துரோணர் – முனைவர். இரா.வ.கமலக்கண்ணன், காஞ்சிபுரம்.
இதிகாசங்கள் இரண்டு. ஒன்று இராமாயணம். இன்னொன்று மகாபாரதம். வேதங்களின் அர்த்தங்களை எல்லாம்மிக எளிதாக இந்த இதிகாச புராணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வேதங்களைத் தொகுத்த வியாசரே மகாபாரதம் என்கிற இதிகாசத்தை இயற்றினார். ஒரு லட்சம் சுலோகங்களால் ஆன மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் இமயமலையை ஏடாக கொண்டு எழுதினார் என்கிற செய்தி உண்டு. மகா பாரதத்தை ஐந்தாவது வேதம் என்றே சொல்வார்கள். இந்த இதிகாசத்தில் இல்லாத தர்மங்கள் இல்லை. இதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனித குலத்துக்கு மிக நுட்பமான செய்திகளைச் சொல்கின்றது. இக்கட்டுரையில் துரோணரைப் பற்றியும் கடோற்கஜனைப் பற்றியும் காண்போம்.
கங்கைக் கரையில் பரத்துவாசர் தவம் செய்கையில், மேனகையைக் கண்டு சிறிது கலங்க, அவர் மூலம் பிறந்தவர் துரோணர். துரோண கும்பத்தில் இருந்து தோன்றியதால் துரோணன்.
துரோணர் தந்தையிடமே, சகல வித்தைகளையும் கற்றார். பின் பரசுராமரிடம் படைக்கலப் பயிற்சி பெற்றார். அதன் பின் அக்னிவேய்ச முனிவரிடம் பல கலைகளையும் பயின்றார். அப்பொழுது பாஞ்சால நாட்டரசன் மகன் துருபதனும் உடன் கல்வி கற்றான். அவனுக்கு ஏற்படும் ஐயங்களை இவர் தெளிவிப்பார். அதனால் அவன் மகிழ்ந்து, “துரோணரே! நான் அரசகுமாரன். என் தந்தை மறைவுக்குப் பின் நான் அரசனாவேன். அப்பொழுது உமக்குப் பாதி அரசைத் தருவேன்” – என்று கூறினான். கற்று முடிந்த பின் இருவரும் பிரிந்தனர்.
பின் துரோணர் கிருபரின் தங்கை கிருபியை மணக்க, சிவபிரான் அருளால் ஓர் ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தை குதிரை போல் கனைத்ததால், அசுவத்தாமன் என்று பெயரிட்டனர். துரோணர் வாழ்வில் வறுமை. குழவிக்குப் பால் இல்லை. அதற்குப் பதில் மாப்பாலையே தாய் புகட்டினாள். தன்னுடைய குழந்தைக்கு பருகுவதற்கு பால் இல்லாததை அறிந்து மிக வருந்தினார். இப்படிப்பட்ட ஏழ்மை நிலையை தனக்கு வந்து விட்டது என்கின்ற துக்கத்தில் அவர் தவித்தார். அப்பொழுது அவருடைய மனைவி அவருக்கு நினைவு படுத்தினாள்.” துருபத மன்னன் உங்களுடைய இளமைக்கால நண்பன் தானே. நீங்கள் அவனிடத்தில் சென்றால் நம்முடைய துன்பங்கள் தீருமே.. அவனை நீங்கள் பார்த்த மாதிரி இருக்கும்.. ஒரு உதவி கிடைத்தது மாதிரியும் இருக்கும். குறைந்தபட்சம் நமக்கு ஒரே ஒரு பசுமாடு இருந்தால் கூட, நம்முடைய குமாரனுக்கு நாம் பசும்பால் தரலாமே ” என்று சொன்னாள் .அவளுடைய ஆலோசனை துரோணருக்கு சரியாகத்தான் பட்டது.துருபதனிடம் சென்று ஒரு பசு கேட்டார். அவன் இகழ்ந்து இவரைப் பேசினான். உடனே இவர் வெகுண்டு, “துருபதா! நீ அன்று கூறியபடி பாதி அரசு பெற நான் வர வில்லை. என்னை இகழ்ந்த உன்னை என் சீடன் தேர்க்காலில் கட்டி வருவான்” என்று கூறிச் சென்றார்.
