ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைபவம்
ஆசிரியர்: முனைவர். ஸ்ரீ. உ.வே. அரங்காசாரி சுவாமிகள், திருச்சித்ரகூடம்.
இந்நூலை வெளியிட்டு இருப்பது. ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் (Sri Manavala Mamunigal) தென்கலை மரபின் நிறைவு ஆசாரியர். இவரோடு தென்கலை ஆச்சாரிய மரபு நிறைவுபெறுகிறது. அதாவது நாதமுனிகளிடம் ஆரம்பித்து மணவாளமாமுனிகளோடு தென்கலை மரபு நிறைவுபெறுகிறது. இவரை ராமானுஜரின் புனர் அவதாரம் என்றே கருதுகின்றனர். இவருடைய வாழ்வும் வாக்கும் அற்புதமானது. இவர் அவதரித்து 650 ஆண்டுகள் ஆகின்றன .அதனைக் கொண்டாடும் வகையில் ஸ்ரீராமானுஜரின் 1000ஆவது ஜெயந்தி விழாக் குழு சார்பாக அதன் செயலாளர் ஸ்ரீமான் சக்கரவர்த்தி அவர்கள் இச்சிறு நூலை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய பணி பாராட்டத்தக்கது.திருச்சித்ரகூடம் முனைவர் ஸ்ரீ உ வே ஏ வி ரங்காச்சாரியார் சுவாமியின் மிகச்சிறந்த ஆராய்ச்சி திறனோடு நூல் வெளிவந்திருக்கிறது . இந்நூலில் 12 அத்தியாயங்கள் இருக்கின்றன. ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைபவம் என்கிற அத்தியாயத்தில் மாமுனிகளின் சுருக்கமான வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு உள்ள அத்தியாயங்கள் அனைத்துமே புதுமையான முறையில் ஆராய்ச்சி திறனோடு மாமுனிகளின் பன்முக ஆற்றலை விளக்கும் அற்புத கட்டுரைகளாக மிளிர்ந்திருக்கின்றன.
ஸ்ரீமன் நாராயணனும் மணவாள மாமுனிகளும்,ஸ்ரீமத் ராமானுஜரும் மணவாளமாமுனிகளும், ஸ்ரீமத் கூரத்தாழ்வானும் மணவாள மாமுனிகளும் என இம்மூன்று கட்டுரைகள் ஒப்பீட்டு முறையில் ஆராயப்பட்டு இருக்கின்றன.
மாமுனிகளுக்கு “விசவாக் சிகாமணி” என்கிற விருது உண்டு. அவருடைய ஆழ்வார் பாசுர விளக்கங்களும் ரகசிய நூல்களின் விளக்கங்களும், புதுமையான கண்ணோட்டத்தோடும், ஆராய்ச்சி திறனோடும் அற்புதமான பிரமாணங்களோடும் சுவையாக இருக்கும்.
மாமுனிகளின் வாக்கு மகத்தானது என்பதை விளக்கும் வகையில் அக்கட்டுரை அமைக்கப்பட்டிருக்கிறது.
தாம் எழுதிய விளக்கவுரைகளில் காட்டும் ஐதீகங்களைப் பற்றிய ஒரு கட்டுரை இருக்கின்றது.
மாமுனிகளின் வியாக்கியானங்கள் என்கிற கட்டுரை அவர் விளக்க உரையில் கையாண்ட உவமை நலத்தை விரிவாக எடுத்துரைக்கிறது.
ஸ்ரீ ராமானுஜர் எழுதிய ஒன்பது நூல்களில் ஒன்று “நித்யம்“. தினசரி திருவாராதனத்தைப் பற்றியது. இதன் விவரணமாக அவருடைய புனர் அவதாரமான மாமுனிகள் ஜீயர் படி, திருவாராதன க்ரமம் என்கிற ஒரு நூலை (வைணவர்கள் எப்படி வழிபாடு நடத்த வேண்டும்) என்பதை விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.
