பிராணாயாமம் முக்கியத்துவம் அதன் பயன்பாடுகள் – Pranayama – Proper Steps Benefits in Tamil
-டி. ரங்காசாரி, ஸ்ரீரங்கம்.
அனைத்து ஜீவ ராசிகளும் உயிர் வாழ்வதற்குத் தேவையான தூய காற்று, நாசிகள் வழியே நுரையீரல்களைச் சென்றடைந்ததும், நொடிப்பொழுதில் அசுத்தக்காற்றாக மாற்றம் பெற்று வெளிவரும் விநோதச் செயலைச் செய்யும் காரணகர்த்தாவான கடவுளை யாராவது வியந்து பாராட்டியதுண்டா?
உள்ளிழுக்கப்பட்ட தூய காற்று நுரையீரல்களைச் சென்றடைந்ததும் இதயத்திலிருந்து பெரிய, சிறிய ரத்தக்குழாய்கள் மூலம் அங்கு வந்துள்ள நீல நிறம் கொண்ட அசுத்த ரத்தத்தை தன்னிடமுள்ள பிராண வாயுவினால் சிகப்பு நிறம் படைத்த சுத்த ரத்தமாக மாற்றம் செய்துவிட்டு, அதனிடமிருந்த கரியமில வாயுவை தான் பெற்று, அசுத்தக்காற்றாக வெளிவருகிறது. நுரையீரல்களிலிருந்த அசுத்த ரத்தம் உள்ளிழுக் கப்பட்ட பிராணவாயுவினால் அசுத்தம் நீங்கப்பெற்று, சுத்த ரத்தம் என்கிற பெயருடன் இதயம் சென்று, அங்கிருந்து பெரிய சிறிய ரத்தக்குழாய்கள் மூலம் அனைத்து உறுப்புக்களையும் சென்றடைந்து, அவை நன்கு செயல்படச் செய்கிறது.
மதிப்பு மிக்க பிராணனை (மூச்சுக்காற்றை) யாம: (அடக்கிப் பிடிப்பதற்கு)“பிராணாயாமம்” என்று பெயர். ஏன் அடக்கிப் பிடிக்க வேண்டும் என்கிற வினாவிற்கு விடை திருமூலர் திருமந்திரத்தில் காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிபவர்களுக்கு கூற்றை உதைக்கும். குறியதுவாமே.
தூய காற்றை நாசிகள் வழியாக உள்ளிழுப்பதற்கு “பூரகம்” என்று பெயர். உள்வாங்கிய காற்றை சில நொடிகள் நுரையீரல்களில் தேக்கி வைப்பதற்கு “கும்பகம்” என்றும் அவ்வாறு அடக்கி வைக்கப்பட்ட காற்றை வெளியிடுவதற்கு “ரேசகம்” என்றும் பெயர்.
இக்காலத்து மனிதர்கள் ஒரு நிமிட நேரத்தில் 16 முதல் 20 முறை சுவாசிப்பதாக புள்ளி விவரக் கணக்கு.
பூரகத்தை சற்று நிதானமாகவும் கும்பக காலத்தை சிறிது நீடித்தும் சுவாசித்து வர பழகினால், ஒரு நிமிஷ நேரத்தில் 20 முறை சுவாசிப்பதை 15 முறையாகக் குறைத்துக் கொண்டு எஞ்சியுள்ள ஆயுளை கால் மடங்கு நீடித்துக் கொள்ள முடியும்!!
சில கட்டுப்பாடுகள்:
பகவத் கீதையில் கூறியபடி (ஙஐ-13) உடல், தலை, கழுத்து மூன்றையும் நேராக வைத்துக் கொண்டுதான் பிராணாயாமம் செய்ய வேண்டும். (ஸமம் காய சிரோ க்ரீவம்).
பிராணாயாமம் செய்யும்பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். பிராணாயாமம் செய்து முடித்து 1/4 மணி நேரத்திற்குப் பிறகு தான் உணவு உட்கொள்ள வேண்டும்.
மின்விசிறியின் கீழேயும், குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ள இடங்களிலும் பிராணாயாமம் செய்யக் கூடாது. நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில்தான் பிராணாயாமம் பயில வேண்டும்.
