கேள்வி: அவதாரங்களில் வராக அவதாரம் ஏன் சிறப்புடையது?
பதில்: மற்ற பத்து அவதாரங்களிலும் வராக அவதாரம் மிகவும் சிறப்புடையது. மச்சஅவதாரம் வேதத்தை மீட்டுத் தந்தது. அதனால் வேதத்தின் தலைமகனான நான்முகன் ஒருவரே காப்பாற்றப்பட்டார். அடுத்து கூர்மாவதாரத்தில் தேவர்களுக்கு கடல் கடைந்து அமுதம் அளித்தார்.தானும் பெண்ணமுதாகிய மகாலக்ஷ்மியை அடைந்தார்.இது தேவர்களுக்கும் தனக்குமான அவதாரம் எனக் கொள்ளலாம். நரசிம்ம அவதாரத்தினை தன்னை நம்பிய பிரகலாதன் என்கின்ற ஒரு பக்தனுக்காக மட்டுமே எடுத்தான். தான் எங்கும் நிறைந்து இருக்கும் தத்தவத்தைக் காட்டினான்.

வாமன அவதாரம் திரிவிக்கிரம அவதாரமாக மாறிய இரட்டை அவதாரம். இந்திரனுக்காகவே எடுத்தான். பரசுராமன் என்கின்ற கௌண அவதாரத்தில் அவன் சத்திரியர்களை அழித்தான். இராமாவதாரமும் தேவர்களுக்காக இராவணணை அழிக்க எடுத்தது தானே. கிருஷ்ணாவதாரம் – இந்த பூமி பாரம் குறைப்பதற்காகவும் கம்சனை வதம் செவதற்காகவும் பாண்டவர்களுக்குத் தூதனாக இருக்கவும் கீதையை அளிக்கவும் எனச் சொல்லலாம்.
ஆனால், இந்த மொத்த பூமியும், பூமியின் உயிர்கள் எல்லாவற்றையும் காப்பதற்கு எடுத்த அவதாரம் வராக அவதாரம். காரணம், இந்த பூமி தான் அனைவரையும் தாங்குகின்றது. அனைவருக்கும் தேவையான எல்லாவற்றையும் அளிக்கிறது. அதனாலே அவருக்கு பிரான் என்று ஒரு பெயரை வைத்து அழைத்தார்கள் ஆழ்வார்கள்.
கேள்வி: மனிதனாக இருப்பதன் பலன் எது?
பதில்: இந்த கேள்விக்கு மிக அருமையான விடையை சுவாமி விவேகானந்தர் சொல்லுகின்றார். மனிதனாக இருப்பதன் பலன் என்பது மனிதனாக இருப்பது தான்.நாம் மனிதர்களுக்கு உரிய அத்தனை பண்புகளையும் உடையவர்களாக இருக்க முயல்கின்றோமே தவிர, நிச்சயம் அப்படி இல்லை என்பதைத்தான் விவேகானந்தர் இப்படிச் சொல்லுகின்றார்.
அவர் சொல்வது இது தான்.

“முதலில் மனிதனாக இரு .பிறகு எல்லாம் தாமாகவே உன்னைத் தேடி வருவதைக் காண்பாய். நல்ல நோக்கம், நேரிய வழி, தர்மம், வீரம், நல்ல வலிமை ஆகியவற்றை பெறு. மனிதனாக பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்”.
இது விவேகாநந்தர் சொன்னது. நாம் நம்முடைய மக்களுக்காக மூன்று நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டுச் செல்வதுதான் இதற்குப் பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. நூறு வருடங்கள் கழித்தும் கூட சமூகம் நினைக்க வேண்டும். நினைக்கும்படி அவன் தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் செய்திருந்தால் அவன் இந்த மண்ணுலகில் நல்ல மனிதனாக வாழ்ந்து இருக்கிறான் என்று பொருள்.
கேள்வி:சாகும் போது பகவானை நினைக்க முடியுமா?
