என்ன கிடைக்காது நவராத்திரியில் ? Why Navaratri? Benefits of Navaratri – Golu Dolls
ஒரு காலத்தில் இந்த நவராத்திரி விழா எத்தனைச் சிறப்பாக கொண்டாடப் பட்டது ?
ஒவ்வொரு தெருவிலும் ஓரிருவர் கொலு வைப்பார்கள்.அந்த பொம்மைகளை காண பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.அந்த வீட்டில் பிள்ளைகள் குதூகலமாக கூடுவார்கள். ஆர்ப்பாட்டமாக இருக்கும்.
பாட்டு, நடனம், மந்திரம்,பிரசாதம் என்று பல பல விஷயங்கள்.
ஏழு ஏழரை மணிக்கு பூஜை செய்து நிவேதனங்களை தொன்னையில் தருவார்கள்.
அதை பிள்ளைகள் சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.
அதேபோல கோயிலுக்குச் சென்றாலும் விதவிதமான அலங்காரங்களோடு சுவாமி தரிசனம் செய்யலாம்.
அங்கேயும் பிரசாதம் கிடைக்கும்.
அனேகமாக காலாண்டு தேர்வு முடிந்த நேரம்.

அந்த காலத்து பிள்ளைகள் மிக சந்தோஷமாக இந்த நவராத்திரி விடு முறையை கழிப்பார்கள்.
மகா பெரியவர் நவராத்திரி கொலு என்றால் மிகவும் ஆனந்தம் அடைவார். அப்பொழுது அவரிடம் குறைகளைச் சொல்லி பிராயச்சித்தம் கேட்டு வந்தால், உடனே காமாட்சி அம்மன் கோவிலுக்கு அனுப்புவார் .“அந்த அம்பாளைப் பார்த்து விட்டு வா.எல்லாம் சரியாகப் போய்விடும்” என்பார்.
அவர் சொல்வது உண்மைதானே.
நம் குறைகளைக் கேட்பதற்குத் தானே என்று கோயில்களில் சுவாமிகள் காத்திருக்கிறார்கள். குறை தீர்க்கும் நாள் போல இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு கோயில்களில் இறைவனும் இறைவியும் காத்திருப்பதாக ஐதீகம்.
நவராத்திரி என்பதை நவ+ ராத்திரி என்று பிரிக்கலாம். நவம் என்பதற்கு புதுமை, நட்பு, பூமி, ஒன்பது, கார்காலம் என பல பொருள்கள் உண்டு.
ஒன்பது ராத்திரிகள் செய்யவேண்டிய வழிபாடு அல்லது ஒன்பது நாள் இருக்க வேண்டிய விரதம் என்ற பொருளில் இந்தச் சொல் அமைந்துள்ளது.
நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும். அடுத்து பிரதமையில் ஆரம்பித்து முதல் எட்டு நாட்கள் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவுகளை ஏற்கலாம். இந்துக்கள் விரதத்தில், முழுமையாக பட்டினி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய பெரியவர்கள் நிச்சயமாகச் சொல்லவில்லை. இருந்தால் நல்லது. முடியா விட்டால், சில எளிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைத் தொடரலாம்.
இன்று நவராத்திரி பூஜை ஆரம்பம்.காமதேனு பூஜை செய்து கொலு வைக்க உத்தமம். இன்று இன்னொரு விசேஷமும் உண்டு.தௌஹித்ர பிரதிபட் என்று சொல்வார்கள். தாத்தா பெண்வழி பேரன் பேத்திகளுக்கு பரிசு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும் நாள்.

9 Days For Ambal – Navaratri – Importance – Speciality – Gollu Dolls
9 நாட்களும் அம்பாளுக்கான பிரத்தியேகமான நாட்கள் என்பதால் அம்பிகைக்குரிய சுலோகங்களை, இசைப் பாடல்களை வாசிக்கலாம். புராணங்கள் வாசிப்பவர்கள் தேவி பாகவதம் பெரும்பாலும் படிக்கிறார்கள். இது தவிர ராமாயணம் மகாபாரதம் படிப்பதாலும் ஒன்றும் தவறு இல்லை. அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், லஷ்மி சகஸ்ரநாமம், ஸ்ரீ சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, துர்கா அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் போன்ற எண்ணற்ற அம்பாள் வழிபாட்டு மந்திரங்களையும்,அம்பிகையின் மீது இயற்றப்பட்டஎளிமையான பாடல்களையும் பாடலாம்.
குழந்தைகளுக்கு எளிமையான சுலோகங்களைச் சொல்லித் தந்து, அவற்றை நவராத்திரியில் பாடச்சொல்லி, பரிசுகள் வழங்கலாம். கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களுடைய கலைத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்க்கலாம். இது குழந்தைகளின் திறனை மட்டுமல்லாது அம்பிக்கையின் ஆசிகளையும் அள்ளித்தரும்.
நவராத்திரி பண்டிகை பல விதமாக கொண்டாடப்படுகிறது. ஆனி ஆடி மாதங்களில் வருவது வராகி நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் நவராத்திரி உண்டு. அதற்கு வசந்த நவராத்திரி என்று பெயர். ஆனால் புரட்டாசி மாதம் வருகின்ற நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். தென்னகத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரியாகிய புரட்டாசி நவராத்திரி. இக்காலங்களில் தினசரி மாலையில் அம்பிகையை பூஜை செய்து ஸ்தோத்திரங்கள் பாடி வழிபாடு நடத்த, கல்வியும் செல்வமும் வீரமும் பெற்று சகல துறைகளிலும் முன்னேற்றமான வாழ்வு பெறலாம்.
நவராத்ரி விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் என்பதை விட என்ன கிடைக்காது என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.நம் மனோரதங்கள் அத்தனையும் நிறைவேறும்.பதினாறு பேறுகளும் கிடைக்கும். அது என்ன பதினாறு பேறு ?
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!

kalaiyaadha kalviyum kuRaiyaadha vayadhumOr
kapatu vaaraadha natpum
kandraadha vaLamaiyung kundraadha iLamaiyum
kazhupiNiyilaadha utalum
saliyaadha manamum anpu akalaadha manaiviyum
thavaRaadha sandhaanamum
thaazhaadha keerththiyum maaRaadha vaarththaiyum
thataikaL vaaraadha kotaiyum
tholaiyaadha nidhiyamum kONaadha kOlum oru
thunpamillaadha vaazhvum
thuyya nin paadhaththil anpum udhavi periya
thoNtarotu koottu kaNtaai
alaiyaazhi aRidhuyilu maayanadhu thangaiyE!
aadhikata voorin vaazhvE!
alaiyaazhi aRidhuyilu maayanadhu thangaiyE!
aadhikata voorin vaazhvE!
amudheesar orupaakam akalaadha sukapaaNi!
aruLvaami! apiraamiyE!
amudheesar orupaakam akalaadha sukapaaNi!
aruLvaami! apiraamiyE!
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
நவராத்திரி மேலே சொன்ன அத்தனையும் தரும்.




