ஆன்மீக கவிதைகள் – Aanmeega kavithaigal – KP Padmanaban
ஸ்ரீ ராமா நாமம் போற்று! – கவிதை (Aanmeega Kavidhai)
தந்தையவர் ஆணையெனத் தாயா ரொத்த
தசரதனின் கைகேயி உரைத்த வாக்கைச்
சிந்தையிலே கொண்டதனைச் சிரமேற் கொண்ட
ஸ்ரீராமன் நாமத்தைப் போற்று வோமே!
முந்தையபு தல்வனெனப் பிறந்திட் டாலும்
முழுஉரிமை அரசாள இருந்திட் டாலும்
சிந்தையிலே அரியணையின் ஆசை விட்ட
ஸ்ரீராமன் நாமத்தைப் போற்று வோமே!
விந்தைமகன் படகோட்டி குகனின் அன்பை
விரிந்தமனப் பான்மையுடன் ஏற்றுக் கொண்டு
சிந்தையிலே மனிதனவன், தம்பிீ என்ற
ஸ்ரீராமன் நாமத்தைப் போற்று வோமே!
மொந்தையிலே கள்ளருந்தி மயங்கிட் டாலும்
முழுதாகச் சுக்ரீவன் தன்னை மாற்றிச்
சிந்தையிலே அவனையும்தான் மன்னித் தேற்ற
ஸ்ரீராமன் நாமத்தைப் போற்று வோமே!
தந்தையவர் போல்காத்த சடாயு வுக்குத்
தனயனென ஈமக்க டன்கள் செய்து
சிந்தையதால், செயலதனால், உயர்ந்த அந்த
ஸ்ரீ ராமன் நாமத்தைப் போற்று வோமே!
நிந்தையரே செய்திட்ட எதிரி யையும்
நீஇன்று போய்நாளை வாராய் என்று
சிந்தையிலே”மனிதத் தை ஏந்தி நின்ற
ஸ்ரீராமன் நாமத்தைப் போற்று வோமே!
– கே.பி.பத்மநாபன், கோவை.
————————————————————————————-
விடியலின் நேரம் விழிகளைத் திறந்து…
விடியலின் நேரம் விழிகளைத் திறந்து
வில்லினை ஏந்திய வன்தன்
அடிகளி ரண்டை அகத்தினுள் ளிருத்தி
அவனது நாமமும் ஓதி
மடியெது மின்றி மனம்மொழி செயலால்
மங்கல வினைகளைத் துவங்கக்
கடிதினில் கிட்டும் காரிய வெற்றி
கருமுகில் நிறத்தவன் துணையே!
இடியென இடர்கள் இடையினில் வந்தே
இடுக்கணை ஈந்துவி டாமல்
பிடித்ததைத் தடுத்துப் பின்புறம் தள்ளிப்
பீடுறு வாழ்வினைப் பெறவே
நெடியவில் லேந்தி நிலமிதைக் காத்தோன்
நினைவினை நெஞ்சினில் நிறுத்தக்
கடிதினில் கிட்டும் காரிய வெற்றி
கருமுகில் நிறத்தவன் துணையே!
அடிமுடி முழுதும் அருள்நிறை அமுதம்
அண்ணலின் உருவது மனிதம்;
வடிவது கருணை வனப்பினில் இறைமை
வணங்குதல் மானுடர் கடமை;
துடித்திடும் இதயத் துடிப்பெலாம் அவன்தன்
தூயநல் நாமமென் றாயின்,
கடிதினில் கிட்டும் காரிய வெற்றி
கருமுகில் நிறத்தவன் துணையே!
– கே.பி.பத்மநாபன், கோவை.
———————————————————————————————–
ஆதி மூலம்!
