நரசிம்ம மூர்த்தி.
உடனுக்குடன் பலன் தருகின்ற மூர்த்தி நரசிம்ம மூர்த்தி .
இன்றே இப்பொழுதே என்பது தான் நரசிம்மர்.
நாளை .என்பது நரசிம்மனிடம் இல்லை.எல்லாம் உடனுக்குடன்…
அவரை முறையாக உபாசனை செய்பவர்களுக்கு எத்தகைய துன்பமும் தீயில் பட்ட தூசு போல உடனடியாக விலகிவிடும்.
ஒரு ஜாதகத்தின் ஆறாம் இடம் என்பது எதிரிகளையும் கடனையும் நோயை யும் குறிக்கின்ற இடம் .லக்னாதிபதியை விட ஆறாம் இடத்து அதிபதி வலு வடைந்து விட்டாலோ, அல்லது ஆறாம் இடம் கெட்டுவிட்டாலோ, ஆறாம் இடத்தில் தீய கிரகங்கள் பார்வை விழுந்தாலோ, ஒருவருக்கு பலவிதமான பிரச்சனைகள் வாழ்நாள் முழுக்க வந்து கொண்டே இருக்கும்.
அது உடல் நோயாகவோ, உள்ள நோயாகவோ, அல்லது எதிரிகளால் தொல்லையாகவோ தீர்க்க முடியாத கடனாகவோ இருக்கலாம்.
இப்படிச் சிரமப்படுபவர்களுக்கு கைகொடுக்கும் மூர்த்தி தான் நரசிம்மமூர்த்தி. ஆபத்பாந்தவன் , அனாத ரட்சகன் என்று அவரைச் சொல்வார்கள்.
நரசிம்மருடைய காயத்ரி மந்திரத்தையும் , ருண விமோசன மந்திரங்களையும் தொடர்ந்து சொல்வதன் மூலம் இத்தகைய தொல்லையிலிருந்து ஒருவர் எளிதில் விடுபடலாம்.
தினசரி காலையிலும் மாலையிலும் நெய் விளக்கு ஏற்றி வைத்து, நரசிம்மரின் படத்திற்கு மலர்களை சாற்றி, தூப தீபம் ஏற்றி,கொஞ்சம் பானகமோ, பாலோ வைத்து 48 நாட்கள் தொடர்ந்து கீழே உள்ள இந்த மந்திரங்களைச் சொல்வதன் மூலம் நல்வாழ்க்கை தானே அமையும்.
நரசிம்மா நரசிம்மா நம்பினேன் உன்னை நரசிம்மா
நாளும் நாளும் நரசிம்மா உந்தன் நாமம் நரசிம்மா
கோளும் பாவமும் அணுகாது காப்பாய் என்னை நரசிம்மா
ஆவி உந்தன் அடைக்கலமே அன்புடன் காப்பாய் நரசிம்மா
எந்தன் பிழைகள் பொறுத்தருள்வாய் உந்தன் மகனாய் ஏற்றிடுவாய்
தந்தையும் தாயும் நீ அன்றோ சரணம் சரணம் நரசிம்மா
ஆயுள் தோஷம் அணுகாது ஆவியைக் காத்திடு நரசிம்மா
சேயைப் போல திருவடியை சேர்ந்தே அடைக்கலம் புகுகின்றேன்
நாளை என்பது உனக்கில்லை இன்றே இக்கணம் வந்தென்னை
பீடை ரோகம் சத்ரு பயம் பீடிக்காமல் காத்தருள்வாய்
பிரக லாதன் போல் பக்தி பேசும் தகுதி எனக்கில்லை
வருவாய் ஆயினும் உரை நம்பி அழைக்கின்றேனே நரசிம்மா
சரணம் சரணம் உன் பாதம் சட்டென நீயும் வரவேண்டும்
பிழைகள் ஏதும் செய்தாலும் பொருத்தே அருள் நீ தர வேண்டும்
தாயும் நீயே நரசிம்மா தந்தையும் நீயே நரசிம்மா
பொருளும் நீயே நரசிம்மா புகழும் நீயே நரசிம்மா
உன்னை விட்டால் வேறு கதி உந்தன் பார்வையில் எந்தன் விதி
சரணம் சரணம் நரசிம்மா சடுதியில் வருவாய் நரசிம்மா
என்ற இந்த துதியை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல, உங்கள் சஞ்சலங்கள் மறையும்.சத்ரு பயம் நீங்கும். மற்ற தொல்லைகள் அகலும். மனதில் நிம்மதி மலர்கள் பூக்கும்.