பின்னர் மைத்துனர் கிருபர் உள்ள அத்தினாபுரத்தை அடைந்தார். நகர எல்லையில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குருகுலக் குமரரைக் கண்டார். அவர்கள் கிணற்றில் போட்ட பந்தையும், மோதிரத்தையும் – குச்சிகளைச் செலுத்தி, மந்திரித்து எடுத்துக் கொடுத்தார். இவர் திறமையைக் கேள்விபட்ட வீடுமர் இவரையே விற்பயிற்சி அளிக்க நியமித்தார். அரங்கேற்றம் முடிந்தது. குமாரர்கள் குருதட்சிணையாகப் பொன்னும் மணியும் தந்தனர். ஆனால் இவர், “எனக்கு உரிய குருதட்சினை, என்னை அவமதித்த துருபதனைக் கட்டி வருவதே” – என்றார். முதலில் சென்ற துரியோதனாதியர் தோற்றுத் திரும்ப, விசயன் சென்று, வென்று, துருபதனைக் கட்டி வந்து நிறுத்தினான். உடனே துரோணர், “துருபதா! நீஅன்று சொன்ன சொல் தவறினாய்; ஆனால் நான் உனக்குப் பாதி அரசாட்சியைத் தருகிறேன்” – என்று இகழ்ந்து கூறினார். அவமானமடைந்த துருபதன் யாகம் செய்து, துரோணரைக் கொல்ல ஒரு மகனையும் (திட்டத் துய்மன்) விசயனை மணக்க ஒரு மகளையும் (திரௌபதி) பெற் றான். அம்மகன் துரோணரிடமே வந்து கல்வி கற்றான். “மரணம் இவனால் தனக்கு என்று அறிந்தும்”, ஆசிரியருக்குரிய பண்புப்படி இவர் அவனுக்குக் கற்பித்தார்.
பின் ஐவரும் திரௌபதியை மணந்து, இந்திரப்பிரத்த நகரில் இராசசூய யாகம் செய்தபோது துரோணர் கௌரவிக் கப்பட்டார்.
பின் பாரதப்போர் நிகழுகையில் முதல் 10 நாள் வீடுமர் சேனாதிபதியாக இருந்து சாய்ந்தார். அதன்பிறகு துரோணர் அப் பொறுப்பேற்றார். 11, 12 ஆம் நாள் போர் முடிந்து, 13 ஆம் நாள் போரில் அபிமன்யுவிடம் தோற்றார்.“வெல்லவந்த துரோணமாமுனி விறலழிந்தது குரு எனும்சொல்லழிந்தது வில்லழிந்தது தேரழிந்தது தொடைகளால்”– 13 ஆம் போர்ச்சருக்கம் -25
அந்நிலையில் மீளவந்து அபிமன்யுவின் வலக்கையை வாளால் வெட்டினார். கர்ணன் பின்புறத்திலிருந்து அபிமன்யுவின் வில்லை அறுத்தான். அந்நிலையிலும் ஆயிரம் வீரர்களை அவன் அழித்தான். இறுதியில் செயத்திரதன் அவனைக் கொன்றான். பின் 14 ஆம் நாளில் விசயன் செயத்திரதனைக் கொன்றான்.
15ஆம் நாள் போரில் துரோணர் பெரும்போர் செய்து பல ஆயிரம் வீரரை அழித்தார். அந்நிலையில் மாளவன்மாவின் அசுவத்தாமா என்னும் யானையை வீமன் கொன்றான். கண்ணபிரான் தருமரிடம்,அசுவத்தாமா ஹத: குஞ்சர: என்று கூறும்படி சொல்ல, தருமரும் அவ்வாறே கூற, துரோணர் முதல் பகுதியைக் கேட்ட அளவின் தம் மகன் அசுவத்தாமன் இறந்தான் என எண்ணிப் போர் செய்யாமல் தளர்ந்து யோக நிலையில் இருக்க, திருட்டத்துய்மன் உடனே சென்று வாளால் அவர்தலையை வெட்டினான். அப் பொழுது ஒரு சோதி அவர் தலையைப் பிளந்து கொண்டு விண் ணில் சென்றது. 400 ஆண்டுகள் வாழ்ந்த “வில்லாரை எண்ணில் விரற்கு முன்நிற்கும் வீரர்” சாய்ந்தார்.