பதில்: வாழும் போதே நினைக்காதவன் சாகும் போதா நினைப்பான்? பொதுவாகவே சாஸ்திரங்கள் இறுதிக்காலத்தில் இறைவனை நினைக்க வேண்டும் என்றே சொல்லுகின்றன. அப்படி சாகின்ற தருவாயில் எம்பெருமானுடைய நாமத்தைச் சொன்னால் அவனுக்கு மோட்சஉலகம் என்பது உறுதி என்று சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்திருக்கின்றன. இது போகாத ஊருக்கு வழி. ஒருவன் இருக்கும் காலத்திலேயே ஒரு வேலையைச் செய்யாத போது சாகின்ற காலத்திலே எப்படிச் செய்ய முடியும்?
அதுவும் அந்தக் காலம் அவனுக்கே தெரியாது. அவன் நெறிமயங்கி இருப்பான். உடல் கலங்கி இருப்பான். அவனுடைய உயிரானது அகத்ததோ புறத்ததோ என்று ஆடிக்கொண்டிருக்கும். அவன் கட்டையாய் ஜடமாய் இருக்கின்ற காலத்திலே எப்படி அவனால் இறைவனை நினைக்க முடியும்?
வராகப் பெருமாள் ஒரு அருமையான ஒரு உபதேசத்தை இந்த உயிர்களுக்குச் செய்கிறார்.
“சாகும் பொழுது நீங்கள் கடவுளை வணங்க வேண்டும் என்கிற சாஸ்திர விதியை உங்களால் பின்பற்ற முடியாது. தெரியும். ஆனால் ஒன்று செய்யுங்கள். நீங்கள் நன்றாக இருக்கின்ற பொழுது இறைவனை வணங்கி விடுங்கள். என்னை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் ஒரு காலம் வரும். அந்தக் காலத் திலே உங்கள் உயிருக்கு துணையாய் உங்கள் அருகாமையில் இருந்து உங்களை நான் மோட்ச உலகுக்கு அழைத்துச் செல்வேன்” என்கிறார்.
இதை அடிப்படையாக வைத்துத்தான் பெரியாழ்வார்,
“அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்” என்று ஒரு அழகான பாசுரத்தில் பாடி அருளியிருக்கிறார். இதை விட எளிமையான ஒரு நெறி வேறு எதுவும் இருக்க முடியாது. எனவேதான், ஆழ்வார்கள் வராகப் பெருமானை ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று புகழ்கிறார்கள்.
கேள்வி: ஆசாரத்தை இந்து மதம் ஏன் இத்தனை வலியுறுத்துகிறது?
பதில்: ஆசாரத்தின் அவசியத்தை இப்போது உலகம் முழுக்க தெரிந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இப்பொழுது உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இந்த ஆசாரத்தைக் கடைப்பிடித்துத் தான் ஆக வேண்டும். அதனால்தான் வற்புறுத்துகிறது.
இதெல்லாம் ஒரு காலத்திலே நாம் மட்டமாக நினைத்தது. ஆசாரமே இப்பொழுது உயிரைக் காப்பாற்றும் ஒரு அம்சமாக இருக்கின்றது. ஒரு காலத்திலே நம் வீட்டுக்கு தேவையான எல்லா உணவுகளையும் பெரும்பாலும் நாமே தயார் செய்து கொண்டிருந்தோம்.
உணவே விஷமாகி கொண்டிருக்கிறது .நாம் வாங்குகின்ற காய்கறிகளோ மற்ற பொருள்களோ சுத்தமாகவும் சத்துக்களோடும் இல்லை. மரபணு மாற்று விதைகளும், அதிக விளைச்சலுக்கு கொட்டப்படும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி விஷயங்களும், உணவையும், சூழலையும் நஞ்சாக்கிவிட்டன. இந்த நிலைமையிலிருந்து நம்மையும், நம்முடைய குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நமக்கான உணவை, நம்மால் முடிந்த அளவு, தமது வீட்டிலோ அல்லது மாடியிலோ அல்லது ஒரு சிறிய இடத்திலோ வளர்த்து விட முடியும்.
