பெரியவாச்சான் பிள்ளை அவதார தினம் – கிருஷ்ண ஜெயந்தி
Swamy Periyavachan Pillai Avatharam
பாஞ்சராத்திர ஜெயந்தி (pancharatra jayanthi). கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) இரண்டு நாட்களில் கொண்டாடப்படும். முதல் வகையில் கோகுலாஷ்டமி , பொது நிகழ்ச்சியாக எல்லோராலும் கொண்டாடப்படும். இரண்டாவது ஜெயந்தி பாஞ்சராத்திர ஜெயந்தி என்று சொல்லி ,கோயில்களிலும் வைணவர்கள் இல்லங்களிலும் கொண்டாடுவார்கள்.

பல கோயில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம் இருக்கும் .
மாலை, வீதிஉலா இருக்கும். உரியடி உற்சவங்கள் இருக்கும். நேற்று வீட்டில் கொண்டாடிய பலர், இன்று கோயில் விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்த பாஞ்சராத்திர ஜெயந்தி தரும்.
அது மட்டும் இல்லை.
இந்த பாஞ்சராத்திர ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வருகிறது. செவ்வாய்க் கிழமை மங்கள வாரம். சகல மங்களங்களையும் தருகின்ற நாள் .அது மட்டும் இல்லை.
இதே கிருஷ்ண ஜெயந்தி(Krishna jayanthi) அன்று வைணவ ஆச்சாரியார், பெரிய மகான், பெரியவாச்சான் பிள்ளையின் அவதாரமும் நிகழ்ந்தது.
அவர் சாட்சாத் கண்ணனுடைய அவதாரம் என்பார்கள்.
இதற்கு ஒரு பின்னணிக் கதையும் இருக்கிறது. திருவாரூருக்குப் பக்கத்திலே திருக்கண்ணமங்கை (Thirukannamanagai) என்றொரு திருத்தலம் .

மிக அற்புதமாக இருக்கும். அங்கே பெருமாள் பெரிய உருவத்தில் இருப்பார். ஆஜானுபாகுவாக இருப்பார் .பக்தவச்சலப் பெருமாள் என்று பெயர். திருவாரூரில் இருந்து கும்பகோணம் போகும் பாதையில் ஆறாவது கிலோமீட்டரில் இந்த திருத்தலம் இருக்கிறது .
கோயில் வாசலிலேயே இறக்கி விட்டுவிடுவார்கள்.
இந்தப் பெருமாளைச்சேவிக்க 1200 வருடங்களுக்கு முன்னால் திருமங்கையாழ்வார் வந்து மங்களாசாசனம் செய்தார் .
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை,
இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத்து அப்புறத்து
உய்த்திடும் ஐயனை,
கையில்ஆழி ஒன்றுஏந்திய
கூற்றினை, குரு மாமணிக் குன்றினை,
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றினை புனலை சென்று நாடி
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே.
அவர் தமிழில் பாசுரங்கள் பாடப்பாட பெருமாளுடைய முகத்திலே ஒரு சிறு குறிப்பைப் பார்த்தார்.
ஏதோ ஒரு செய்தியை பெருமாள் இவரிடம் சொல்வதாக இவர் மனதில் பட்டது .
பக்தி பாவம் என்பது இதுதான். கோயிலுக்குப் போனால், அங்கே ஆழமான பக்தி செலுத்தினால், அங்கே இருக்கக் கூடிய மூர்த்திகள் நம்மிடம் உரையாடுவார்கள் .
அதைத்தான் உற்று கவனிக்க வேண்டும்.
அங்கே வேறு விஷயங்களைப் பேசக்கூடாது.
அங்கே நம்முடைய கோரிக்கைகளுக்கு பெருமாளே ஏதோ ஒரு விதத்தில் பதில் தருவார் .
சற்று பொறு என்றோ,இதைப் பிறகு தருகிறேன் என்றோ,இல்லை “இந்த விஷயத்தை விட்டுவிடு; உனக்கு சரியாக வராது” என்றோ ,ஏதோ ஒரு பதிலை அவர் நம்முடைய மனதுக்குச் சொல்லுவார் .
அது அவருடைய முகத்தைப் பார்த்தால் தெரியும்.
நம்மிடமே பெருமாள் உரையாடும் பொழுது திருமங்கை ஆழ்வாரிடம் உரையாட மாட்டாரா?
திருமங்கையாழ்வார் புரிந்துகொண்டார்.
என்ன விஷயம்? என்று கேட்க பெருமாள் சொன்னாராம்.
“உம்முடைய பாசுரத்துக்கான அர்த்த விசேஷங்களைக் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது “.
அவர் சொன்னார்.
“அது எப்படிக் கேட்க முடியும்? உன்னுடைய நிலை வேறு. என்னுடைய நிலை வேறு .
நீ அர்ச்சாவதாரத்தில் அசையாமல் இருக்கும் பொழுது எப்படி நேரில் வந்து அர்த்தத்தைக் கேட்க முடியும்? அப்படி நேரில் அர்த்தத்தைக் கேட்கவேண்டும் என்று சொன்னால் ,அதற்கென்று நீங்கள் ஒரு பிறவி எடுத்தால் தான் உண்டு” என்று சொன்னவுடன், பெருமாளும் ,”அதற்கு என்ன, எடுத்து விடுவோம்” என்று சம்மதம் தெரிவித்தாராம். இதைத் திருமங்கையாழ்வார் கண்ணமங்கை பதிகத்தின் நிறைவில் கொடுக்கிறார்.
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று
காத லால்கலி கன்றியு ரைசெய்த,
வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை
வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்
விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கமொன் றேந்திய
கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில்
கற்க லாம்கவி யின்பொருள் தானே.
kaNNamangkaiyuL kaNdu koNdEn enRu *
kAdhalAl kalikanRi urai seydha *
vaNNa oNthamizh onbadhOdu onRivai *
vallarAy uraippAr madhiyam thavazh **
viNNil viNNavarAy magizhveydhuvar *
meymmai sollin veNsangkam onREndhiya
kaNNa! * ninthanakkum kuRippAgil
kaRkalAm * kaviyin poruL thAnE
thirumangkaiyAzhvAr aruLich seydha periya thirumozhi 7-10 – perumpuRakkadal (thirukkaNNamangkai)
இப்படிப் பெருமாள் கூறியவாறு ஒரு அவதாரம் எடுத்தார். அதுதான் பெரியவாச்சான் பிள்ளை திருஅவதாரம்.
கண்ணன் அவதரித்த அதே ஆவணி ரோகிணியில் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்தார் .