இனி கடோற்கஜன் குறித்து சில செய்திகளைப் பார்ப்போம்.
வீமனுக்கும் இடும்பிக்கும் இடும்ப வனத்தில் பிறந்தவன் இவன். ஐவரும் ஷேத்திரகீயம் செல்லப் பிரியும்போது, கடோற்கசன் வணங்கி,“நான் என் தாயுடன் இடும்பவனம் செல்வேன்; நீங்கள் நினைக்கும் போது வந்து உதவுவேன்” – என்று கூறி விடைபெற்றான்.
பின்னர் இந்திரப் பிரத்த நகரில் தருமர் இராசசூய யாகம் செய்ய 4 திக்கிலும் தம்பியரை ஏவி, அரசர்களை வென்று வரச் சொன்னார். அதன்படி தெற்குத் திக்குக்குச் சென்ற சகாதேவன் அங்குள்ள அரசரை வென்று தென் கடலை அடைந்து கடோற்கசனை நினைத்தான். அவன் உடனே அங்கு வர,’மகனே! இலங்கை சென்று வீபீடணரிடம் கப்பம் வாங்கி வா” எனக்கூற, அவனும் சென்று கேட்டான். விபீடணரும் மகிழ்ந்து, யாக சாலையில் வைக்க 14 தங்கப் பனைமரங்களைக் கொடுத்தனுப்பினார்.
அதன்பின் வனவாச காலத்தில் திரௌபதி விரும்பியபடி குபேரனுடைய சைத்ர ரதம் என்னும் நந்தவனத்தில் உள்ள சௌகந்திக மலரைக் கொணர வீமன் தருமரிடம் சொல்லாமல் சென்று, அங்கு பாதுகாவலராக இருந்த ஓர் இலட்சம் அரக்கருடன் போரிட்டான். சிலர் குபேரனிடம் சென்று இவ்விதம் கூற, அவன் தன் மகன் உருத்திரசேனனை அனுப்பி வீமன் விரும்பிய மலர்களைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னான்.
இந்நிலையில் தம்பியைக் காணாத தருமர் வருந்தி, கடோற்கசனை நினைக்க, அவன் வந்து தருமரைத் தூக்கிச் சென்று குபேரனின் நந்தவனத்தில் சேர்த்தான். பின் அனைவரும் வனத்திற்குத் திரும்பினர். இதே போல மீண்டும் ஒரு முறை கடோற்கசன் வந்து உதவினான்.
பாரதப் போரில் 13 ஆம் நாள் அபிமன்யு வீர மரணம் அடைய, விசயன் வருந்தி,“செயத்திரதனை மறுநாள் மாலைக்குள் கொல்வேன்” – எனச் சபதம் செய்ய, அன்று இரவு கண்ணபிரான் விசயனை அழைத்துக் கொண்டு கயிலையை அடைந்து, புதிய வில்லையும், பாசுபதக் கணையையும் பெற்று வந்தார். இதற்கிடையில் தருமர் கடோற்கசனைப் பார்த்து, “நாளை மாலைக்குள் செயத்திரதனைக் கொல்வதாக விசயன் சபதம் செய்திருப்பதைத் துரியனிடம் சொல்லிவிட்டு வா” என்று தூதாக அனுப்ப எண்ணிக் கூறியபோது, அவன்,“பெரியப்பா! இது அறமா? என் தம்பி அபிமன்யுவை இன்று பகலில் நடந்த போரில் பலரும் சேர்ந்து கொன்றார்களே! இப்போது இச்செய்தியை நான் சென்று சொன்னால், அவர்கள் செயத்திரதனை எங்காவது ஒளித்து வைத்து விடுவார்களே, என் சித்தப்பா என்ன செய்வார்? அவர் செய்த சபதம் தவறுமே!” என்றான்.
அது கேட்ட தருமர்,“மகனே! நீ தயங்க வேண்டாம். பகைவராயினும் நாம் உண்மையைச் சொல்வதே தருமம்.; விசயன் நாளை எவ்வாறேனும் செயத்திரதனைக் கொல்வான்; ஐயம் வேண்டாம்” – என்று அறத்தைக் கூறி அனுப்பி வைத்தார்.
