திதிகளில் ஆறாவது திதி சஷ்டி திதி. அன்று பெரும்பாலும் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்குவது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதத்தில் தேய்பிறை சஷ்டி திதி அன்று குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் பூஜை செய்து, பசுமாட்டிற்கு உணவு அளிப்பதன் மூலமாக, நம்முடைய பாவங்கள் தொலைந்து, நமக்கு திருமகளின் பேரருள் கிடைக்கும்.“கபிலை பசு வணக்க நாள்” என்று இந்த நாளைச் சொல்லலாம்.கபிலை பசுவின் பெருமை குறித்து மஹா பாரதத்தில் வருகிறது.இந்த கபிலா சஷ்டி நாளிலே, பசுவை அலங்காரம் செய்து வணங்க வேண்டும். அதன் மூலமாக, பற்பல நற்பலன்களும் ,பாங்கான நல்வாழ்வும் கிடைக்கும்.இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வழிபாடு செய்யலாம் .பசுவுக்கு புல்லோ, கீரையோ, பழமோ, தீவனமோ அளிக்கலாம்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் “பசுவுக்கு ஒரு வாயுறை;”
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.(திருமந். 252) என்று திருமூலரும் இந்த உண்மையை உணர்த்துகிறார்.
பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.எனவே கபில சஷ்டி அன்று நீராடி இறைவனை வணங்கி பசுவுக்கு ஏதேனும் உணவு வழங்கி வழிபடுங்கள்.
