ஒருவனுக்கு செல்வம் வேண்டும்.
என்ன தான் நீண்ட ஆயுள் இருந்தாலும் செல்வம் இல்லை என்று சொன்னால் வெறும் ஆயுளை வைத்துக்கொண்டு என்ன சொல்வது ?
எனவே செல்வத்தை எல்லோரும் விரும்புகின்றோம்
செல்வத்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் யார்? ஆனால் எல்லோருக்கும் பணம் கிடைத்து விடுவதில்லை. அதற்கும் ஒரு பிராப்தம் வேண்டி இருக்கிறது .
பிராப்தம் இல்லாதவர்களுக்கு என்ன செய்வது?
அவர்கள் தெய்வ பலத்தைத் தான் நம்பி இருக்க வேண்டும்.
நாம் யாரிடமாவது பணம் இருப்பவர்களிடம் கேட்டுப் பெறலாம் என்று நினைப்போம்.
ஆனால் பணம் இருக்கின்ற எல்லோருமே தந்து விடுகின்றார்களா?
ஒருவர் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய பணக்காரர்களிடம் போய் பணம் கேட்கலாம் என்று நினைத்தார். அப்பொழுது சில பேர் யோசனை சொன்னார்கள்.
அவர் வெறுமனே கேட்டால் தர மாட்டார் நீங்கள் தான் கவிஞர் ஆயிற்றே அவரைப் பற்றி நான்கு நல்ல வார்த்தை எழுதிக் கொண்டு போய் படித்துக் காண்பியுங்கள் .அவர் மகிழ்ந்து உங்களுக்கு வேண்டிய பணத்தை தந்து பள்ளிக்கூடம் கட்டுவதற்கு உதவுவார்.
இவரும் தன்னுடைய திறமைகளை எல்லாம் பயன்படுத்தி ஒரு அற்புதமான கவிதையை எழுதி,” மேகங்களுக்கு நிகரானவர் அவர். கடை ஏழு வள்ளல்களில் எட்டாவது வள்ளல் . கர்ணனுக்கு தம்பியாக இந்த நிலவுலகத்தில் பிறந்தவர் .கொடுத்துக் கொடுத்து அவருடைய கரம் சிவந்திருக்கிறது. ஒருவர் அவரிடத்திலே கெஞ்சி கேட்டால் அவர் மகன் கோணாத அளவுக்கு அள்ளி அள்ளித் தருபவர்.”
அப்படியெல்லாம் நிறைய எழுதி அவரிடத்திலே கொண்டு போய் படித்துக் காண்பித்தார். அவர் சந்தோஷமாக கேட்டுவிட்டு, “இப்பொழுது பணம் முடையாக இருக்கிறது. ஒரு மாதம் கழித்து வாருங்கள். நான் ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கின்றேன்”என்று நாசுக்காக சொல்லி அனுப்பி விட்டார்.
அவருக்கு இரண்டு வருத்தம்.
ஒன்று காரியம் நிறைவேறவில்லையே.
இன்னொரு வருத்தம், நல்ல வசதியோடு இருக்கின்ற இவன், எச்சில் கையால் காக்காய் ஒட்டாதவனாக இருக்கின்றானே. இவனைப் போய் நாம் நம்முடைய தமிழால் பாடித் தொலைத்து விட்டோமே”
இது அவருக்கு ஒரு பெரிய பாவமாக தெரிந்தது .
வழியிலே வரும்பொழுது அவர் ஒரு பெரியவரைச் சந்தித்தார் .
அவரிடத்திலே இந்தக் கதையை அவர் சொன்னார் .உடனே அவர் சிரித்தார்
நீங்கள் அமுதனாரை போல போல ஒரு வைராக்கியத்தோடு இருங்கள் இவர்கள் வைத்திருக்கும் செல்வம் இவர்களுடையது அல்ல. செல்வம் என்றாலே ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்குப் போவது என்று அர்த்தம். இவர்கள் எல்லாம் புதைத்து வைத்து செல்வத்தை காக்கும் பேய்கள் . இவர்கள் செல்வத்தால் இவர்களுக்கும் பிரயோஜனமில்லை மற்றவர்களுக்கும் பிரயோஜனம் இல்லை. இந்திரன் சந்திரன் என்றெல்லாம் இவர்களை இனிப் புகழாதீர்கள். நிரந்தர செல்வத்தை உடையவர் நம்முடைய ராமானுஜர் .அவர் சொன்னால் உபய ஐஸ்வரியம் இரண்டையும் தாயாரும் பெருமாளும் தந்து விடுவார்கள்.
எனவே நீங்கள் உள்ளே ஸ்ரீரங்கத்திற்குச் சென்று பெருமாளிடமும் பெரிய பிராட்டியாரிடமும் இறைஞ்சுங்கள் ஒன்றும் தராத ஒருவருக்குப் பாடிய பாடலால் உங்கள் கவிதை வீணாகியது. அதற்குப் பிரதியாக சுத்தமாக நன்றாக வாயை கழுவி விட்டு பெரிய பெருமாளையும் பெரிய பிராட்டி யாரையும் உங்கள் தமிழால் பாடுங்கள். உங்கள் மனோரதம் நிறைவேறும். என்று சொல்லி, அமுதனார் எழுதிய பாடலின் பிரதியை அவரிடத்தில் தந்தார்.அந்தப் பாடல் இது.
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே
நேராக தாயார் சன்னிதி போய் சேவித்து நின்றார்.
தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சொன்னார். அவருடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கியது.
பொதுவாக பணக்கஷ்டங்கள் நீங்குவதற்கு மகாலட்சுமித் தாயாரை வெள்ளிக்கிழமை விளக்கு வைத்து மனம் உருகி வழிபட வேண்டும்.
வீடு முழுக்க தூப தீபங்கள் போட வேண்டும். நல்ல எண்ணங்களோடு திருமகளை விளக்கேற்றி வரவேற்க வேண்டும் .அப்பொழுது இந்தப் பாடலை பாட வேண்டும் .
செல்வத்தின் சீரிடமே திருமகளின் உறைவிடமே
வெள்ளத்தில் துயில்கின்ற வேதப் பரம்பொருளே
அள்ளஅள்ளக் குறையாத அருள் நிதியைத் தந்தருளி
நல்வகையாய் வாழ்ந்திடவே நலம் புரிவாய் நாரணனே
என்று சொல்லி தீபாராதனை காண்பிக்கும் பொழுது
திருமகளே சரணம்
தெய்வ நிதி தரணும்
அருள் முகமே வருக
ஆயிரமாய்த் தருக
அன்பு கொண்டு வருக
ஆருயிரைக் காக்க
என்று பாடி ஸ்தோத்ரம் செய்யுங்கள்.உங்கள் எண்ணம் ஈடேறும்.