கடோற்கசன் தூது
அதன்படி அவன் துரியனின் பாசறையை அடைந்து,”நாளை மாலைக்குள் என் சிற்றப்பா சயத்திரதனைக் கொல்வார்; இல்லையெனில் தீயில் விழுந்து மாள்வார்” என்று கூறினான். அது கேட்ட துரியன்,”ஏ! அரக்கனே! என் மைத்துனன் கணையால் நாளை விசயன் மாள்வது உறுதி என்று போய்ச் சொல்” – என்றான். கர்ணன் நான் ஒருவனே அனைவரையும் அழிப்பேன் என்றான்.
அது கேட்ட கடோற்கசன், “மூடர்களே! உங்கள் அனைவரையும் நான் ஒருவனே அழிப்பேன்; ஆனால் தருமர் என் வலிமையைக் காட்ட வேண்டாம் என்று கூறினார். அதனால்தான் பொறுக்கிறேன்” என்றான். அது கேட்ட துரியன், “அரசர்களே! இவன் அரக்கி மகன். எனவே அரசராகிய நாம் இவனுடன் பேசுவது தகாது” என்று கேவலமாகக் கூறினான். அது கேட்ட கடோற்கசன் நகைத்து,“ஆம் நான் அரக்கி மகன்தான்; ஆனால் அரக்கராகிய நாங்கள் என்ன செய்ய மாட்டோம் தெரியுமா?”
அந்த உரை மீண்டிவன் கேட்டாங்கவனை நகைத்துரைப்பான்
அரக்கரேனும்சிந்தனையில் விரகெண்ணார்
செருமுகத்தில் வஞ்சனையும் செய்யாரையா
வெந்திறல் கூர் துணைவருக்கு விடமருத்தார்
நிரைக்கழுவில் வீழச்செல்லார்
உந்து புனலிடைப் புதையல் ஓரூரில்
இருப்பகற்றார் உரையும் தப்பார்
செழுந்தழல்வாழ் மனைக் கொளுவார்
செய்ந்நன்றி கொன்றறியார் தீங்கு பூணார்
அழுந்து மனத்தழுக்குறார்
அச்சமுமறடறருளின்றிப் பொய்ச்சூதாடார்
கொழுந்தியரைத் துகிலுரியார்
கொடுங்கானம் அடைவித்துக் கொல்லஎண்ணார்
எழுந்தமரில் முதுகிடார் இவை எல்லாம்
அடிகளுக்கே ஏற்ப என்றான்.
(வில்லிபாரதம் – 13 ஆம் போர்ச்சருக்கம், 243, 244.)
துரியோதனன் செய்த தீய செயல்களை எல்லாம் வரிசையாகக் கூறி, இவை எல்லாம் அடிகளுக்கே” ஏற்பவை என்று எள்ளி நகைத்துக் கூறித் திரும்பினான். (பாரதத்தில் 4 தூது. 1) உலூகன் 2) சஞ்சயன் 3) சுவாமி 4) கடோற்கசன்). பின்னர் மறுநாள் (14) சயத்திரதனை அருச்சுனன் கொல்ல, வெகுண்ட துரியன் இரவிலும் போர் செய்யச் சொன்னான். அவ்விரவில் கடோற்கசன், அலம்பன், அலாயுதன் ஆகிய அசுரர்களைக் கொன்றான். கர்ணனை எதிர்த்து மாயையால் நெருப்பு மழையைச் சிந்தினான்.
பல ஆயுதங்களை வானிலிருந்து விழச் செய்தான். அவனுடைய ஆற்றலை ஒருவனாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனவே கர்ணனிடம், “கர்ணா! இன்று இரவு கழிவதற்குள் இந்தஅரக்கன் நம் சேனை முழுவதையும் அழித்து விடுவான்; எனவே இந்திரன் உனக்குத் தந்த சக்தி ஆயுதத்தை இவன் மேல் ஏவிக் கொல் – என்று வெகுண்டு கூறினான். அதன்படி கர்ணன் செய்ய, கடோற்கசன் மாண்டு வீழ்ந்தான். இங்ஙனம் வீரப்போர் புரிந்து இவன் வீர மரணம் எய்தினான்.
