(c)பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி
புரட்டாசி மாதத்தில் எம்பெருமானின் அவதார திருநட்சத்திரமான திருவோணத்தை ஒட்டி திருமலையில் மிக விசேஷமான பிரம்மோற்சவப் பெருவிழா நடைபெற்றது. அதுவும் இந்த ஆண்டு இரண்டு பிரம் மோற்சவங்கள் நடைபெற்றன .எம்பெருமானுக்கு உள்ள அதே வைபவமான பிரம்மோற்சவப் பெருவிழா கீழே திருச்சானூர் எனப்படும் திருச்சுகனூரில் பத்மாவதி தாயாரின் அவதார வைபவமான கார்த்திகை பஞ்சமியை ஒட்டி நடைபெறப் போகிறது .அதனை ஒட்டி இந்தக் கட்டுரையில் பிராட்டியின் வைபவத்தை நாம் காண இருக்கின்றோம்.
வைணவ மரபிற்கு உள்ள ஏற்றங்கள் பல. தீதில் நன்னெறி என்றே குல சேகர ஆழ்வார் குறிப்பிடுகின்றார். வைணவத்தின் ஒவ்வொரு வார்த் தையும் திருமகளான தாயாரோடு தொடர்பு இல்லாமல் இருப்பதில்லை. பெருமாளைச் குறித்து சொல்லும் பொழுது ஸ்ரீ:யபதி என்றே சொல் லுகின்றோம் .திருவுடைய தேவன் அவன். மகாலட்சுமி சம்பந்தம் உள்ளதால் திருமால்.(திரு +மால்)
நம்மாழ்வார் திருமலை அப்பனிடம் சரணம் புகும் பாசுரம் பாடும் பொழுது அலர்மேல் மங்கையை முன்னிட்டுத் தான் சரணம் புகுகிறார்.
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா,
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே,
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
காரணம் ஸ்ரீ சம்பந்தமில்லாத போது பகவத் குணங்கள் சிறப்பதில்லை . பாகவதர்க்கு புருஷகாரம் கிடைப்பதில்லை. பக்தி யின் பூரணத்துவம் இருப்ப தில்லை. “திருவிலா தேவன்” ஆகிவிடுகிறான் அல்லவா.
பொதுவாக வைணவத்தில் பேசும் ஒவ்வொரு சொல்லும் திருமகள் சம்பந் தத்தோடு இருக்கும். திருத்தலம், திருப்பதி, திருமலை, திருவுள்ளம், திருவடி,திருமுடி, ஸ்ரீனிவாசன் ,திருக்கண்ணமது, திருமஞ்சனம், திருமடைப் பள்ளி, திருவாய்மொழி, திருமாலை,திருமொழி,திருப்பாவை, திருவரங்கம், திருப்பாற்கடல் என்று எதைத் தொட்டாலும் “திரு” என்கிற ஒலிக் குறிப்பு இணைந்து உன்னதத்தைத் தரும்.
நாம் தனித்தனியாக பிராட்டியின் பெருமையைக் குறித்தோ ,பெருமாளின் பெருமையைக் குறித்தோ பேசுவதில்லை. பேசவும் முடியாது. காரணம் பூவின் மணத்தையும் சூரியனின் ஒளியையும் எப்படிப் பிரிக்க முடியும் ? பிரிக்க முடியாது அல்லவா.
தேவியாகிய சீதா பிராட்டியார் பிரிந்திருந்த போதுதான் வாலிவதம் நடந்தது. ராவண சம்காரமும் நிகழ்ந்தது. ஆனால் இவர்களைவிட பெரும் பாவம் செய்த காகாசுரன் எனும் இந்திரகுமாரன்(ஜெயந்தன்) உயிர் பிழைத் தான். எனவே எம்பெருமான் அருள் கிடைக்க முதல் புருஷகாரம் செய் பவள் பிராட்டி .எம்பெருமானின் கோபத்தையும் தணித்து, சேதனர்களாகிய ஜீவாத்மாக்களின் தவறுகளையும் மன்னித்து, இருவரையும் இணைக் கிறாள். புருஷகார வைபவத்தில் பிராட்டிக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. புருஷகாரத்தின் எல்லை நிலம் மஹாலஷ்மி என்பார்கள்.
