தைப்பூசம் வருகின்றது. தைப்பூசம் அப்படின்னு சொன்னாலே நாம் வணங்கும் தெய்வங்களில் , வேல் பிடித்த முருகன் முன்னால் வந்து நிற்பான். முருகன் என்றால் அழகன் அல்லவா. அந்த அழகனை நினைத்தாலே , நமக்கு அவன் மீது காதல் பிறக்கும். அந்த காதலை அப்படியே சாறுபிழிந்து ஒரு அற்புதமான பாடலாக்கி தந்திருக்கிறார் கவிஞர் என்எஸ் சிதம்பரம் .அவர் நிறைய பக்திப் பாடல்களை எழுதி இருக்கிறார். அந்தப் பாடல்களை எல்லாம் புகழ்பெற்ற பாடகர்களான டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் பாடி இருக்கிறார்கள். இப்பொழுது இன்றைய பாடல் முருகனைப் பற்றிய பாடல். இந்த பாடலை நீங்களே பாடலாம். இல்லை இதை போட்டு கேட்கலாம். ஒருவிதமான தெய்வீக உணர்வு உங்களுக்கு இந்த பாடலை கேட்கும் பொழுது வரும். அப்படியே அந்த முருகனோடு இணைந்து நாம் பத்தியின் கிறக்கத்தில் மகிழ்வது போல தோன்றும். இந்த பாடலை பல முன்னணி சங்கீத வித்வான்கள் பாடியிருக்கிறார்கள். அழகான முருகன் எப்படியோ அப்படியே இந்த ராகமும் அழகாக இருக்கும். மனதைக் கவ்வும். என்ன ராகம் என்று கேட்கிறீர்களா? மதுவந்தி.
மதுவந்தி ஒரு ராகத்தின் பெயர். இது வடமொழிச் சொல். இதற்கு தேனைப் போன்ற இனிமையானது என்று பொருள். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும்.
இந்த ராகத்தை ‘துக்கடா’ என்று அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவர்.ஆரோகணம்: ஸ க ம ப நி ஸ
அவரோகணம்: ஸ நி த ப ம க ரி ஸ
இந்த ராகத்தை புரிந்துகொள்வதற்கு ஒரே ஒரு வரி இளையராஜா இசை அமைத்த பாடலிலிருந்து பாடி காட்டுகிறேன் இதனுடைய தொடக்கத்தில் வருகின்ற அந்த வயலின் இசையானது அவ்வளவு அற்புதமாக இந்த ராகத்தின் அத்தனை பரிமாணங்களையும் காட்டும்
வானவில்லே – ரமணா – இளையராஜா
அதைப்போலவே இளையராஜாவின் மகன் இதே ராகத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அமைத்தவர் பாடலையும் நம் பாடி காட்டுகின்றேன் அதுவும் அழகாகவே இருக்கும்
கனா காணும் – 7ஜி ரெயின்போ காலனி – யுவன் ஷங்கர் ராஜா. இது ராகங்களை புரிந்து கொள்வதற்காக அல்லது அறிமுகப்படுத்துவதற்கு.
சரி இந்த பாட்டுக்கு வந்து விடுவோம். முருகனை நம்முடைய மனக்கண்ணில் கொண்டு வரும் இந்த பாட்டை நீங்கள் பூஜையறையில் தினசரி பாடலாம்.
இந்த பாடலின் பொருள் இனிமையானது.ஒரு பெண்ணின் காதல் அவஸ்தையை சொல்வது இந்தப் பாடல். என்றைக்கு முருகனை பார்த்தேனோ அன்றைக்கே என்னுடைய மனதில் காதல் பெருகிவிட்டது. அவன் சிவபாலன். கருணை மிகுந்தவன். நம்மை காப்பதற்காக கையில் வேல் பிடித்து இருக்கிறவன். அல்லது நமக்கு ஞானத்தை தருவதற்காக கையில் வேல் பிடித்திருக்கின்றவன்.
நான் ஒருநாள் பூங்காவில் இருந்தேன். என்னை போலவே வண்டுகள் எல்லாம் அங்கே பாடிக் கொண்டிருந்தன. அது எழில் வசந்த பூங்காவில் டக்கென்று கந்தன் வந்தான். அழகான சுகம் தந்தான். அப்போது பார்த்தேன். அப்போதிலிருந்து மனம் அவனை விட்டு விலகவே இல்லை.
காதலன் வருகின்ற பொழுது ,அவன் நிறுத்தியது- அவன் பார்த்த பார்வை- அவன் சிரித்த சிரிப்பு அவ்வளவும் நம்மை விட்டு நம் மனதை விட்டு விலகாதல்லவா.. இதைதான் சரணத்தில் சொல்லுகின்றார்.
அவன் எந்த வாகனத்தில் வந்தான் தெரியுமா.. நீலமயில் மீது வந்தான். என் மீது பாசம் வைத்து வந்தான். அவன் எந்தக் கோயிலில் இருந்து வந்தானோ தெரியவில்லை. இப்பொழுது என்னுடைய மனக் கோயிலிலே வந்து குடிகொண்டு விட்டான். ஏன், எனக்கு மலர் மாலையும் சூட்டி விட்டான். எப்படி சூட்டினான் தெரியுமா அழகான புன்னகை காட்டி நறுமணமிக்க மாலையை எனக்கு சூட்டி விட்டான். இப்படி கண்ட அந்த கந்தனை, முருகனை, சிவபாலனை, எப்படி மறக்க முடியும்? இந்த பாட்டை கேட்டால் உங்களாலும் முருகனை மறக்க முடியாது…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை (கண்ட)
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட)
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரர் மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டிவிட்டார் (கண்ட)
