ஜாதக தோஷங்களிலேயே மிகவும் கடுமையான தோஷம், பிதுர் தோஷம் என்பார்கள். மற்ற தோஷங்கள் மிக எளிதான பிராயசித்தங்களுக்கு கட்டுப்படும். ஆனால் பிதுர்தோஷங்கள் அவ்வளவு எளிதாகக் கட்டுப்படாது. அவை குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கி கொண்டே இருக்கும்.
அதற்கு அடையாளமாக எத்தனை முயன்றும் குடும்பம் விருத்திக்கு வராதது,எந்த நல்ல காரியத்திலும் கடைசி நேரத்தில் தடை ஏற்படுவது, திருப்தி இல்லாமல் வாழ்வது, சரியான வருமானம் இல்லாமல் இருப்பது, குழந்தைகளுக்கு உடல்நிலை அவப்பொழுது சீர்கெடுவது, தாம்பத்தியம் முறையாக இல்லாமல் இருப்பது, விவாகரத்து ,அகால மரணங்கள்,அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட விளைவுகள் எல்லாம் பிதுர் தோஷத்தின் விளைவுகள் என்றுதான் சொல்கிறார்கள் .இது தலைமுறை தலைமுறையாகக் கூட சில குடும்பத்தில் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
தெய்வ வழிபாடு இருந்தாலும் கூட இந்த பிதுர் தோஷம் அல்லது பிதுர் சாபம் நீங்காத வரை, இப்படிப்பட்ட இடையூறுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதையும் பார்க்கின்றோம்.
எனவேதான்,எந்த கடனை கழித்தாலும் கழிக்காவிட்டாலும் பிதுர் கடனை கழிக்காமல் விடாதே என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு அமாவாசை அன்றும் எள்ளும் நீரும் இறைத்து தென்புலத்தில் வசிக்கும் முன்னோர்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என்றார் திருவள்ளுவர்.
“தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்”(புறநானூறு 9 பொருள்: தென்றிசைக் கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும் என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தியும் உண்டு.
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.
சிலபேர் கேட்பார்கள்
” நம்முடைய முன்னோர்கள் நமக்கு எப்படி தோஷம் தர முடியும் அல்லது சாபம் தர முடியும்?”
உண்மையில் நம்முடைய முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்கவே செய் வார்கள்.
ஆனால் நீங்கள் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.
நம் வீட்டிலே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.அந்த பெற்றோர்களுக்கும் வயதான தாத்தா பாட்டி அல்லது உறவுகள் ஆகிய இவர்களை, நாம் சரியான முறையில் சாப்பாடு தரவில்லை:கவனிக்கவில்லை அவர்கள் பசியைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
சில குடும்பங்களில் அப்படி நடக்கவும் செய்கிறது அல்லவா?
உடனே நம் மீது அன்புள்ள அவர்கள் நம்மைக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் .”அய்யோ என்னுடைய பையன் இப்படி என்னை பட்டினி போட்டு விட்டானே, அவன் இனி நன்றாக இருக்க மாட்டான்”என்றெல்லாம் ஒரு தாய் சாபம் விடமாட்டாள் .தந்தையும் சாபம் விடமாட்டார் .
ஆனால், அந்த பசியானது அவர்களை வருத்தமடையச் செய்யும் அல்லவா. அந்த வருத்தமானது அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ,அவர் கள் அதை மறந்தாலும் மரக்காவிட்டாலும் தோஷமாக ,சாபமாக மாறி, விளைவித்தவரை தேடும்.
தவறிப்போன கன்று தாய்ப் பசுவை சென்று அடைவது போல அடைந்து விடும்.
திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளில்
ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை என்று வலியுறுத்துகிறார்.
பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக என்பது பாடலின் பொருள்.
ஆனால்,” ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும்” என்று சொல்லும் அழுத்தத்தை கவனிக்க வேண்டும்.எக்காரணம் முன்னிட்டும் பெற்றவர்களை பசியோடு விட்டு விடாதே ,அதுவே உன்னை அழித்துவிடும் என்பதேயாகும்.
தாய்தான் முதலாகக் காக்கத்தக்கவள். எவ்வகையானும் பெற்றவளைப் பேணிக் காப்பது ஒவ்வொரு மனிதனும் இயல்பாகச் செய்வது. அவளுக்கு ஒரு இடர் நேர்ந்தால் அவன் விரைந்து சென்று துயர் துடைப்பான். அவளது பசி காண்டல் என்பது அவனுக்குத் தாங்க முடியாத துயரமாகும். ஈன்றவள் பசியால் வாடிக்கொண்டிருப்பதைக் காண்பது மகனுக்குப் பெரும் இழிவைத் தருவதாகும்.