அதனை இந்நூலில் “சித்ரகூடம் ஸ்வாமி” மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார். அதைப்போலவே ஸ்ரீமத் “வரவர முனி திநசர்யை” என்கிற நூலின் சுருக்கமான விளக்கம் ஒரு கட்டுரையில் இருக்கிறது.
பொதுவாகவே மாமுனிகள் வடமொழியிலும் தமிழிலும் புலமை உடையவர். அவருடைய தமிழ்ப்பற்று வியக்கவைக்கிறது. ஆர்த்திப் பிரபந்தம், உபதேசரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலிய நூல்களில் இதனைக் காணலாம் .
மாமுனிகள் தமிழ் பற்றிய அழகான ஒரு கட்டுரை பத்தாவது கட்டுரையாக இந்நூலில் திகழ்கிறது.
செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி வாழியே ! என்று தினசரி வைணவ வழிபாட்டில் சொல்லப்படுகின்றது.
செய்ய தாமரை தாளிணை என்கிற அவருடைய திருநாமத்தை பற்றிய விளக்கம் ஏற்கனவே ஒரு சிறு நூலாக வெளிவந்திருக்கிறது. அந்நூலின் விளக்கத்தையும் இந்த புத்தகத்தில் ஆசிரியர் இணைத்திருக்கிறார்.ஒவ்வொரு வரிக்கும் முத்து முத்தான விளக்கங்கள் படிப்போரை மயக்கும் . நிறைவாக ஸ்ரீ மணவாள மாமுனிகள் கண்ணிநுன் சிறுத்தாம்பு என்று மாமுனிகளைப்பற்றிய சிறு பிரபந்தம்.
நம்மாழ்வார் பெருமையை மதுரகவிகள் எப்படி கண்ணிநுண்சிறுத்தாம்பு என்கிற பாசுரங்களில் வெளிப்படுத்தினாரோ, அதைப் போலவே கோயில் கந்தாடை அண்ணன் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பெருமையை விளக்குவதற்காக மணவாள மாமுனிகள் கண்ணிநுன் சிறுத்தாம்பு என்கிற பிரபந்தத்தை இயற்றி இருக்கிறார்.
அந்நூலில் உள்ள 13 பாசுரங்களுக்கான விளக்கத்தை நிறைவுக் கட்டுரையாக ஆசிரியர் அளித்திருக்கிறார்.
மாமுனிகளின் வைபவம் எளிதில் சொல்ல முடிவதல்ல .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,-கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.என்று தினம் தினம் அவரை வாழ்த்தி வழிபாட்டை நிறைவு செய்கின்றோம்.மணவாளமாமுனிகளுக்கு வைணவமும் தமிழ் கூறும் நல்லுலகமும் எப்படிக் கடமைப்பட்டிருக்கிறது என்பதை இந்நூலை படித்தால் நம்மால் உணர முடியும் .அத்தகைய உணர்ச்சியைத் தந்த நூல் ஆசிரியருக்கும், வெளியிட்ட ஸ்ரீமத் சக்கரவர்த்தி அவர்களுக்கும் நாம் பல்லாண்டு பாடுகிறோம்.
திருமலை ஒழுகு (திருமலை திருப்பதி ஆலய வரலாறு) அரிய புத்தகம் பற்றிய விபரங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
——————————————————————————————————————————————————————————————————————–
The Eighteen Day Debate Between Ramanuja and Yagnamoorthi – Dr. Venkatesh
திருக்குடந்தை. டாக்டர். ஸ்ரீ. வெங்கடேஷ் (Dr.Venkatesh) அவர்கள் ஒரு மருத்துவர். உடல் நோக்கு மருத்துவம் பார்த்து வரும் இவர் ஓய்வு நேரத்தில் உள்ள நோய்க்கும் மருத்துவம் பார்க்கும் பணியைப் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார். அற்புதமான உபன்யாசங்கள் செய்பவர்.அருமையான புத்தகங்களை படைப்பவர். இவருடைய உபன்யாசங்கள் கேட்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.
