Learned From Lock down! லாக் டவுன் – இயற்கை நமக்குத் தந்த வாய்ப்பு!
– பேராசிரியர். எஸ்.கோகுலாச்சாரி
ஒரு பொருளின் மதிப்பு ஒவ்வொருவருக்கும் இரண்டு நேரங்களில் மட்டுமே தெரிய வரும்.
ஒன்று, அப்பொருள் கிடைக்காதபோது. இரண்டாவது, அப்பொருளை இழந்தபிறகு.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே அதன் மதிப்பை நாம் எப்போதும் உணர்வதில்லை.
அதை உணரும் நேரம் தான் இப்பொழுது.
அன்பு, சகோதரத்துவம், உதவும் மனம், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுதல் என எத்தனை விஷயங்களின் முக்கியத்துவத்தை இந்தச் சந்தர்ப்பம் நமக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது.
சிலர், இதனைச் சங்கடமாக உணர்கிறார்கள். எரிச்சலடைகிறார்கள். பதட்டமடைகிறார்கள். பிறரையும் அச்சப்படுத்துகிறார்கள்.வதந்திகளையும் பரப்புகிறார்கள்.
குறிப்பாக இப்பொழுது கைபேசிகளில் பொழுது விடிந்து பொழுது போனால், வந்து கொட்டுகிற செய்திகள் ஒருவிதமான மன அழுத்தத்தை, ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துகின்றன. இதில் பல செய்திகள் போலியான செய்திகள். இப்பொழுது இந்த தொற்று நோய் பரவுவதை விட, இந்தப் போலிச் செய்திகளும், விமர்சனங்களும் அவரவர்கள் விருப்பத்திற்கு தருகின்ற மருத்துவ ஆலோசனைகளும், பெரும்பாலான உடல் நோயாளிகளை மன நோயாளியாகி விடுகின்றன. அதைவிட, தொலைக்காட்சியில் வருகின்ற செய்திகள் மிக மோசம். இது விழிப்புணர்வு தருவதற்குப் பதிலாக அச்சத்தையே தருகின்றன.
இது அச்சப்படும் நேரமல்ல. ஒரு சவாலான நேரம்.
சங்கடப்படும் நேரம் அல்ல. சமாளிக்க வேண்டிய நேரம்.
இன்று காலை அழகான ஒரு பதிவு இது குறித்து வந்துள்ளது.
ஏன் பதற்றம் அடைகிறார்கள்? இதுவும் ஒரு வகையில் நம்மை உணர்வதற்கான -நம்மைச் சுற்றி உள்ளவர்களை உணர்வதற்கான -இந்த உலகத்தின் நிலையாமையை உணர்வதற்கான- எப்பேர்பட்ட விஞ்ஞானத்தையும் மண்டியிடச் செய்யும் இயற்கையின் ஆற்றலை உணர்வதற்கான- நம்முடைய அலட்சியத்தை நமக்கு தெரிவிப்பதற்கான- நம்முடைய முன்னெச்சரிக்கைக்கான முனைப்பான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து கொள்வதற்கான – ஒரு அற்புதமான வாய்ப்பு தானே.
சொந்த வீட்டில் அமர்ந்து கொண்டு -கால்மேல் கால் போட்டுக்கொண்டு- டிவி பார்த்துக்கொண்டு- உலகத்தையே காப்பாற்றுகின்ற ஒரு அரிய சந்தர்ப்பம் நம்மைப்போன்ற சிலருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அதே சமயம் ஒருவேளை உணவுக்கும் வகை இல்லாமல் தவிக்கும் கூட்டம் கண்டு மனம் பதறுகிறது.தொழில் இலை.பணம் இல்லை.
பல மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி கல்வி என்பது நின்றுவிட்டது. பல மாணவர்கள் படிப்பையே மறந்துவிட்டார்கள். இது அவர்கள் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கப் போகிறது.
இந்த இரண்டாம் அலை இந்த அளவுக்கு வீரியத்தோடு வெளிப்படுவதற்கு காரணம், மக்கள் நோயின் தன்மையை மறந்தது தான். எத்தனையோ இழப்புகளை கண்ணெதிரே பார்த்த பின்னாலும் இந்த நோயின் தன்மை குறித்து அறியாது நமக்கு ஒன்றும் வராது என்ற நினைப்பில், நாம் மிகப் பெரிய ஆபத்தில் நம்மையும் தள்ளி, மற்றவர்களையும் தள்ளிக் கொண்டிருக்கிறோம். பெற்றோரை இழந்த குழந்தைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும் எத்தனை பேர் தெரியுமா? அறுநூறு மருத்துவர்கள் மரணமடைந்தார்கள் என்கிற செய்தி நம்மை கலங்க வைக்கிறது.என்னதான் காவல்துறை கட்டுப்பாடு இருந்தாலும் கூட அதையும் மீறி சுற்றுபவர்கள் தங்களை அறியாமலேயே இந்த தொற்று நோயைப் பரப்பும் வேலையைச் செய்கிறார்கள்.
இந்த விஷயத்தில் இரண்டு செயல்கள் நம்மை அறியாமலேயே நடக்கின்றன.