ஒவ்வொருவரும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் தாத்தா பாட்டி முதலிய பெரியவர்களுக்கும் குடும்பத்தில் இருக்கும் போது உணவும் நீரும் தந்து, நிழல் தந்து தேவையானவற்றைச் செய்து பராமரிக்க வேண்டியது கடமை..
அவர்கள் இறந்து போன பிறகும் அவர்களுக்கு செய்ய வேண்டிய மாத வருச சிராத்தங்களை முறையாக செய்வது கடமை.
இன்னொரு கேள்வியும் உண்டு..
நாம் முறையாக இந்தத் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் அவர்கள் பசி தாகத்தோடு தவிப்பார்களோ என்று சந்தேகம் வரலாம். நிச்சயம் அவர்கள் பசி தாகத்தோடு தவிக்க மாட்டார்கள்.
நம் வீட்டு பெற்றோருக்கு நாம் உணவு இடாவிட்டாலும் அவர்களுக்கு வேறு யாராவது ஒரு அன்னதான கூடத்திலோ இல்ல முதியோர் இல்லத்திலோ அவர்களை பராமரிக்கக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகை யால் அவர்கள் நிச்சயம் பட்டினியால் இருக்க மாட்டார்கள் .சம்பந்தப் பட்டவர்களுடைய குலத்தில் பிறந்தவர்கள் செய்யாவிட்டாலும் மற்றவர்கள் கடைசியாக தர்ப்பணத்தில் எள்ளும் நீரும் தருவார்கள்.
யாருக்கெல்லாம் இன்றைய தர்ப்பணம் முறையாக செய்யப்படவில்லையோ அவர்களுக்கும் இது போய் சேரட்டும் என்பதாகத்தான்(யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத) நம்முடைய மந்திரங்கள் அமைந்திருக்கின்றன.. அதை நினைத்துத் தான் நாம் தர்ப்பணம் செய்கின்றோம்.
அப்படியும் தவற விட்டாலும், இந்த பித்ருக்களை காக்கக்கூடிய சாட்சாத் மகாவிஷ்ணு, தானே வருடத்தில் ஒரு நாள் இந்த சிரார்த்தத்தை செய்கின்றார்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, நென்மேலி கிராமம். அந்தக் காலத்தில் இந்த ஊர் ‘புண்டரீக நல்லூர்’, ‘பிண்டம் வைத்த நல்லூர்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தியாக ‘சிரார்த்த சம்ரட்சண நாராயணர்’ அருள்கிறார்.ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்தவர், ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட யாக்ஞ நாராயண சர்மா. இவரது மனைவி சரஸ வாணி. இவர்களுக்கு நென்மேலி தலத்தில் உள்ள பெருமாளின் மீது அளவுகடந்த பக்தி இருந்தது. அந்த பக்தியின் காரணமாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை ஆலயத்தின் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டனர். இதனால் அவர்களுக்கு அரசாங்கம் தண்டனை வழங்கியது.
தண்டனையை ஏற்க விரும்பாத தம்பதியர் , திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் மூழ்கி தங்களுடைய உயிரை விட்டனர் . அவர்களின் ஈம காரியங்களைச் செய்ய வாரிசு என்று யாரும் இல்லை.
வாரிசு இல்லாத நிலையில் நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள், அந்த தம்பதியருக்கு ஈமக் காரியங்களை செய்ததாக தல வரலாறு சொல்கிறது.
எனவே பகவான் அவர்களை பட்டினி போட்டு விட மாட்டான் .
ஆனால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறுகின்ற பொழுது அதனுடைய பாவ விளைவு தொடர்கிறது.
அதனால்தான் எதை மறந்தாலும் பிதுர்கடனை செய்ய மறக்காதே என்று சொன்னார்கள்பெரியவர்கள்.
அமாவாசையன்று மறந்தாலும்,வருடாந்திர ச்ராத்தத்தை மறந்தாலும் இதற் கென்று இருக்கக்கூடிய சிறப்பான பட்சமான மகாளைய பட்சத்தை மட்டும் மறக்காதே என்று சொல்லி இருக்கின்றார்கள். மறந்தவருக்கு மகாலயம் என்கிற வழக்கு இப்படித்தான் வந்தது.
மஹாளயத்தில் மறக்காமல் முன்னோர்களை முறையாக வணங்குவோம்.
