27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள் திரு என்கிற அடைமொழியோடு அமைந்த நட்சத்திரங்கள்.
அதைப்போலவே சோமன் என்கின்ற சந்திரன் இருவருக்கும் பொருந்துபவர் “பித்தா பிறைசூடி” என்று சிவபெருமானை சுந்தரர் அழைக்கின்றார் பிறைசூடிய பெருமானாக அவனுக்கு சந்திரசேகரன் என்று பெயர் அதைப் போலவே திருமாலுக்கு நாண்மதியப்பெருமாள் என்று பெயர் உண்டு. சந்திரன் பெயராலேயே தலைச்சங்க நாண்மதியம் என்கின்ற தலமும் பூம்புகாருக்கு அருகே உண்டு.
திங்கட்கிழமையும் கார்த்திகை மாதமும் சேர்ந்தால் கார்த்திகை சோம வாரம் என்று சிவபெருமானுக்கு உரிய விரதமாகச் சொல்லுகின்றார்கள் அதைப் போலவே திங்கட்கிழமையும் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் அது பெருமாளுக்கு உரிய சிறப்பான தினம் என்று கருதப் படுகிறது. சிறப்பான விரத தினமாக இதை அனுஷ்டிக்கின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷ மான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத் திற்கு கிரிவலம் போல பிரதக்ஷிணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் “திரு “என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும். திங்கட்கிழமையும் திரு வோணமும் சேர்ந்த தினங்களாக ஆண்டிற்கு ஓரிரு தினங்கள் வரும்.
இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும்.
முதல்நாள் இரவு திடஉணவு உண்ணக் கூடாது.திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்கள் ,ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அழகான குழந்தை பாக்கியம் கிட்டும். விரத நாள் அன்று சந்திர தோஷம் விலக மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப் பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.
26.12.2022 -திங்கட்கிழமை -சோம ச்ரவணம்