நாடி சுத்தி பிராணாயாமம்:
பிராணாயாமத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றில் இரண்டு வகைகளை மட்டும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.“நாடி” என்கிற சொல் ரத்தக்குழாய்களையும், நரம்புகளையும் குறிக்கும். நாடி சுத்தி பிராணா யாமத்தில் “கும்பகம்” சிறிதளவு கூடக் கிடையாது. பூரகமும் ரேசகமும் மட்டுமே உள்ளன.
இடது நாசியை வலது கை மோதிர விரலால் மூடிக்கொண்டு உள்ளிருக்கும் அசுத்தக் காற்றை வலது மூக்கின் வழியாக நிதானமாக வெளிவிட வேண்டும். (ரேசகம்). முழுமையாக வெளியேற்றியவுடன் அதே வலது மூக்கின் வழியாக தூய காற்றை நிதானமாக உள்ளுக்கு இழுக்கவும். (பூரகம்). பூரகம் முடிவுற்ற உடனேயே வலது நாசியை வலது கை கட்டைவிரலால் மூடிக்கொண்டு (கும்பகம் சிறிதும் இல்லாமல்) இடது மூக்கின் வழியே மூச்சை வெளியிட வேண்டும்.
(ரேசகம்). ரேசகம் முடிவுற்றவுடன் அதே இடது மூக்கின் வழியே தூய காற்றை நிதானமாக உள்ளிழுக்க வேண்டும். இது செய்து முடிக்க 1/2 நிமிஷ காலம் தேவைப்படும். ஆறு தடவைகள் மூன்று நிமிடங்களில் செய்து முடித்தால் போதுமானது.
சீதளி பிராணாயாமம்:
உடல் சூட்டை தணிக்க வல்லது இது என்பதை இதன் பெயரிலிருந்தே அறியலாம். நெடுந்தூரம் பிரயாணம் மேற்கொள்ளும் பொழுதும், கோடைக்காலத்திலும், தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காத பொழுதும் இந்த வகை பிராணாயாமத்தை செய்து பயன்பெறலாம். நாக்கை சிறிதளவு வாய்க்கு வெளியே தெரியும்படி வைத்து, அதை உதடுகளின் நடுவே குழல் போல் வைத்து, சிறிது ஓசையுடன் காற்றை நிதானமாக உள்ளிழுக்கவும்.
(பூரகம்) முழுமையாக இழுத்து முடிந்தவுடன் வாயை மூடிக்கொண்டு, முடிந்த அளவு கும்பகம் செய்து, முடிந்த பின்னர், மூக்குகளின் வழியே மெதுவாகக் காற்றை வெளிவிடவும். (ரேசகம்). 1/2 நிமிட நேரத்தில் ஒரு பிராணாயாமம் செய்து முடித்தாய் விட்டது. இது போல், ஆறு முறை செய்தால் போதுமானது.
ஸந்த்யாவந்தன காலங்களில் செய்யப்படும் பிராணாயாமம்:
“கும்பக” காலத்தில்“மந்த்ரம்” ஜபித்துக் கொண்டு செய்யப்படும் இது தனிவகைப்பட்டது.
இடது நாசி துவாரத்தை வலது கை “அநாமிகா” என்கிற மோதிர விரலால் அடைத்துக் கொண்டு நுரையீரல்களிலுள்ள அசுத்தக்காற்றை வலது மூக்கின் வழியே நிதானமாக வெளியிட வேண்டும்.
முழுவதும் வெளியிட்ட பின், வலது மூக்கை வலது கை கட்டைவிரலால் அடைத்துக் கொண்டு, இடது மூக்கினால் தூய காற்றை நிதானமாக உள்ளுக்கு இழுக்க வேண்டும்.
முழுவதும் இழுத்து முடிந்தவுடன், இரண்டு நாசித் துவாரங்களையும் மேற்சொன்ன இரண்டு விரல்களால் மூடிக் கொண்டு ஒம் பூ: என்று தொடங்கும் ப்ராணாயாம மந்த்ரத்தை ஒரு முறை மனதிற்குள் வாயைத் திறவாமல் ஜபித்து முடிந்தவுடன் வலது நாசி வழியாக மூச்சுக்காற்றை மெதுவாக வெளியிட வேண்டும். இப்பொழுது ஒரு பிராணாயாமம் 1/2 நிமிட நேரத்தில் செய்து முடித்தாயிற்று.