நாம் எதற்கும் கட்டுப்படாமல் வெளியே சுற்றுவதன் மூலம்- அல்லது- பிறர் சுற்றுவதை ஊக்குவிப்பதன் மூலம்-அல்லது சுற்றத்தான் செய்வேன்; அது எனது சுதந்திரம் என்று பிடிவாதம் பிடித்து ஆயிரம் விளக்கங்கள் சொல்வதன் மூலம்……….. நாம் ஒருவேளை பாதிக்கப்படாமல் இருந்தாலும் மற்றவர்களை மிக எளிதாக பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றோம்.

நாம் வீட்டுக்குள்ளே இருக்கும்போது, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதோடு, மற்றவர்களையும் காப்பாற்றும், மறைமுக உதவியையும் நம்மை அறியாமல் செய்தவர்களாகிவிடுகிறோம்.
ஆனால் இவ்வளவு பேசினாலும் கூட, இதன் மறுபக்கம் கொஞ்சம் பயங்கரமானது தான். வெளிமாநில தொழிலாளர்கள் தங்க இடமின்றி தவிக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.
அன்றாடம் கூலி வேலை செய்து, சாயங்காலம் கூலி கிடைத்தால்தான், தங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற நிலையில் உள்ளவர்கள் நம் நாட்டில் ஏராளம்.
அவர்களுடைய வாழ்க்கை நிலையை இன்றைய நிலை புரட்டிப் போட்டிருக்கிறது.
வறுமையால் வாடும் அவர்களுக்கு, நோய் குறித்த அச்சத்தை விட, நாளைக்குச் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்கிற அச்சம்தான் அதிகமாக இருக்கிறது.
அதனால்தான் பட்டினியையும், வறுமையையும் நோய் என்றே நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
பல தொழிலாளர்களுக்கு வேலையில்லை. எனவே கூலியில்லை.அவர்களால் வெளியே போக முடியாது.
தங்களைவிட மற்றவர்களுக்கு பயந்து, பொருளாதாரமும் இன்றி, வீட்டில், அதுவும் மிகக் குறுகிய சிறிய இடத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
நம்முடைய அரசாங்கம் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு தன்னாலியன்றதை எல்லாம் செய்கிறது என்பது உண்மைதான். அது அரசாங்கத்தின் கடமையும் கூட.
இன்றுள்ள பதட்டமான நிலையில், அரசாங்கத்துக்கும் வேறு வழி இல்லை. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தால், எளிதாக சமாளிக்க முடியாது.
இந்த தொற்றுநோய், நம் கட்டுப்பாட்டை விட்டு போய்விட்டால் -சமுதாய தொற்றாக மாறி விட்டால்- பிறகு நம்முடைய பலத்தை விட, நோயின் பலம் அதிகமாகி விடும். மக்கட்தொகை மிகுந்த நம் நாட்டுக்கு மிகப் பெரிய சோதனையாக மாறிவிடும்.
ஒரு பக்கம் நோயைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். இன்னொரு பக்கம் அதன் பாதிப்புகளை நிவர்த்தி செய்தாக வேண்டும். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளே திணறுகின்றன.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு தான் வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து, நம்முடைய தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வேலைக்காகச் சென்றவர்கள் இந்த ஒரு வாரத்தில் பட்டபாடு சொல்லி மாளாது. ஆந்திராவுக்கு கட்டட வேலைக்காக சென்ற கூலித்தொழிலாளர்கள் பலர், நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு வந்து இருக்கின்றனர்.
கேரளாவில்(Kerala), நோய்த்தொற்று அதிகமானவுடன், அங்கே வேலை தேடிச் சென்ற கூலித் தொழிலாளர்கள், ரயில்வே டிராக் வழியாகவும், சாலைகள் வழியாகவும் நடந்தே, கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்த காட்சிகள் நம்முடைய மனதைப் பிசைய வைக்கின்றது.
தமிழ்நாட்டில் வேலை பார்த்து, சொந்த ஊர் போவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடியிருந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம், உடனடியாக சமுதாய கூடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, மற்றும் அத்தியாவசியத் தேவைகளை, தமிழ்நாடு அரசு அளித்து வருகின்றது.
இதைப்போலவே, தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள், எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை, அந்தந்த மாநிலங்களோடு கலந்துபேசி, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
மீனவர்கள் (Fisherman in Tamilnadu) பாடு ரொம்பவும் சிரமம்.
இந்த ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14ஆம் தேதி வரை வைத்திருக்கிறார்கள். அதற்கு பிறகு ஏப்ரல் 15ஆம் தேதி முதல், ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு, மறுபடியும் இந்த மூன்று மாத காலம் என்பது மிகப்பெரிய பொருளாதாரச் சிரமங்களை ஏற்படுத்தும். எனவே, இதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விவசாயம் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், பெரிய அளவு பாதிக்கப் பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பல ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பல்வேறு விதமான பூக்கள் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி முதலியவற்றை விவசாயம் செய்திருக்கிறார்கள்
ஊரடங்கு மற்றும் நோய் பரவல் அச்சத்தால் விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. அவர்களும் முள்வேலி வைத்து ஊர் கட்டுப்பாட்டோடு இருக்கின்றார்கள். பூக்களை எல்லாம் பறித்து சாலையில் கொட்டி விடுகின்றனர்.