சுவாமி ராமானுஜர் உயிர்களின் மேன்மைக்காக திவ்ய தம்பதிகளைச் சரணடைகிறார். இது நடந்தது ஒரு பங்குனி உத்திரத்தில். அப்போது முதலில் அருளியது சரணாகதி கத்யம் .அதன் முதல் சூர்ணை முழுக்க
பிராட்டியின் வைபவத்தை பரக்கப் பேசுகிறது பிராட்டியின் சிறப்புகளை எல்லாம் அடுக்கி அடுக்கிச் சொல்லும் அருமை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
சம்பிரதாயத்தில் பிராட்டியின் சிறப்பையும் வைபவத்தையும் பெருமை களையும் “இந்த மிதுனமே நமக்கு உத்தேச்யம்” என்று ஒரே வார்த்தையில் அடக்கி விட்டார்கள்.
எம்பெருமானுக்குரிய அத்தனை வைபவங்களும் பிராட்டிக்கும் துல்லிய மானது. பிராட்டியின்பெருமை,வைபவம் எல்லாம் எம்பெருமானுக்குஉரியது.
எனவே எம்பெருமானைச் சொல்வதெல்லாம் பிராட்டிக்குச் சொல்வ தாகவும், பிராட்டியின் பெருமைகளை எல்லாம் எம்பெருமானுக்கு உரியதா கவும் கொள்ளும் மரபு வைணவத்தில் உண்டு.
முதன் முதலில் ஆச்சாரிய தனியனைச் சொல்லும் பொழுது பிராட்டியை முன்னிட்டு சொல்கிறோம். “லஷ்மி நாத ஸமாரம்பம் நாத யாமுன மத்யமாம் அஸ்மது ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பரம்” என்ற சுலோகத்தைச் சொல்லாமல் எந்த வழிபாடும் தொடங்குவதில்லை.
வைணவ சம்பிரதாயமே மஹாலஷ்மியை முன்னிட்டு அவளுடைய நாதனிடம் இருந்து தொடங்குகிறது என்பதால் திரு என்கிற வார்த்தையே முதல் வார்த்தையாக அமைந்திருக்கிறது.
எம்பெருமானுக்கு 12 நாமங்கள் சொல்லி திருமண் அணிந்தது கொள்வது போலவே, பிராட்டிக்கும் துவாதச நாமங்கள் சொல்லி ஸ்ரீ சூர்ணம் தரிக்கிறோம்.
முதல் ஆழ்வார்கள் திருக்கோவலூரில் இரண்டு விளக்கு ஏற்றினார்கள். அதுதான் அருளிச்செயலின் தொடக்கம். முதல் விளக்கு புறவிளக்கு.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்யச்
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று
இரண்டாம் விளக்கு அக இருட்டை அகற்றும் விளக்கு. இதற்கு அன்பும் ஆர்வமும் தேவை.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தைஇடுதிரியா நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
இந்த இரண்டு விளக்கால் அக இருளும் புற இருளும் அகன்றது. எம்பெருமான் காட்சி தந்தான். இந்தக் காட்சியை மூன்றாவது ஆழ்வார் பாடுகிறார்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கை கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று
இந்தப் பாசுரத்தை கவனித்தால் முதல் வார்த்தை திருக்கண்டேன் என்பது. ஆழ்வார் முதலில் தரிசனம் செய்தது திருவாகிய மகாலட்சுமித் தாயாரைத் தான். பின் தான் அவனுடைய பஞ்சாயுதங்களைத் தரிசிக் கிறார். நிறைவாக சமுதாய சோபையுடன் கூடிய பெருமாளைத் தரிசிக் கிறார் .
இந்தச் சம்பிரதாயத்தை ஒட்டியே , பெருமாள் ஆலயங்களில் முதலில் தாயாரை தரிசனம் செய்துவிட்டு, ஆழ்வார் ஆச்சாரிய தரிசனங்களை முடித்துவிட்டு, நிறைவாக பெருமாளை தரிசனம் செய்கிறோம். திருமலைக்கு வருபவர்கள் முதலில் திருச்சுகனூரில் உறையும் திருவளர் செல்வியான அலர்மேல் மங்கை தாயாரை தரிசனம் செய்த பின், மலையேறி, திருமலை அப்பனை தரிசிக்க வேண்டும்.