கங்கா, காயத்ரி, கீதா, கோவிந்தநாமம் ஆகிய “க” எழுத்தில் தொடங்கும் சொற்கள் மிகவும் புனிதம் வாய்ந்தவை.
ஆச்சரியப்படத்தக்க அதிசய உண்மைகள்:
1. உடலிலுள்ள சிறிய, பெரிய ரத்தக்குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்தால், அதன் நீளம் சுமார் 95,000 கிலோ மீட்டர். இது பூமத்ய ரேகையின் நீளத்தைப் போல் 2 1/2 மடங்கு.
2. உடலிலுள்ள ரத்தம் 5 முதல் 6 லிட்டர்கள்.
3. இதயத்தின் எடை சுமார் 300 கிராம்.
4. 11/2 நிமிட நேரத்தில் ரத்தம் ஒரு முறை உடலைச் சுற்றி வருகிறது.
5. ஒவ்வொரு நிமிடத்திலும் 10 லிட்டர் காற்றை உள்வாங்கி வெளியிடுகிறோம்.
6. தினசரி நாம் ஏறத்தாழ 23,000 மூச்சுக்கள் விடுகிறோம்.
——————————————————————————————————————–
நம்முடைய முன்னோர்கள் நம்முடைய வாழ்க்கையை சார்ந்த ஒவ்வொரு செயலையும் அர்த்தத்துடன் தான் உருவாக்கியிருக்கின்றனர். உணவுமுறை ஆகட்டும் உடற்பயிற்சி ஆகட்டும் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கின்றனர். தினமும் நாம் செய்கின்ற எளிமையான பயிற்சிகள் மூலம் நம்முடைய உடலையும் உயிரையும் முறையாக செதுக்க அவர்கள் உருவாக்கியது தான் பிராணாயாமம் என்கின்ற அற்புதமான மூச்சுப்பயிற்சி.
வேறு எந்த செயல்முறையாலும் தர முடியாத பல நல்ல நல்ல பலன்களையும், பயன்களையும் தருகின்ற பிராணாயாமம்(Pranayama) நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பிராணாயாம பயிற்சி நுரையீரலை சிறப்பான முறையில் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. இந்த பிராணாயாம பயிற்சிகளினால் சுவாசக் கோளாறு, சைனஸ், ஆஸ்துமா முதலிய நோய்களை குணமாக்க முடியும்.
நாம் தினசரி உணவில் எள் சேர்த்து கொள்ளலாமா படிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்றாடம் நாம் நொடிப்பொழுதும் விடாமல் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் இந்த மூச்சு விடுவதை ஒரு பயிற்சி ஆக்கி அதை செய்ய ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் அவசியமாகும். இதுவும் ஒரு வகை உடற்பயிற்சி தான். பொதுவாக காலை வேளையில் சுத்தமான ஆக்சிஜனை சுமந்து வரும் காற்றை நாம் அமைதியான இடத்தில் அமர்ந்து சுவாசித்து செய்யும் பயிற்சி நம்முடைய உடலுக்கு மட்டுமில்லாமல், மனதுக்கும் அமைதியைத் தரும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிராணாயாமம் செய்யலாம்.
இதை செய்வதன் மூலம் முதுமையை தள்ளி இளமையாக வைத்திருப்பதோடு ஆயுளையும் ஆரோக்கியமாகவே அதிகரிக்கிறது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 20 முறை குறையாமல் மூச்சை உள்ளிழுத்து அதே வேகத்திலேயே வெளியே விடுகிறான். ஆனால் மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியேற்றினால் மனிதனுடைய சராசரியான ஆயுள் காலத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய சூழ்நிலையில் பிராணாயாமத்தின் முக்கியத்துவம் :
இந்த மூச்சுக் காற்றையும் அல்லது பிராணாயாமத்தின் முக்கியத்துவத்தையும் நாம் அனைவருமே இத்தனை நாள் உணராமல் இருந்தோம். அதை உணர்த்தியதில் இந்த கொரோனா(corona) காலகட்டம் மிகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
முதல் அலையில் பொழுது பிராணாயாமத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம் நாம் உணர்ந்தாலும் இரண்டாம் அலையின் பொழுது நாம் உயிர் வாழ ஆக்சிஜன் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடிந்தது.
