தெய்வத் திருமணங்கள் பெரும்பாலும் நாம் நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமண வைபவம் போலவே பல்வேறு சடங்குகளுடன் நடைபெறுவதைக் காணலாம். குறிப்பாக கீழ்க்காணும் சடங்குகள் தெய்வத்திருமணங்களிலும் உண்டு.1. முளைப்பாலிகை 2.ரக்ஷா பந்தன் எனும் காப்பு கட்டுதல் 3.மாலை மாற்றுதல் 4.கோத்திரப் பிரவரம் 5.ஹோமங்கள் 6. கன்னியாதானம் 7.திருமாங்கல்ய தாரணம் 8.லாஜ ஹோமம் 9.சப்தபதி 10.திருவீதி வலம் எனும் இந்தச் சடங்குகளின் வரிசைகள் கிட்டத்தட்ட தெய்வத் திருமணங்களிலும் பின்பற்றப்படுகிறது. திருமாங்கல்ய தாரணத்தின்போது சொல்லப்படும் அந்தச் சுலோகமும் ஒரே ஒரு சொல்லை மாற்றி தெய்வத் திருமணங்களின் போதும் ஓதப்படும்.
மாங்கல்ய தாரணத்தின் பொழுது “மாங்கல்யம் தந்துனானே” என்ற சுலோகத்தைச் சொல்லுகின்றோம்.
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா,
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்…’
இதன் பொருள் இதுதான்.
மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே,மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நாணை , கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் ) சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!.
இதில் மம ஜீவன ஹேது என்கிற வார்த்தையை மாற்றி சுவாமிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்யும் பொழுது லோக ஜீவன ஹேதுனா என்று சொல்லுவார்கள். என்னுடைய வாழ்க்கைக்கு என்று சொல்லாமல், உலகத்தார் நன்றாக இருப்பதற்கு இந்த மாங்கல்ய தாரணம் நடக்கிறது என்பது பொருள். திருக்கல்யாணம் நடைபெற்றால் அந்த தெய்வ தம்பதிகளின் பேரருள் எல்லோ ருக்கும் கிடைத்து, எல்லோரும் நன்றாக வாழ்வார்கள் என்பதற்காகத்தானே, ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்களை நடத்துகின்றோம்.
சிவாலயங்களில் நடக்கும் திருமணங்களிலும், திருமால் ஆலயங்களில் நடக்கும் திருமணங்களிலும் ஒரு வேறுபாடு உண்டு .திருமால் ஆலயங்களில் திருக்கல்யாண வைபவம் முடிந்ததும் ஆண்டாள் தமிழில் பாடிய நாச்சியார் திருமொழி பதிகமான வாரணமாயிரம் என்று தொடங்கும் திருமொழியை சேவிப்பார்கள். தாயார் சார்பில் ஒரு பட்டாச்சாரியாரும், பெருமாள் சார்பில் ஒரு பட்டாச்சாரியாரும் எதிரெதிரில் அமர்ந்து கொண்டு ஆளுக்கு இரண்டு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்துக்கொண்டு சுவாமியின் திருக்கரங்களில் கொடுத்து வாங்கி இந்த பத்து பாசுரங்களையும் ராகத்தோடு சேவித்து உருட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதே வைபவம் வைணவ இல்லங்களிலும் நடைபெறும்.
இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும்,இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும் மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும், நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும்,ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக பெருமாள் வந்த நிலை பற்றியும், ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும்,ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும்,எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும்,ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும்,பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும்,பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது.ஒன்பதாவது பாசுரம் முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், சந்பாவனை(பணம்) வைத்து ஆண்டாள் நாச்சியார் சம்பாவனை என்று வழங்கப்படும். அந்த பதிகத்தின் முதல் பாட்டு இது.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
இதை விளக்கு வைத்து பக்தியுடன் ஒரு மண்டலம் பாராயணம் செய்பவர் களுக்கு திருமண தடை நீங்கும்.