திருச்சுகனூரில் தான் அலர்மேல் மங்கை தாயாரின் அவதாரம் நிகழ்ந்தது. அங்குள்ள மிகப்பெரிய எண்ணற்ற இதழ்கள் கொண்ட சகஸ்ர கமலத்தில் கார்த்திகைத் திங்கள் பஞ்சமி திதியில் அவள் அவதாரம் நிகழ்ந்தது என்பதால் பஞ்சமி திதிக்கு உயர்வு கிடைத்தது .
அந்த பஞ்சமி திதியில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான உற்சவம். தீர்த்தனான எம்பெருமான் பஞ்சமி தீர்த்தத்தில் தான் அலர்மேல் மங்கைத் தாயாரை கண்டு தன் மார்பில் மீது ஏந்திக் கொண்டான்.
பஞ்சமி திதியில் நடைபெறும் பஞ்சமி தீர்த்தம் அதிவிஷேசமானது .எம்பெருமானின் கருட சேவையைப் போல கார்த்திகை பஞ்சமி தீர்த்தம் தாயார் பிரம்மோற்சவத்தின் தலையாய சிறப்பு எனலாம்.
திருமலை அப்பன் வைபவம் குறித்து அனேகமாக எல்லா ஆழ்வார்களும் பாடி இருக்கிறார்கள். தனித்தனி பாசுரங்களும் உண்டு. பதிகங்களும் உண்டு.
நம் ஆழ்வார் நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி பாடத் துவங் குகிறார். பகவானின் திருவருள் பெற்ற ஆழ்வாரின் ஆனந்தம் கரை புரண்டு ஓடுகிறது. தம்முடைய பேறல்லவோ இத்தகைய இறையானந்தத்தைப் பெற வைத்தது என்று திருவாய் மொழியைத் தொடங்குகிறார்.
வீற்றிருந்து ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீவில் ஆற்றல்மிக்கு ஆளும் அம்மானை என்று ஆரம்பிக்கிறார். அதன் பலச் சுருதி பாசுரம் பிராட் டியின் பெருமையை, அதிலும் வேங்கடத்தில் உறையும் மகாலட்சுமி தாயாரின் (பத்மாவதி தாயாரின்) வைபவத்தைப் பேசுகிறது .
இரண்டு பாசுரங்களுக்கு முன்,
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?
என்ற பாசுரத்தில் பிரணவத்தின் பொருளையே கொடுத்து விடுகின்றார். நமக்கும் என்பதால் சேதனர்களுக்கும், பூவின் விசை நங்கைக்கும் என்பதால் பிராட்டிக்கும், இன்பன் என்பதால் ஈஸ்வரனையும் இணைத்து பாடுகின்றார் .இங்கே நமக்கும் என்பதால் மகாரமும், பூவின்மிசை நங்கைக்கும் என்பதால் உகாரமும் இன்பனை என்பதால் அகாரமும் இணைந்து பிரணவத்தின் ஒலியாக இந்தப் பாசுரம் நமக்கும் அவனுக்கும் உள்ள உறவையும், பிராட்டியின் புருஷகாரத்தையும் இணைத்துச் சொல்லுகின்றது. இதில் நிறைவான பலச் சுருதி பாசுரம் இது.
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரிய பிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகியதான திருவேங்கட மலையிலே, தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலம்பொருந்திய எம்பெருமான் விஷயமானது இப்பதிகம்;
“வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்கையாலே பிராட்டி க்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்குந்திறன் உண்டென்று சிலர்சொல்லுவார்கள். நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகாரக்ருத்யத்தாலே பிராட்டி போக்குவாள் . அந்தப் பிராட்டிதான் அலர்மேல் மங்கைத் தாயார். கார்த்திகை பிரமோற்ச வத்தில் அவளைப் பணிவோம். அனைத்தும் பெறுவோம்.