அதற்கு பிராணாயாமம்(Pranayama) போன்ற எளிய பயிற்சிகள் நாம் ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தால் இந்த கொரோனாவிலிருந்து ஓரளவுக்கு நாம் விடுபட அது நமக்கு உதவியாக இருக்கும் என்பது பல பேர் மரணத்தின் இறுதி வரை சென்று வந்தவர்களுக்கு அது நன்றாகவே விளங்கியிருக்கும். பிராணவாயு கிடைக்காமல் இன்று பலபேர் உயிரிழந்திருக்கின்றனர். பிராணவாயுவை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கும் இன்று நாம் தள்ளப் பட்டிருக்கின்றோம்.
நாம் உயிர் வாழ தேவையான முக்கியமான விஷயமாக இருக்கின்ற காற்றின் முக்கியத்துவத்தை இந்த கொரோனா நமக்கு உணர்த்தி இருக்கிறது.
இந்த கொரோனாவின் (Corona) இரண்டாம் அலையில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாகவும் உயிரிழந்தனர். பிராணாயாமப் பயிற்சியில் ஈடுபடும் போது மூச்சை உள்ளே இழுத்தல், அடக்குதல், விடுதல் இதன் மூலமாக நமது நுரையீரல் முழு காற்றின் கொள்ளளவை அடைகிறது. மூச்சை உள்ளே அடக்குவதால் ஆக்சிஜன் அதிக அளவு நுகரப்படுகிறது.
பிராணயாமா (Pranayama) பயிற்சியை தொடர்ந்து செய்தால் நன்மை கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நம்முடைய வலது மூக்கில் சூடான காற்றும் இடது மூக்கில் குளுமையான காற்றும் தென்படும். இந்த சூடான காற்றை உள்ளே இழுத்து இடது மூக்கின் வழியாக வெளியேற்றினால் நுரையீரல் பகுதியில் உள்ள குளுமையான காற்று வெளியேறும் இதன் மூலம் மூச்சு வாங்குவது தவிர்க்கலாம்.
இப்பொழுது பல பேர் யோகாசனப் பயிற்சியை முறையாக கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பிராணாயாமத்தை பற்றி சுவாமி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொன்ன அருமையான விளக்கம் :
இந்த பிராண வாயுவின் முக்கியத்துவத்தை தனக்கே உரித்தான எளிய நடையில் சிறந்த உதாரணங்களோடு கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆன்மீக சொற்பொழிவில் அழகாக கூறியிருக்கிறார்.
அவர் கூறிய தத்துவம் என்ன என்றால் மாட்டு வண்டி உங்கள் அனைவருக்குமே தெரியும்.
மாட்டுக்கு அறிவு உண்டு. வண்டிக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள மாட்டால் வண்டியை தானே பூட்டி கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டி தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது. வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவன் உள்ளான். அவன்தான் பூட்டாங்கயிறு கொண்டு வண்டியையும் மாட்டையும் இணைத்து இயக்குகிறார். பயணம் முடிந்த உடனேயே அந்த வண்டிக்காரன் இரண்டையுமே தனித்தனியாக பிரித்து வைத்து விடுவார்.
அதேபோல் நம் உடலானது அசித்து. ஆன்மாவிற்கு பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது. ஆக இறைவன், அவன்தான் வண்டிக்காரன். பிராண வாயு என்னும் பூட்டாங்கயிறால் உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டுள்ளார். வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையுமே தனித்தனியாக பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர். பிராண வாயு எனும் ஆக்ஸிஜனுக்கு இன்று மக்கள் அல்லல் படுவதை நினைத்தபோது கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களின் கதை நமக்கு நினைவுக்கு வருகிறது.
— தொகுப்பு : விஷ்ணுபிரியா சுதர்சன்

