சுவாமி ராமானுஜருக்கு எண்ணற்ற சீடர்கள். அதில் சிலர் அவர் மிகவும் ஆதரித்த, (விரும்பிய) சீடர்களாக திகழ்ந்தனர் அதுவும் தம்பதி சமேதராக அவருடைய மனதுக்கு உகந்த சீடர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர் வில்லிதாசரும் அவருடைய தேவியார் பொன்னாச்சியாரும். வில்லிதாசரை மடைமாற்றம் செய்து வைணவத்திற்குத் திருப்பியவர் சுவாமி ராமானுஜர்.
அவருக்கு தனுர் தாசர் என்று ஒரு பெயர். பிள்ளை உறங்காவில்லி தாசர் என்றும் அவரைச் சொல்வர்.
உறையூரை அப்போது ஆண்ட அகளங்க சோழனிடம் அந்தரங்க பாதுகாவலர். (செக்யூரிட்டி). ஊர் திருச்சி பக்கத்தில் திருவெள்ளறை .
சுவாமி ராமானுஜர் வில்லிதாசரிடம் மிகுந்த அன்பு கொண்டவர் .
பிள்ளை உறங்காவில்லி தாசர் ராமானுஜர் இட்ட பணிகளை எல்லாம் தப்பாது செய்துவந்தார்.அந்தத் தம்பதிகளை போல வைணவத்தில் பாகவதர்களிடத்திலேயே அன்பும் அபிமானமும் உள்ளவர்களைக் காண்பது அரிது .
ஒருமுறை பொன்னாச்சியாரிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.
“எத்தனையோ குருமார்கள் இருக்கிறார்கள். ஆனால் ராமானுஜருக்கு மட்டும் இத்தனை சீடர்கள் இருக்கிறார்களே, என்ன காரணம்?
இதற்குப் பதில் சொல்லாமல் ஒரு அடையாளமாக தன்னுடைய கூந் தலை ஒரு சிவப்பு கயிற்றால் கட்டினார்.
“கற்றுத் தருவதற்கு ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் அனைத் தையும் ஒழுங்குபடுத்தி ஒன்றாக்கி ஒற்றுமையாக்கிக் கற்றுத் தரும் வல்லமை படைத்தவர் எம்பெருமானார் “என்பதைச் சொல்லாமல் சொன்னாள் .
ஸ்ரீ ரங்கத்தில் உபய காவேரி வாசன் என்றால் பெருமாளைக் குறிக்கும்..உபய காவேரி என்று சொன்னால் இரண்டு பக்கமும் காவேரி .
வைணவ மரபில் கொள்ளிடம் நதியை வட திருக்காவேரி என்றும், காவிரியை காவிரி என்றும் தான் சொல்லுவார்கள்.
பெரும்பாலான ஆசாரியர்கள் வடதிருக்காவிரியில் அனுஷ்டானங்களைச் செய்துவிட்டு வருவார்கள். எம்பெருமானார் மடமும் கோயிலின் வடக்குப் பக்கம் இருந்ததால் அவர்களுக்கு அனுஷ்டானம் செய்ய வட திருக்காவேரி மிகவும் அருகாமையில் இருந்தது.
அங்கே ஆளவந்தார் நீராடிய கட்டம் ஒன்று உண்டு. அதற்கு ஆளவந்தார் படித்துறை என்று பெயர். அதற்கு சற்று கிழக்கே( காரணம் ஆளவந்தார் நீராடிய நீர் கிழக்கே போகும் அல்லவா) ஒரு படித்துறை உண்டு. அங்குதான் எம் பெருமானார் நீராட்டம் அனுஷ்டானங்களை செய்வதற்கு வருவார்.
தவராசன் படித்துறை என்று பெயர். பன்றியாழ்வான் சன்னதிக்கு அருகே இருக்கிறது.
ராமானுஜர் தனது எண்பதாவது வயதில் அந்தத் துறைக்குச் செல்லும் பொழுது, எம்பார் தோள் மீதும் முதலியாண்டான் தோள் மீதும் கை போட்டுக் கொண்டு செல்வாராம். அப்பொழுது பாதுகாப்புக்காக மற்ற சீடர்களுடன் வில்லிதாசர் செல்வார். எம்பெருமானார் மற்றும் அவருடைய சீடர்கள் நீராடிய பிறகு அந்த நீரில் நீராட வேண்டும் என்று காத்திருப்பார்.
ஆனால் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்ட ராமானுஜர் உடனே வில்லி தாஸர் தோளில் கையை வைத்துக்கொண்டு மடத்திற்கு திரும்புவாராம்.
போகும்போது அந்தண சீடர்களான முதலியாண்டான், எம்பார் போன்றவர்கள் தோள் மீது கையைப் போட்டு செல்லும் எம்பெருமானார்,நீராடியபின் வரும்போது வில்லி தாசரின் தோள்மீது கையைப் போடுகிறார். இது என்ன ஆசாரம் என்று இவர்கள் எல்லாம் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது எம்பெருமானார் விளக்கம் சொன்னார் .
“மனிதர்களாகப் பிறந்தவர்கள் எப்படித்தான், என்னதான், மனக் கட்டுப் பாட்டோடு இருந்தாலும், அவர்கள் தாங்கள் பிறந்த குலத்தின் உயர்வை பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு விதத்தில் அது அவர்களுக்கு ஆத்ம நாசத்தை தந்துவிடும். உயர்ந்த குலத்தில் பிறந்தோர் என்கின்ற எண்ணத்தை மனதால் கூட நினைக்க கூடாது என்பதால்தான் வில்லிதாசரின் தோளின் மீது கையைப் போட்டு கொண்டு வருகிறேன்”
எது எப்படி இருந்தாலும் அந்தக் காலத்திலே வைஷ்ணவர்களுக்குள் ஜாதி பேதங்கள் இல்லை. அவை பற்றிப் பேசுவது முறை இல்லை. அதை வெறும் சொல்லால் மட்டும் கடைபிடிக்காமல் செயலாலும் கடைபிடிக்க வேண்டும் என்பதை காட்டியவர் சுவாமி ராமானுஜர் என்பதை மறந்துவிடக்கூடாது.
பிள்ளை உறங்கா வில்லிதாசர் திருநக்ஷத்ரம்: மாசி, ஆயில்யம்
பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம்
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே
