BY Staff,Alalayadharisanam
ஒருவருடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று சொன்னால், அவர்களுக்கு இஷ்ட தெய்வத்தின் துணையும், குலதெய்வத்தின் துணையும், முன்னோர்கள் ஆசியும் வேண்டும்.
முன்னோர்களின் ஆசி என்பது குலதெய்வத்தின் அருளையும், இஷ்ட தெய்வத்தின் அருளையும் பெற்றுத் தரும் என்பதை மறந்து விடக்கூடாது .
அதனால்தான் எந்த சுப காரியம் செய்தாலும்,” நாந்தி சோபனம்” என்று முன்னோர்களை வரவழைத்து அவர்கள் ஆசி பெறும் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
அவ்வகையில் முன்னோர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கிடைக்கும் சத் கதி பற்றியும் கருட புராணம் போன்ற நூல்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
தென்புலத்தார் வழிபாடு என்று சங்க இலக்கியங்களில் இந்த வழிபாட்டு முறைகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.
தமிழிலக்கிய மரபு என்பது தமிழ் வாழ்வியல் பண்பாட்டு விழுமியங் களின் பதிவு அல்லவா! பிதுரர்களை,”தென்புலத்தார்” என்று அழகாக அழைக் கின்றார்கள் .
முன்னோர்களின் வழிபாடு எத்தனை உயர்வானது என்பதை வள்ளுவப் பேராசான் மிக அழகான குறட்பாவில் விளக்குகின்றார்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை”
என்பது குறள்.
இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம் என்பது இக்குறளின் திரண்ட பொருள்.
இதில் தெய்வம் கூட அடுத்ததுதான். தென் புலத்தில் வாழும் முன்னோர் களுக்கு வழிபாடு செய்வதற்கு முதன்மை தருகிறார் வள்ளுவர்.
ஆகையினால், இந்த நீத்தார் கடன் என்பது பழந்தமிழர் வழக்கத்தில் இருந்து வந்த பழமையான வழியே ஆகும்.
அவர்களை வழிபட்டு அவர்களுடைய வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலம் தங்கள் குலத்துக்கு எல்லா நலன்களும் விளையும் என்பது தமிழர்களின் நம் பிக்கை.
“தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்”(புறநானூறு 9 பொருள்: தென்றி சைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் “தென்புல வாழ்நர்” என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
இன்னொரு செய்தியும் உண்டு.
“ஊன் பொதி பசுங்குடையார்” என்ற புலவர் சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி என்ற அரசனின் வீரத்தைப் பாடும் போது, புதல்வன் என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார்
அவர் பாடிய பாட்டு இது.
“ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன்
இறுக்கும் பொன்போற்
புதல்வர்ப் பெறாஅ தீரும் . .
எம்.அம்பு கடிவிடுதும்,
நும்அரண சேர்மின் ”
என,அற்புதமான பாட்டு.
இந்த மன்னன் ஒரு நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது ஒரு எச்சரிக்கை செய்வானாம். “தான் அந்த நகரை முற்றுகையிடப் போகிறேன். அதனால் சாதுக்களாகிய பார்ப்பன மக்கள், பெண்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், புதல்வர்களைப் பெறாதவர்கள் (அதாவது குழந்தை இல்லாத தம்பதிகள்) இவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று ஒரு எச்சரிக்கை கொடுப்பானாம்.
மற்றவர்களுக்கு சரி;
திருமணமாகாத தம்பதிகளுக்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும்,ஏன் எச்சரிக்கை கொடுக்க வேண்டும்? நாம் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்.”தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் “தென்புலம் வாழ்நர் என்பது தென் திசைக்கண் வாழும் பிதிரர்களைக் குறிக்கும்(தம் குலத்தில் வாழ்ந்து இறந்து போன முன்னோர்கள்)
அருங்கடன் என்றது, அவர்க்குச் செய்யும் நினைவுக் கடன்களைக் குறிக்கும்.
அக்கடனைப் பொன்போற் கருதிப் பாதுகாத்துச் செய்யும் இயல்புடைமைப் பற்றிப் பொன்போற் புதல்வர் என்றார் சங்கப் புலவர்.

ஆக, அந்தக் காலத்தில், ஒருவன் வாழ்ந்து முடிந்த பிறகு, அவருக்கு நீர்க்கடன் செய்ய வாரிசுகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவன் மிகுந்த சிரத்தையோடு தன் முன்னோர்களுக்கு தவறாமல் நீர்க்கடன் செய்ய வேண்டும் என்பதால், அப்படிச் செய்கின்ற பிள்ளைகளை,” பொன்போன்ற புதல்வர்கள் ” என்றார் சங்கப் புலவர் .
இதன் மூலம் ,
1.முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்வது அந்த சந்ததியில் உள்ள பிள்ளைகளுக்கு எத்தனை முக்கியம் என்பதும்,
2.அப்படி நீர்க் கடன்கள் செய்பவர்கள், அந்த குலத்து முன்னோரின் தாகம் தீர்த்துக் காக்கின்றவர்கள் என்றும்,
3.பொன்னுக்கு நிகரானவர்கள் என்றும்,
பழந்தமிழர் கருதியதை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இந்தச் செய்தி காட்டுகின்றது.
எனவே “நீத்தார்கடன்” ஆற்ற வேண்டிய பெருமையைப் புரிந்துகொண்டு, நம் முன்னோர்களுக்கு, வருகின்ற மகாளய பட்சத்தில் ஒவ்வொருவரும் நீர்க்கடன் செய்ய வேண்டும்.
