நான் கோயிலுக்குப் போய் வருகின்ற பொழுது ஏதேனும் தானம் தர வேண்டுமா ? ஆனால் சிலர் சொல்லுகின்றார்கள் ;”தானம் தந்தால் நாம் கோயிலுக்கு போய் சேகரித்து வந்த புண்ணியம் போய்விடும் என்று”.சரியா?
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பொருளை நீங்கள் மற்றவர்களுக்கு தானமாகத் தருகின்ற பொழுது உங்களுடைய பாவத்தின் பலன் குறையும். புண்ணியத்தின் பலன் அதிகரிக்கும். இந்த அடிப்படை விஷ்யத்தை மறக்காதீர்கள்.
நீங்கள் பெரிய மகான்களுக்கு ஏதேனும் பொருளைத் தானம் தருகிறீர்கள் என்றால் அவர்கள் உங்கள் பாவத்தின் சுமையையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளுகின்றார்கள். உங்களுக்கு அருள் புரிகின்றார்கள்.
அந்தப் பாவத்தை அவர்கள் தங்களுடைய மந்திர சக்தியினாலும் ஜபத்தினாலும் ,காயத்ரி மந்திர ஜபத்தினாலும் பஸ்மமாக்கி விடுகிறார்கள்.
ஒரு ஏழையின் பசியைத் தீர்ப்பது என்பது தர்மம். தகுதியான ஒரு குருமார்களுக்கும் படித்தவர்களுக்கும் வித்தை தெரிந்தவர்களுக்கும் வேதம் கற்றவர்களுக்கும் வழங்கப்படுவது தானம். இது இரண்டும் செய்ய வேண்டும் .அதனால் உங்களுடைய பாவங்கள் போகும். எக்காரணத்தை முன்னிட்டு தானம் பெறுவதால் பாவங்கள் சேருவதற்கு வழியே இல்லை. யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள்.

எப்போது தான தர்மம் செய்ய வேண்டும்?
நாம் ஒரு கோயிலுக்குப் போகிறோம் .பலருக்கும் ஏதாவது தர வேண்டும். தானம் தர வேண்டும். தர்மம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றார்கள். கோவிலுக்கு உள்ளே போகும்போது செய்ய வேண்டுமா? போய் பூஜையை முடித்துவிட்டு வெளியே வரும் போது செய்ய வேண்டுமா?
நீங்கள் கோயிலுக்குப் போய் மன அமைதியோடு நல்ல முறையில் பூஜையை நடத்தி முடித்துவிட்டு, அங்கேயே சற்று நேரம் அமைதியாக அந்த தெய்வத்தை மனதில் நினைத்து சிந்தியுங்கள். தேவையில்லாத குடும்ப விஷயங்களை எல்லாம் அங்கே பேசாமல், வெளியே வாருங்கள். அங்கே பசியோடு இருக்கக்கூடிய ஏழைகளுக்கும், உங்களிடம் கைநீட்டி கேட்கின்றவர்களுக்கும் உங்களால் முடிந்ததைத் தாருங்கள் ஒரு ஹோமமோ, பூஜையோ நிறைவேறிய பின்பு தான் அதனுடைய அங்கமாக தானம் தர வேண்டும் என்று சாஸ்திர விதி இருக்கிறது. அது அப்படியே இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை என்றாலும் கூட பூஜையை முடித்துவிட்டு நீங்க கோயிலை விட்டு வெளியே வரும்போது தான தர்மம் தந்தால் போதும்.