அரக்ககுணம் மேலோங்கி ஆளும் நேரம்
அதையடக்க அவதரிக்கும் ஆதி மூலம்;
இரக்ககுணம் நீங்கிட்ட இராக்க தங்கள்
இங்குயர்ந்தால் அவதரிக்கும் ஆதி மூலம்:
**’நரத்தன’மும் நலிவடைந்தே அசுரம் ஓங்கின்
நானிலத்தில் அவதரிக்கும் ஆதி மூலம்;
மரத்துவரும் ’ மனித’த்தை காப்ப தற்கு
மண்மீதில் அவதரிக்கும் ஆதி மூலம்!
இயற்கையினை நச்சாக்கி நோய்ப்ப ரப்பின்
இனம்காக்க வந்திடுமோ ஆதி மூலம்?
’சுயத்’தினையே சுகமாக்கும் சுயந லத்தோர்
சூழுலகில் வந்திடுமோ ஆதி மூலம்?
செயற்கையிலும் போலியிலும் சிந்தை ஓங்கின்
செகம்காக்க வந்திடுமோ ஆதி மூலம்?
அயர்வின்றி மன்னிப்பை வேண்டி அந்த
அடிதொழுதால் அவதரிக்கும் ஆதி மூலம்!
பாவத்தின் பரிசேதான் நோய்க ளாகும்;
பணிந்திட்டால் அவதரிக்கும் ஆதி மூலம்;
தாவரங்கள் புள்விலங்கின் தூய்மை கண்டு
தவறாது காப்பதுதான் ஆதி மூலம்;
கேவலமாக் கெட்டழிதல் விட்டொ ழிந்தால்
கேளாமல் காத்திடுமே ஆதி மூலம்;
நாவறண்டு போயிடுமுன் நாமம் ஓதின்
நலம்காக்க அவதரிக்கும் ஆதி மூலம்!
– கே.பி.பத்மநாபன், கோவை.
——————————————————————————————-
பிரிவதேது
கண்டவர் மயங்கும் அந்தக்
கவினுறும் எழிலின் மாண்பை
விண்டவர் எவரும் இங்கே
விளம்பினா ரில்லை முற்றாய்;
உண்டவர் மவுன மானார்
உரைத்திட வார்த்தை இன்றி;
பண்டவர் மொழிந்த தெல்லாம்
பார்த்ததில் தூசி மட்டும்!
பீலியின் எழிலைக் கண்டோர்
பிளந்தவாய் மூடவில்லை;
காலினில் சலங்கை கண்டோர்
கண்ணிதை மூட வில்லை;
ஆலிலை மேல்கி டந்த
அழகினைக் கண்டோர்க் கென்றும்
நூலிழை எழிலைக் கூட
நுவன்றிடக் கூட வில்லை!
விழியெழில் கண்டு வீழ்ந்தோர்
விரைந்துடன் எழுந்த தில்லை;
எழிலிதழ் நகையைக் கண்டே
எழுந்தவர் வரலா றில்லை;
குழிவிழும் கன்னம் கண்டோர்
குவலயம் உணர்ந்தா ரில்லை;
கழிபெரும் குழல்மு டிச்சைக்
கண்டவர் உறங்க வில்லை!
கருநிற நீல மேனி
கண்டபின் துயர்கள் ஏது?
உருவதில் மயங்கி விட்டால்
உளத்துயர் வருவ தேது?
ஒருமுறை கண்டு விட்டால்
உயிரினில் ஆசை ஏது?
கருத்தினுள் புகுந்த கண்ணன்
கட்டையைப் பிரிவ தேது?
– கே.பி.பத்மநாபன், கோவை.