டாக்டர். வெங்கடேஷ் அவர்களை அடியேன் பலகாலமாக அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் திரு சடகோப கல்யாணராமன் சுவாமி தான் முதன்முதலில் அடியேனிடம் இவரை அறிமுகம் செய்தவர்.இவர் உபந்யாசம் மிக அற்புதமாக இருக்கும். நீங்கள் அவரைக் கேட்க வேண்டும் என்றார்.
அவ்வாண்டு அண்ணன் கோயில் கலியன் ஒலி மாலை நிகழ்ச்சியில் அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அந்த நிகழ்வில் ஒரு அரை மணி நேரம் திருநறையூர் திவ்ய தேசத்தின் பெருமைகளைப் பற்றி அடுக்கடுக்காக அவர் சொன்ன செய்திகளும் சொன்ன விதமும் கூட்டத்தினரை மயக்கியது.மிக மிக எளிமையாக உலகியல் உதாரணங்களோடு வைணவத் தத்துவங்களைப் புரிய வைத்தார்.அழகான சொற்பெருக்கு.அதுவும் இளம் வயதில்.மருத்துவராக இருந்தாலும் வேதத்தை நன்கு கற்றவர்.ஸ்ரீ பாஷ்ய அதிகாரி.சமஸ்க்ருதத்திலேயே சொற்பொழிவாற்ற வல்லவர்.
அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவரோடு சேர்ந்து உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன் அடியேனே புவனகிரிக்குப் பலமுறை அவரை அழைத்து இருக்கிறேன். அண்மைக்காலமாக அவருடைய நூல்களையும் அடியேன் மூலம்தான் பதிப்பித்து கொள்கின்றார்.
டாக்டர். வெங்கடேஷ் அவர்கள் எழுதிய ஆங்கில நூல் இது. The Eighteen day Debate Between Ramanuja and Yagnamoorthy
ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் பல சுவையான சம்பவங்கள் இருக்கின்றன. வைணவத் தத்துவமான விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக அவர் பல வாதப்போர்களை நடத்தி இருக்கின்றார். அக்காலத்தில் அறிவாளிகள் கருத்தை கருத்தால் வாதித்து நிலை நிறுத்துவது என்பது சரித்திரம் நமக்கு காட்டும் முறை.
இவ்வகையில் யக்ஞமூர்த்தி என்பவர் அத்வைதி. திருப்பதிக்கு அருகில் விஞ்சமூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இராமானுஜரின் மேன்மையையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பரப்புவதையும் அறிந்து அவருடன் வாதப் போர் செய்ய வருகின்றார்.
18 நாள் இந்த விவாதம் நடைபெற்றது. பொதுவாகவே 18 நாள் நடைபெற்றது. அதில் இறுதிநாளான பதினெட்டாம் நாள் ராமானுஜர் வென்றுவிட்டார் என்பது மட்டுமே கதைகளில் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த விவாதம் எதை குறித்து நடந்தது? அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன? யக்ஞ மூர்த்தி வைத்த வாதத்தை எப்படி இராமாநுஜர் பிரமாணங்கள் காட்டி மறுத்தார் என்பதெல்லாம் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை.
பதினெட்டு நாள் நடந்த விவாதங்கள் என்னென்ன என்பதை எல்லாம் ஆய்வு செய்து திரட்டி எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார் டாக்டர் வெங்கடேஷ். இது ஒரு சீரிய முயற்சி. செம்மையான முயற்சி. இதற்கு முன்னால் இந்நூலை தமிழிலும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதனுடைய ஆங்கிலப் பதிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
காரணம் தமிழைவிட ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கின்ற மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள். அவர்களுக்கும் இத் தத்துவம் போய்ச் சேர வேண்டும்.
இந்நூலின் சிறப்பாக எளிமையான தெளிவான மொழிநடையை முதலில் சொல்ல வேண்டும். குறைந்தபட்சஆங்கில அறிவு உள்ளவர்கள்கூட இந்த மொழிநடையைப் புரிந்துகொண்டு இதில் என்ன விஷயம் சொல்லப் படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தம்முடைய மொழி ஆற்றலைக் காட்டுவதை விட, தான் சொல்ல வந்த செய்தி படிக்கிறவர்களுக்குச் போய் சேர வேண்டும் என்கின்ற பொறுமையும் முயற்சியும் இந்நூலின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வரிகளிலும் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் விவாதத்தின் மையப் பொருளை எடுத்து விளக்கிவிட்டு அதனுடைய சுருக்கத்தை நிறைவாக ஒரு அட்டவணை மூலம் தருகின்றார்.