தேநீர்கடைகள், குறைந்த நேரமே இயங்குவதால்,முழுவதுமாக விற்பனை செய்ய முடியாத நிலை. பால் வீணாகிறது.
இப்படிப் பலவிதமான பொருளாதார வாழ்வியல் இடர்களையும், சுமந்து கொண்டு, இந்த நோய்த் தொற்றினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய இக்கட்டான நிலையில், அரசாங்கத்தினுடைய பல உதவிகள், குறிப்பிட்டவர்களுக்குச் சென்று சேர்வதற்குக் காலதாமதம் ஆகலாம்.
ஆனால், நாம் நினைத்தால் இந்த நிலையை மிக எளிதாகச் சமாளிக்கலாம் .
கொஞ்சம் பொருளாதார ரீதியாக தாக்கு பிடித்துச் சமாளிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள்- அதாவது இரண்டு மூன்று மாதங்கள் பொருளாதாரத்தைச் சமாளிக்கக்கூடியவர்கள்- அல்லது கொஞ்சம் கையில் காசு சேமிப்போடு இருப்பவர்கள், தம்மைச் சுற்றியிருக்கும், தமக்கு நன்றாகத் தெரிந்த கூலி வேலை செய்பவர்கள், வேலை இல்லாமல் தவிப்பவர்கள்,- இப்படிப்பட்ட வர்களுக்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு பொருளாதார ரீதியாகவோ அல்லது தன்னிடம் இருக்கக்கூடிய அரிசி பருப்பு முதலிய பொருள்களை கொடுத்தோ- குறைந்தபட்சம் கைமாற்றாக வட்டியில்லாமல் கொடுத்தோ உதவலாம்.
நம் வீட்டில் வேலை செய்பவர்கள், நமக்கு நன்கு அறிமுகமான, தெருவில் விற்கக்கூடிய காய்கறி வியாபாரம் செய்பவர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்கள், அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிபவர்கள், தேனீர் கடை பணியாளர்கள், துணிக்கடை பணியாளர்கள் என பலருடைய நிலைமை மோசமாக இருக்கிறது.
நம்மில் சிலர், தெய்வாதீனமாக நிலைமையை சமாளிக்கக் கூடிய நிலையில் இருக்கிறோம். அரசாங்க உதவிகள் தாமதமாகும் போது, அதைப்பற்றி விமர்சனங்களைப் பிறகு செய்யலாம்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்வதால் மட்டும், அடுத்த வீட்டில் இருக்கக்கூடியவனுடைய பசி ஆறி விடப்போவதில்லை.
இப்பொழுது, நாம் நம்மிடம் இருக்கக்கூடிய பொருளைக் கொண்டு ஓரளவு உதவினால், இந்த நாடு இப்பிரச்சனையை மிக எளிதாக கடந்து விடும்.
அதிலும் அவசரத்தேவை, மருத்துவ உதவி மற்றும் மாத்திரைகள்.
ஒரு நண்பர், தன்னுடைய முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தார். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவசர மருத்துவ உதவிக்கு, தன்னுடைய வாகனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று தன்னுடைய தொடர்பு எண்ணோடு குழுவில் பதிவு செய்திருந்தார்.
இதைப்போல, நம்மிடம் இருக்கக்கூடிய நாம் தர விரும்புகின்ற உதவியைக் குறித்து பதிவு செய்தால்,யார் தேவையோ அவர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள்.
ஒருவருக்கு ஒருவர் உதவும் உன்னதமான நேரம். இப்படிப்பட்ட சிறு உதவிகளினால் இந்த நோயை மிக எளிதாக நாம் வென்று விடலாம்.
நம்மிடத்தில், எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். மதம் சார்ந்து, அரசியல் சார்ந்து, இனம் சார்ந்து, மொழி சார்ந்து -இப்படி ஆயிரமாயிரம் பிரச்சினைகள்.
ஆனால், இவற்றையெல்லாம் விவாதிக்க வேண்டும் என்று சொன்னால் கூட, நாம் உயிரோடு இருக்க வேண்டும். நாமும் நம்மைச் சார்ந்தவர்களும்,உயிரோடு இருப்பதற்கு உதவி செய்வது மிக இப்போதைய அத்தியாவசியமான தேவை.
அதற்கு மொழியோ, இனமோ, மதமோ எதுவுமே தடையாக இருந்துவிடக்கூடாது.
இவை எல்லாவற்றையும் உடைத்து விடுவது தான் மனிதநேயம். மனிதநேயத்திற்கு முன்னால் வேறு எதுவுமே ஒரு பொருட்டல்ல.
அந்த மனிதநேயத்தை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்ற அல்லது வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்த நேரம் இது.
இயற்கை ஒரு விதத்தில், நமக்கு மிக அரிதான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது. நாம் இதைப் பயன்படுத்திக் கொள்வோம்.
