by உருப்பட்டூர் ஸ்ரீ உ.வே.சௌந்தர்ராஜன், சென்னை
வைத்யோ நாராயண ஹரி: என்று சொல்கிறார்கள் .பகவான் ஹரியை நம்பினால், நோய் வராது.எம பயம் இருக்காது.
உடலுக்கு வைத்தியம் செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு வியாதிக்கும் தனித்தனி வைத்தியர்கள் வேறு இருக்கிறார்கள். பல் வைத்தியரிடம் முழங்கால் வலிக்கு வைத்தியம் செய்து கொள்ள முடியாது.
தவிரவும் உங்கள் வியாதியைக் குணப்படுத்துவேன் என்று சொன்ன வைத்தியர்களுக்கும் வியாதி வந்து நமக்கு முன்னாடியே போய்ச் சேர்ந்த அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதைப்போல நமது ஆயுள் பலம் புத்திரபாக்கியம், புகழ், பணம் இவைகளை ஜாதகத்தை அலசி ஆராய்ந்து சொன்ன ஜோசியர்கள், அவர்கள் ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்ச் சேர்ந்ததும் பார்க்கிறோம். நமக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து பண்டிதன் ஆக்குகிறேன் என்று சொன்ன ஆசிரியர்கள், நம்மை பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்து இருக்கிறார்கள்.
ஆதலால் இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது வைத்தியர்க்கும் வைத்தியர்,ஜோசியர்க்கும் ஜோசியர் , ஆசிரியருக்கும் ஆசிரியர்,பந்துக்களில் மிக உன்னதமான பந்து நாராயணன் என்று சொல்லப்படுகின்ற ஹரி தான் என்று நிச்சயமாகிறது.
உடலுக்கு மட்டும் அவன் வைத்தியன் அல்ல .உள்ளத்துக்கும் வைத்தியன்.
அவன் எப்படி நம் உள்ளத்தில் பெரிய சிம்மாசனம் போட்டு அலங்கரித்து ஏற்றி வைப்பது?
எளிதான வழி உண்டு.
சதா சர்வ காலமும் அவனை ஸ்மரித்தால் அவன் ஆனந்தமாக நம் உள்ளத்தில் குடியேறி விடுவான் .பிறகு மனதில் கஷ்டமே இருக்காது.
மன வியாதியை போக்குபவன் அவனே.வைத்தியோ நாராயண ஹரி:
எம பயம் நீங்கவும் அவன் தான் துணை.
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு சமயம் உபன்யாசம் செய்தபோது சொன்னார்.
தெற்கே பார்த்தவண்ணம் சுவாமி சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜராகவும் . ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனாகவும் சேவை சாதிக்கிறார்கள்.
ஒருவர் சதா நடனமாடிக் கொண்டிருக்கிறார் .இன்னொருவர் சதா யோக துயிலில் இருக்கிறார். இவர்களை அண்டியவர்களுக்கு எமபயம் கிடையாது.
ஏனென்றால் தெற்கே பார்த்துக்கொண்டு எமனிடம் இருந்து அடியவர்களை காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அந்த உபன்யாசத்தின் சுருக்கம்.
பகவானை நினைக்க எம பயம் இல்லை.
