சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி “காமதா ஏகாதசி” என்று போற்றப்படுகிறது.காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற் றுகின்ற ஏகாதசி. இந்த ஏகாதசியால் கிடைக்கும் பலன்கள்-
- ஏழு ஜன்மப் பாவம் தீரும்
- ஆன்மா சுத்தமாகும்
- சாபங்கள் தீரும்
4.நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
- தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்.
- தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்.
இந்த ஏகாதசி பலனை புரிந்துகொள்வதற்கு ஒரு கதை உண்டு. ஒருகாலத்தில் நாகலோகத்தில் போகீபூர் என்னும் நகரத்தை புண்டரீகன் என்கிற நாகராஜன் ஆட்சி செய்து வந்தான்.
அங்கு தன் விருப்பப்படி தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு வாழக்கூடிய அப்சரஸ்கள் இருந்தனர். லலிதன் என்ற கந்தர்வனும் லலிதா என்கின்ற அப்சரஸ் பெண்ணும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
லலிதன் கந்தர்வ கானத்தில் சிறந்தவன். அவன் நாகராஜன் சபைக்குச் சென்று பாடினான்.அவருடைய பாட்டு அற்புதமாக இருந்தது. ஆனால் திடீரென்று அவனுடைய எண்ணம் தன் மனைவியான லலிதாவின் மீது செல்லும் பொழுது கவனக்குறைவாக பாட்டில் ஸ்வரம் பிசகி தாளம் தட்டியது.
புண்டரீகன் உடனடியாக மிகுந்த கோபம் கொண்டு‘ நீ காம பரவசனாகி ,சங்கீதத்தை அவமதித்து விட்டாய். எனவே நீ அரக்கனாக போகவேண்டும்‘ என்று சபித்துவிட்டான்.
உடனே லலிதனுக்கு அரக்க உருவம் உண்டாகி விட்டது. அவருடைய வாய் மிகவும் மோசமான முறையில் கோர வடிவம் கொண்டதாக ஆகிவிட்டது. மிகுந்த துயரத்தை அடைந்தான். இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட லலிதா ஓடிவந்தாள். தன் கணவனுக்கு நேர்ந்த சோதனையைக் கேட்டு வருந்தினாள். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்பதை முனிவர்களிடம் கேட்கலாம் என்று காட்டுக்குச் சென்றாள் .
அங்கே சிருங்கி முனிவரைப் பார்த்து நடந்த செய்திகளைச் சொல்லி, இதற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று கேட்க அந்த முனிவர் சொன்னார்:‘ சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசியில் விரதமிருந்து முறையாக எம்பெருமானைப் பாடி, துவாதசியில் அந்தணர்களை அழைத்து தானம் செய்து, அவர்கள் முன்னிலையில் ஏகாதசி பலனை உன் கணவனுக்கு பிராயச் சித்தமாக தத்தம் செய்து கொடுத்தால் , அவன் பழைய உருவத்தில் மீண்டு வரு வான்‘ என்று சொல்ல, அப்படியே அவள் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தாள் .
ஏகாதசி விரதம் ஆரம்பித்து ஏகாதசி முழுக்க எதுவும் உண்ணாமல் எம்பெருமானை நினைத்து அவருடைய மந்திரங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாள் . இரவெல்லாம் கண்விழித்து எம்பெருமானை பாடினாள் . மறுநாள் அந்தணர்களை அழைத்து ஏகாதசி உபவாசத்தின் பலனை கணவரின் சாப நிவர்த்திக்காக அர்ப்பணம் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து அர்ப்பணித்தாள் .
அடுத்த நிமிடம் கணவனுடைய கோர அரக்க உருவம் நீங்கி பேரழகனாக மாறி னான். ஒரு தங்க விமானம் வர அதில் ஏறிக்கொண்டு அவர்கள் மகிழ்வுடன் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். எந்த தோஷத்தையும் நீக்கி மங்கலங் களை செய்யக் கூடியது இந்த காமதா ஏகாதசி என்பது இதில் இருந்து தெரிகிறது.