—————————————————————————————————————————————————–
ஆலயதரிசனம் ஆசிரியர் பற்றிய கவிதை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
—————————————————————————————————————————————————–
காணும் மழலையரெல்லாம்
பால்வடியும் மழலையர்தம் வதனங்கள் காணின்
பாலகனாம் கண்ணனவன் எழில்முகமாய்த் தோன்றும்;
கால்சலங்கை ஒலிகளையே கேட்கின்ற நேரம்
கண்ணனவன் குழலிசையாய்க் காதினிலே தோன்றும்;
வால்தனங்கள் செய்கின்ற குழந்தையரைக் காண
வடிவான கண்ணனிங்கே வந்ததுபோல் தோன்றும்;
சேல்விழிகள் மின்னுகின்ற சிறுமுகங்கள் காணின்
சிந்தையிலே கண்ணனது குறும்புமுகம் தோன்றும்;
அடம்பிடித்தே அழுகின்ற அழகுமழ லைகள்
அடம்பிடித்த யசோதைமகன் அழகைநினை வூட்டும்;
நடனமிடும் மழலையர்தம் நாட்டியங்கள் யாவும்
நந்தனவன் காளிங்க நடனத்தைக் காட்டும்;
இடவலமாய்த் தலையாட்டும் மழலையர்கள் எல்லாம்
இம்மண்ணை “உண்ணா” மறுப்பைநினை வூட்டும்;
கிடந்திங்கே சிரிக்கின்ற குழந்தையர்கள் எல்லாம்
கிருட்டிணனின் ஆலிலைத்தோற் றத்தைநினை வூட்டும்;
மருண்டவிழிப் பார்வையுடன் திரிகின்ற மழலை
மாயனவன் விளையாட்டு முகத்தைநினை வூட்டும்;
சுருள்குழலைக் கொண்டிட்ட மழலையர்கள் எல்லாம்
சுந்தரமாம் பீலியுடைக் கண்ணனெழில் காட்டும்;
உருண்டிங்கே அழுகின்ற குழந்தைவத னங்கள்
உரல்சிறைக்குள் ளாகிவிட்ட உயரழகைக் காட்டும்;
துருதுருீ வென் றிருக்கின்ற தூய்மழலை யாவும்
தோற்றத்தில் எழில்கண்ணன் உருவம்தா னாகும்!
– கே.பி.பத்மநாபன், கோவை.
—————————————————————————
இதுவே மருந்து !
தொற்றிவரும் நோயழிக்கத் தோன்றாத் துணையானைப்
பற்றிடுக பாதம் பணிந்துடனே:- முற்றிலுமா
அல்லல் அகற்றி அருளும் பரமன்தான்
நல்ல மருந்தென்றே நம்பு.
பாவங்கள் பண்ணியதால் பற்றிவரும் நோதீர
நாவதனில் உண்டிங்கே நன்மருந்து:- சீவனையே
காக்கின்ற நாமம்தான் கண்ணன் திருநாமம்;
நாக்கிழைய நாளும் நவில்.
முன்னை வினைப்பயனால் முற்றி வருநோயும்
உன்னை அழிக்கா(து) உயிர்காக்க- அன்னையினும்
சாலப் பரிந்தூட்டும் சாந்தமுக மாதவனின்
கோலத் திருவடியைக் கொள்.
ஞாலம் முழுமையும் ஞானம் அடைந்திந்த
ஆல விடநோயை ஆர்த்தழிக்க- காலத்தின்
நன்மருந்து நாரணனின் நற்பாதம் என்றுணர்ந்தால்
வென்றிடலாம் நோயை விரைந்து.
– கே.பி.பத்மநாபன், கோவை.
———————————————————————-
கண்ணன் எழில்
குழலழகு மழைமுகிலின் கருமையெழில்; விழிகள்
குவளையெழில் செழித்திட்ட கொள்ளையெழில் ; கோவைப்
பழமதனைப் பழிக்குமெழில் இதழெழில்தான் ; குழிகள்
படைத்திட்ட கன்னமெழில் பேரெழில் காண் ; பேசும்!
மழலை மொழி கிளிமொழியைப் பழிக்குமெழில்; நடையோ
மயக்குமெழில் நடனம்போ லானயெழில்; இரண்டு
கழலினிலும் பவழத்தின் தண்டையெழில்; சேர்ந்த
கண்ணனெழில் கண் மயக்கும் கவினெழிலே தான்; காண்!