அவருக்கு கிருஷ்ணர் சூரி என்று பெயர் .
அவருடைய அவதாரத் தலம் கும்பகோணம் அணைக்கரை பாதையிலே திருப்பனந்தாள் என்கின்ற ஊருக்கு பக்கத்திலே இருக்கிறது .சேங்கனூர் (Senganur) என்பது பிரசித்தி பெற்ற ஊர். சங்கநல்லூர் என்பதுதான் அந்த ஊரின் பெயர்.
அந்த ஊர் சைவத்துக்கும் சிறப்பு வாய்ந்தது.
சண்டேஸ்வர நாயனார் அங்குதான் அவதரித்தார் .
பரனூர் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அண்ணா (Paranur Sri Sri KrishnaPremi Anna)அவர்கள் அவதரித்ததும் இந்த ஊரில்தான்.
அங்கே பஜனை மடங்கள், கிருஷ்ணன் கோயில் என்று பல கோயில்கள் இருக்கின்றன .
மிக அற்புதமான இயற்கை வளம் சூழ்ந்த ஒரு கிராமம் .
அது மட்டும் இல்லை 600 வருடங்களுக்கு முன்னால் பெரியவாச்சான் பிள்ளை(PeriyavachanPillai) தொட்டு பூஜை செய்த அந்த திருவாராதனப் பெருமாளும் காணலாம் .

திருப்பதி பெருமாளைப்போலவே இருப்பார். பெரியவாச்சான் பிள்ளை வழிபட்ட பெருமாள் , சீனிவாச பெருமாள் சன்னதியும் உள்ளது .
அது பெரும் பொருட்செலவில் சீர் செய்யப்பட்டு வண்ணமயமாக காட்சி தருகிறது.
பெரியவாச்சான் பிள்ளை இல்லாவிட்டால் ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு உரை நூல்கள் இல்லாமல் போயிருக்கும் .
அவர்தான் எல்லா ஆழ்வார்களின் நூல்களுக்கும் வியாக்கியானம் periyavachan pillai vyakyanam செய்து கொடுத்தார்
சரி இவர் கண்ணனாக அவதரித்து விட்டார் .
வாக்கு கொடுத்தபடி திருமங்கையாழ்வாரும் அவதரித்து இருக்க வேண்டுமே! இவருக்குப் பாடலின் அர்த்தங்களை எல்லாம் சொல்லி இருக்க வேண்டுமே! உண்மைதான். திருமங்கையாழ்வாரும் அவதரித்தார் .
அவருக்கு “திருக் கலிகன்றி தாசர்” (Thirukalikandri Dasar)என்ற பெயர் .
நம் பிள்ளை(Nampillai) என்ற சிறப்பு மிக்க ஆச்சாரியர்.
அவருடைய மாணவர் தான் பெரியவாச்சான் பிள்ளை. அதாவது திருமங்கை ஆழ்வாருக்கு மாணவராக இருந்து, கண்ணன் அர்த்தங்களைக் கேட்டதாக ஐதீகம். திருமங்கை ஆழ்வார் அவதரித்த அதே கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், நம்பிள்ளையும் அவதரித்தார்.
இப்படிப் பல்வேறு சிறப்பு வாய்ந்த நாளான பாஞ்சராத்திர ஜெயந்தியில் ,நாம் கண்ணனையும் ,கண்ணனுடைய புனர் அவதாரமான பெரியவாச்சான் பிள்ளையையும், திருமங்கை ஆழ்வாரையும், திருமங்கையாழ்வாரின் புனர் அவதாரமான நம் பிள்ளையையும் நினைத்துக் கொள்கின்றோம். அப்படிப்பட்ட மகத்தான நாளிலே சாயங்காலம் விளக்கேற்றி இந்த ஆசாரியர்களையும் கண்ணனையும் நினைத்து நாம் வணங்க வேண்டும்.
இயன்ற ஸ்தோத்திரங்களைச் சொல்ல வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பண்ணுவது சிறந்தது. இதன்மூலமாக கண்ணனுடைய பேரருளைப் பெறமுடியும்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இயற்றிய ஸ்ரீ பிரபந்த ராமாயணம் பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