அதைவிட முக்கியமாக ஒரு வண்ணப் படத்தின் மூலம் எளிமையான சொற்களால் ஒவ்வொரு அத்தியாயத்தின் செய்தியையும் விளக்கி விடும் அருமை அற்புதம். இது இதுவரை யாரும் செய்யாத முயற்சி. ஒரு உபநிடத வாக்கியத்தைச் சொல்லி அது அத்வைதபரமாக எப்படி பொருள் கொள்ளப்பட்டது. இராமாநுஜர் எப்படி பொருள் கொண்டார் என்பதை விளக்கும் பாணி அருமை.
இது தவிர நூலின் பின்னிணைப்பாக மிக அற்புதமான விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றார். எந்தெந்த உபநிடத வாக்கியங்கள் இந்த வாதத்தில் இடம்பெற்றன? அதற்கு எப்படிப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை அட்டவணைப்படுத்தி இருப்பதன் மூலமாக நாம் வாதத்தின் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
அட்டவணை இரண்டில் விசிஷ்டாத்வைத தத்துவம் நாளுக்கு ஒன்றாக எப்படி நிலைநிறுத்தப்பட்டது என்பதை கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருக்கிறான் பரமாத்மா.ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் உடற்கூறு ஆக இருக்கிறது.
இந்த பிரபஞ்சம் முழுக்க பரந்து இருக்கக்கூடிய பரமாத்மா ஒரு ஜீவாத்மாவின் உள்ளும் ஊடுருவி உறைகிறது.
எல்லா உயிர்களும் பரமாத்மாவோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.
நானே பிரம்மம் என்று ஒரு மனிதன் சொல்லிக் கொள்வது அவரும் பிரம்மமும் ஒன்றே என்ற பொருளில் அல்ல. ஆனால் அவனுக்குள் பரமாத்மா மறைந்து இருப்பதால் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆனால் இரண்டும் வேறு வேறு.
உலகியல் இந்திரிய இன்ப துன்பங்களில் உடல் என்ற ஜீவன் தன்னை உணர்ந்து இறையருளை பெறுகின்ற நிலைக்கு உயர்வது பேறு என்று சொல்லுகின்றோம். இந்த மோட்சநிலையில்கூட பரமாத்மாவிடம் போய் ஜீவாத்மா சேருகிறதே தவிர இரண்டும் ஒரே பொருளாக ஆகி விடுவதில்லை.
மோட்சம் என்பது ஜீவன் தன்னளவில் இன்பம் ஏற்படுத்துகின்ற ஒரு நிலை அல்ல. அது விஷ்ணு லோகத்தை அடைந்து பரந்தாமனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையை அடைவது.
பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளும் பரமாத்மாவால் உருவாக்கப்பட்டவை. அவனிடத்தில் தோன்றி அவன் இடத்திலேயே ஒன்றுகின்றன.ஒருவன் நான் கடவுள் என்று சொன்னால் அவன் கடவுளின் உறுப்பின் ஒருபகுதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர வேறல்ல.பேரண்டத்தின் காரணமாகவும் காரியமாகவும் பரமாத்மா விளங்குகின்றான்.சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற வழிமுறைகளின் படி ஒருவன் இந்த வீடு பேற்றினை அடைய முடியும்.
இப்படி 18 கருத்துக்களை அவர் பின்னிணைப்பாகக் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த நூல் ஒரு அருமையான அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். கிடைக்கும் இடம்: டாக்டர். வெங்கடேஷ், 42 ராகவேந்திரா நகர், செக்கண் கேணி, கும்பகோணம். தொடர்பு எண் : 94 882 07667