குழலூதி ஆநிரையைக் காத்தயெழில்; குழைவாய்க்
குழைந்தபடிக் கோபியரை மயக்குமெழில்; ஆங்கே
அழகாகக் காளியன்மேல் ஆடியநல் லெழில்; தான்
ஆலிலையின் வழவழப்பில் கிடந்திட்ட எழில்; காண்
முழங்குமிடி மழையினிலே மலைக்குடையை உயர்த்தி
முழுதாக மன்னுயிரைக் காத்திட்ட எழில்தான்;
தொழ நினைக்கும் முன்னரிங்கே தோழனென வந்து
தொய்வழியக் காப்பதுதான் கண்ணனெழில் காண் ; காண்!
* (மொத்தம் 46 ழ கரங்களை உள்ளடக்கிய கவிதை)
– கே.பி.பத்மநாபன், கோவை.
*நரத்தனம்– மனிதத்தன்மை
———————————————————————-
அநுக்ரஹம் செய்வாய் அநுமனே!
அநுக்ரஹம் செய்வாய் அநுமனே!
ஆஞ்சநேயனே! ராம தூதனே!
நவக்ரஹ வினைநாடாமல் எனை
சுபக்ரஹம் தனில் சோபிக்க வைப்பாய்!
இகபர சுகத்தை இனிதே கொடுப்பாய்!
அநுக்ரஹம் செய்வாய் அநுமனே!
. பாரதப் போரில் பார்த்தன் கொடியில்
மாருதி இருந்தாய்! மகத்துவம் புரிந்தாய்!
எத்தனை வம்பு புரிந்தது அம்பு!
எல்லாம் ஒடுங்கச் செய்ததுன் தெம்பு!
உன்னால் முடியாக் காரியம் இல்லை!
உத்தமா! நீதான் ஆற்றலின் எல்லை!
தனிமையில் ஜானகி தவித்திடும் போதில்
அநுமனே! நீதான் அல்லல் தவிர்த்தாய்!
கடலைக் கடந்தாய்! கணையாழி தந்தாய்!
காவிய ராமன் புகழை வளர்த்தாய்!
அஞ்சனை புதல்வா! ஆற்றலின் முதல்வா!
அழகிய ராமனின் உயிர்த் துணைவா!
மாருதியே! என்றும் நீ கதியே! உன்
மனமே ராமனின் சந்நிதியே! அதை
வலம் வரத் தருவாய் அநுமதியே! பக்தி
வானில் நீயே முழுமதியே! எம்
வாழ்வில் தருவாய் நிம்மதியே! தினம்
வழங்குக திருவருள் வெகுமதியே!
– கவிமாமணி மதிவண்ணன்
———————————————————————-
என் ஆஞ்சனேயன்….
வாலிலும் எமன்கொண்ட மறவன்! – சொல்லின்
சூலிலும் நயம்கண்ட துறை அனுமன்
காற்றையும் படகாக்கும் கலைஞன்! – கூற்றின்
ஆற்றலைப் பொடியாக்கும் அறிஞன்!
இராமன்தன் துணைபிரிந்த போது, – அடையும்
இலக்கின்நல் வழிசொன்ன சாது!
வராமல்சுக் ரீவனிருந்த நேரம் – இலக்குவன்
மனக்கோபம் தணித்தசொல் சாரம்!
கடலையா தாண்டினான் அனுமான்? – நம்-பவக்
கடலையன்றோ மாற்றினான் பெம்மான்!
வடமாலை (வடசரம்) சீதைகையால் அணிந்தான்! – இன்றோ
வடைமாலை சரம் சரமாய்ப் புனைந்தான்!
சீதைக்கே, ஆறுதலாய்க் கணையாழி! – தந்தவன்
திவ்யநாமம் சொல்லப்-போம்
வினை ஆழி!
காதையிலே ராமநாமம் சொல்விருந்து! – அங்கிவனைக்
கண்டுகொண்டு வரம்பெறுவோம் இங்கிருந்து!
