சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம்.
1.எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன்
2.ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன்.
3.ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்.
4.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
5.போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன்.
6.ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் மற்றும் அழித்தல் ஆகிய ஐவகைத் தொழிலையும் செய்பவன்.
7.ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்.
8.முக்கண் முதல்வன்
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றி பல செய்திகள் உண்டு.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப் பெறுகிறது. சிவவழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடுநெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக்கூறப் பட்டுள்ளது . சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான்.ஆதிரையான்,ஆலமர் செல்வன், ஆனேற் றுக் கொடியுடையான், ஈசன்,ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,மணிமிடற்றன், முக்கட்செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.
சிவன் பெருமை பேசும் சங்க இலக்கியம் எட்டுத்தொகை.எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில் சிவ பெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி, கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்னமேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.
வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவ பெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும். இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான் – (பரி.5, 25-27)
அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்தஎரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதைஎட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற் றண்ணல் – (பரி. 9, 6-7)
ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்தசெய்தியை,
ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்– (கலி – 81)
ஆலமர் கடவுளன்ன நின் செல்வம் – (புற – 198)
என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள்என்றும், இராவ ணனை அடக்கியவன் என்றும், பிறைஅணிந்தவன் என்றும், உமையொரு பாகத் தவன் என்றும் எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன.
அகழ்வாராய்ச்சிகளும் சிவ வழிப்பாட்டின் தொன்மையை எடுத்துரைக் கின்றன. சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் உள்ள சிவலிங்கங்கள், எகிப்து நாட்டுப் பழைய கல்லறைகளில் சிவலிங்க உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தமை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். .வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகே யுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப் பட்டுள்ளது. இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப் பட்டுள்ளது. அலெக்சாண்டிரி யாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.
பிற நாடுகளில் சிவன் பற்றிய வியப்பான செய்திகள் நிறைய காணலாம் .
ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது.பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர்.ஜப்பானியர்களது புராதனமான கடவுள் சிவோ என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது.பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப் பட்டுள்ளது.அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடு கின்றனர்.
தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் பற்பல சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம்.பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது.எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திபெத்தில் நாகரீகத்தில் சைவ வழிபாடு கி.பி. 5-ம் நூற்றாண்டிலேயே வேரூன் றியதை மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பாவை, திருவெம்பாவை, விழா நடந்ததாக அறிய முடிகிறது.சாகர் வம்சத்து அரசன் மோகன் என்பவன் தன் நாட்டு நாணயங்களில் நந்தி தேவர் சின்னங்களைப் பொறித்ததாக செய்தி உண்டு. சுக்கில யஜீர் வேதமும் சிவ பூஜை சிறப்பை தெளிவாகக் கூறுகின்றது.
