமாக ஏகாதசி அதற்கு அடுத்த நாள் துவாதசியில் வரும். நவமி வேதை இல்லாமலும் சில ஏகாதசி தள்ளிப் போவதுண்டு.
அதன் காரணம்:
துவாதசி திதியை நாலு பாதமாக பிரிப்பர். அதில் முதல் பாதம் ஹரிவாஸரம் என்று பெயர். இந்த ஹரிவாஸர வேளை யில் போஜனம் பண்ணக் கூடாது என்று விதி. அதே நேரம்
துவாதசி பாரணை சூரியோதயத்தில் இருந்து ஆறு நாழிகைக்குள் பண்ண வேண்டும். இந்த ஆறு நாழிகைக்குள் ஹரிவாஸரம் முதல் பாதம் இருக்குமானால் ஏகாதசி திதி இல்லாத அன்று ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி அனுஷ்டித்து மறுநாள் துவாதசி பாரணை. அப்படி பாரணை பண்ணும் அன்று திரயோதசி திதியாகவும் அமையும்.
எனவே ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி அனுஷ்டிக்க முதல் நாள் நவமி கலவாத தசமி இருத்தல் வேண்டும். துவாதசி காலையில் ஹரிவாஸரம் இல்லாமல் இருக்க வேண்டும். சூரி யோதய நேரத்தில் ஹரிவாஸரம் கலந்த துவாதசி இருக்கு மானால் அன்று ஏகாதசி விரதம் இருக்கும்.
மறுநாள் துவாதசி திதி இல்லாத காலத்தில் துவாதசி பாரணை நடைபெறும்.