– கவியோகி வேதம்
—————————————————————————————————–
ஆஞ்சநேயர் ஆராதனை!
ஐம்பெரும் சக்தியில் ஒன்றான வாயுக்கும்
அஞ்சனா தேவிக்கும் பிறந்த தேவா!
ஐம்பொறி அவித்திட்ட ஆண்மையின் வடிவான
அதிபிரம்மச் சாரியே ஆஞ்சநேயா!!
2. மாண்டவரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மருந்துள்ள
மலையையே தூக்கிவந்த பலசாலியே!
ஆண்டாண்டு காலமும் சிரஞ்சீவியாய் வாழ
அண்ணலிடம் வரம்பெற்ற அருள்ஞானியே!!
3. சேதுவைத் தாண்டியே இலங்கைக்குப் பாய்ந்திட்டு
தேசமெங்கும் தேடிப் பார்த்த தீரா!
சீதையைக் கண்டபின் கணையாழி தந்தபின்
ஜெயத்துடன் வந்திட்ட ராமதூதா!!
4. இராவணன் அவையிலே இருக்கை தராததால்
எழில்வாலைச் சுருட்டிவைத்து இருக்கையாக்கி
அராஜகன் நிலைக்குமேல் அரசன்போல் அமர்ந்துகொண்டு
அவன் பிழையை இடித்துரைத்த அஞ்சாநெஞ்சன்!!
5. வானரப் படைகளின் சேனாதி பதியாகி
வன்பகையைப் போரிட்டு வென்றவீரன்!
வானவரும் வாழ்த்திடவே ராமன்முடி சூடியதும்
மாணடியில் தொண்டனான ஆஞ்சநேயன்!!!
6. ஸ்ரீராம ஜெயம் என்ற ஆதார மந்திரத்தை
ஜீவனாய் சுவாசிக்கும் ராமதூதன்!
ஸ்ரீராமன் உருவத்தை இதயத்தில் சுமந்துள்ள
ஸ்ரீஆஞ்ச நேயரைநாம் தினந்தோறும் வணங்கிடுவோம்!
-சந்தக் கவிஞர் கு.ம. கிருஷ்ணன்
————————————————————————————————-
மாருதியே நீ கதியே
அநுக்ரஹம் செய்வாய் அநுமனே!
ஆஞ்சநேயனே! ராம தூதனே!
நவக்ரஹ வினைநாடாமல் எனை
சுபக்ரஹம் தனில் சோபிக்க வைப்பாய்!
இகபர சுகத்தை இனிதே கொடுப்பாய்!
அநுக்ரஹம் செய்வாய் அநுமனே!
பாரதப் போரில் பார்த்தன் கொடியில்
மாருதி இருந்தாய்! மகத்துவம் புரிந்தாய்!
எத்தனை வம்பு புரிந்தது அம்பு!
எல்லாம் ஒடுங்கச் செய்ததுன் தெம்பு!
உன்னால் முடியாக் காரியம் இல்லை!
உத்தமா! நீதான் ஆற்றலின் எல்லை!
தனிமையில் ஜானகி தவித்திடும் போதில்
அநுமனே! நீதான் அல்லல் தவிர்த்தாய்!
கடலைக் “கடந்தாய்! கணையாழி தந்தாய்!
காவிய ராமன் புகழை வளர்த்தாய்!
அஞ்சனை புதல்வா! ஆற்றலின் முதல்வா!
அழகிய ராமனின் உயிர்த் துணைவா!
மாருதியே! என்றும் நீ கதியே! உன்
மனமே ராமனின் சந்நிதியே! அதை
வலம் வரத் தருவாய் அநுமதியே! பக்தி
வானில் நீயே முழுமதியே! எம்
வாழ்வில் தருவாய் நிம்மதியே! தினம்
வழங்குக திருவருள் வெகுமதியே!
– கவிமாமணி .மதிவண்ணன்
