வட நாட்டு திவ்யதேச புனிதப் பயண அனுபவம்
உடையவர்தாஸன், விஜயரெங்கபுரம்.

நிதி வனத்தில் பேரரசர் அக்பர் மற்றும் புலவர் தான்சேன்(Nidhivan – King Akbar):
முகலாய பேரரசர் அக்பர் அரசாண்ட காலத்தில் ஸ்ரீ ஹரிதாஸ் சுவாமி என்ற இசைஞானி தவம் இருந்து வந்தார். இவருடைய அரசவைப் பாடகர் தான் தான்சேன். தான்சேன் இசையில் மயங்கிய அக்பர் ,”உம்முடைய பாடல் அபாரமாக இருக்கிறது. உம்மைப்போல் பாடுவதற்கு இந்த உலகத்தில் பாடகரே கிடையாது” என்று புகழ்ந்தார்.
அப்பொழுது தான்சேன் சொன்னார்.
“அரசே! என்னுடைய பாடலை நீங்கள் புகழ்கிறீர்கள் .என்னுடைய இசையின் குரு ஸ்ரீ ஹரிதாஸ் சுவாமி பிருந்தாவனத்தில் வாழ்ந்து வருகிறார். .அவரிடம்தான் நான் இசை கற்றேன். அவர் என்னைவிட எத்தனை சிறப்பாகப் பாடுவார் என்பதை நீங்கள் ஊகிக்கலாம்.”
உடனே அக்பர் சொன்னார்.
“அப்படியானால் அவரை நம்முடைய அரசவையில் பாட வைக்கலாமே, அழைத்து வாருங்கள்.”
தான்சேன் சொன்னார் .
“சுவாமி! அவர் எதற்கும் ஆசைப்படாதவர். துறவி. அவர் இங்கு வர மாட்டார்”
“அப்படியானால் நாம் அவரை நேரில் சென்று பார்ப்போம்” என்று அக்பர் தான்சேனை அழைத்துக்கொண்டு ஸ்ரீ ஹரிதாஸ் சுவாமியை தரிசிக்க பிருந்தாவன் வந்ததாகவும், அவரிடம் ஆசி பெற்றுச் சென்றதாகவும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது .

சேவா குஞ்(Seva Sanj):
குஞ் என்றால்அழகிய தோட்டம் என்றும், தமிழில் நிகுஞ்சனம் என்றால், செடி கொடிகளால் வேயப்பட்ட புதர் வீடு என்றும் பொருள் .நிகுஞ்ச் என்றால் இதயத்தில் இருப்பவர் (ஸ்ரீ கிருஷ்ணன்) என்ற பொருளும் உண்டு.
இவ்விடம் நிதி வனத்திற்கு அருகிலேயே உள்ளது. அழகான செடி கொடிகள் நிறைந்து பார்ப்பதற்கு மிக ரம்மியமாகப் பராமரிக்கப்படுகிறது. .கேசவன் ஆகிய ஸ்ரீ கிருஷ்ணனுடன் கோபியர்கள் குரவைக் கூத்து என்ற ஒரு வகை நடனத்தை தினமும் ஆடும் இடமாக இந்தத் தோட்டம் சொல்லப்படுகிறது.
எனவே, விளையாட்டுக்கான அழகிய தோட்டம் என்ற பொருளில் சேவாகுஞ் என்று அழைக்கப்படுகிறது.
இதை நிகுஞ்சவனம் என்றும் அழைக்கின்றனர் .
குரவைக் கூத்து என்பது ராசக் கிரீடை தான் விளையாட்டு .இதில் ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கிருஷ்ணன் என்ற அமைப்பில் ஒவ்வொருவர் தோளிலும் தோள்சாற்றி, வட்டமாக நின்று ஆடும் விளையாட்டு. இந்த லீலையை கிருஷ்ணன் நிகழ்த்தியபோது அவருக்கு வயது எட்டு.

ராதா தாமோதர மந்திர்(Radha Thamodhara mandhir):
மந்திர் என்றால் கோயில். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தாமோதரன் என்ற பெயர் உண்டு .அது தாம்பு + உதரன் என்ற வார்த்தையின் இணைப்பு. தாம்பு என்றால் கயிறு .உதரம் என்றால் வயிறு.
வயிற்றில் கயிறு கட்டிய தழும்பு உடையவன் தாமோதரன். பாலகிருஷ்ணனின் சேட்டைகளை பொறுக்க முடியாததால் யசோதை அவனை உரலில் கட்டுகிறாள். அந்த உரலை இழுத்துக் கொண்டு அவன் அசைந்து அசைந்து செல்லுகிறான்.

அப்பொழுது அவன் வயிற்றில் கட்டிய கயிறு அழுத்தமாக ஒரு தழும்பை ஏற்படுத்துகிறது. அந்த தழும்பை அவன் விரும்பியே ஏற்றுக்கொள்வதால் அவனுக்கு “தாமோதரன்” என்ற பெயர் .
இந்த இடத்தில் அமைந்த கிருஷ்ண விக்ரகத்தில் ரூப கோஸ்வாமி என்பவர், தன் கரங்களால் வயிற்றில் தழும்பு உள்ளது போல் அமைத்து, அதை ஜீவ கோஸ்வாமி என்பவரைக் கொண்டு கிபி 1542 இல் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு ராதையும் தாமோதரனும் அருள்பாலிக்கின்றனர் .
ஸ்ரீ ரங்கஜி மந்திர் (Sri Rangaji mandhir):
ஸ்ரீ ரங்கஜி மந்திர் என்றால் ஸ்ரீ ரங்கநாதர் கோவில். இக்கோயில், விருந்தாவனத்தில் அமைந்த கோயில்களில் மட்டும் பெரியதல்ல. வட இந்தியாவிலேயே அமைந்த தென்னிந்திய அமைப்பிலான பெரிய கோயில் இது. 1851 இல் கட்டப்பட்டது .
பல கட்டிடக் கலைகள் கலந்து அமையப்பெற்றிருக்கும் கோயில் இது . நுழைவாயில் ராஜபுத்திரக் கலை, கோபுரங்கள் தமிழ்நாட்டு கலை, பிரகாரங்களும் தூண்களும் இத்தாலியக் கலையின் சாயல் என்ற கலவையான அமைப்பில் ஆலயம் உள்ளது.