இந்த சிந்தனை இனி கொஞ்சம் செயல்பாட்டுக்கு வர வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? கடைக்குப் போனோம்; ஏதோ ஒன்றை வாங்கி வீட்டுக்கு வந்தோம் என்று இல்லாமல், இதெல்லாம் யாரால் முடியும்? நாம் அதிகம் சம்பாதிக்க சம்பாதிக்க, நம்முடைய பணத்தை எப்படி கரைப்பது என்பது இங்குள்ள பல பொருளாதார வல்லுனர்களுக்கும் வணிகர்களுக்கும் தெரிந்திருக்கிறது. நாம் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நமக்குத் தேவையான பூக்கள், துளசி, ஒரு சில காய்கறிகள் (வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி, பச்சைமிளகாய் போன்றவை மற்றும் கீரைகள்) நாம் நம்முடைய வீட்டிலேயே நமக்கு தேவையான அளவுக்கு மட்டும் தயார் படுத்திக் கொண்டால், ஒரு பக்கம் ஆரோக்கியம், இன்னொரு பக்கம் செலவில் சிக்கனம்.
அந்த காலத்திலே பூக்களைக் கூட விலைக்கு வாங்காமல் ஆச்சாரமான விஷயமாக வைத்தார்கள். அதை விடாமல் கடைப்பிடிப்பதே இந்து மத தர்மம்.
கேள்வி : தேர் உற்சவ சிறப்பு என்ன ?
பதில் :தேர் என்பது வேறு ஒன்றும் அல்ல.இந்த உடலானது ஒரு தேர். இதிலுள்ள புலன்கள் குதிரைகள். மனம்தான் கடிவாளம். புத்தி தேரோட்டி. ஆத்மன் தேரின் முதலாளி என்று கட உபநிஷதம் தெரிவிக்கிறது. .இந்தத் தேரை ஜீவாத்மா நகர்த்தினாலும் கூட அந்த ஜீவாத்மாவை முறையாக இயக்குவது அதற்குள் இருந்து இயக்கும் பரமாத்மா. எல்லாவற்றையும் அவர் இயக்குவதால் அவருக்கு பார்த்தசாரதி என்று பெயர்.
ஒரு குழந்தை சைக்கிளின் முன்னால் இருந்து ஓட்டுவதுபோல தெரிந்தாலும் கூட, அதற்கு பின்னால் அவருடைய தந்தையார் உட்கார்ந்துகொண்டு அந்த சைக்கிளையும் அந்த குழந்தையையும் முறையாக காப்பாற்றி ஓட்டுவதைப் போல, இந்த உடலையும் இந்த புலன்களையும் புத்தியையும்,இவை எல்லாவற்றையும் இயக்குகின்ற ஆன்மாவையும் முறையாக இயக்குகின்ற பார்த்தசாரதி அவன் .
கேள்வி :ஏகாதசி விரதம் சிரமமா ?எல்லோரும் இருக்கலாமா ?
பதில் : ஏகாதசியை எல்லோருமே இருக்கலாம். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் அல்லது அந்த குழந்தையை நல்லவிதமாக படிக்க வேண்டும் வளர வேண்டும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் எதிர்காலத்தில் நல்ல படியாக ஆக வேண்டும் என்று அந்த குழந்தையின் நலனுக்காக விரும்புபவர்கள் எல்லாருமே இந்த ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
அது ரொம்ப கஷ்டம் என்று நினைக்க வேண்டியதில்லை. நீங்கள் தசமி அன்று இரவு பால் பழங்களை உண்டு விட்டு அடுத்த நாள் காலையில் குளித்து பூஜை செய்துவிட்டு அன்று முழுக்க விஷ்ணு புராணம் , பாகவதம், படித்துக்கொண்டு மதியம், பால் பழங்கள் இல்லாவிட்டால் உடைத்த அரிசியால் செய்யப்பட்ட உப்புமா போன்றவற்றை களைப்பில்லாமல் இருப்பதற்காக கொஞ்சமாக உட்கொண்டு, மாலை பெருமாள் கோயிலுக்குச் சென்று, தீபம் போட்டு வணங்கிவிட்டு, அன்று இரவு இயன்றவரை பகவானுடைய விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் அல்லது வேறு ஸ்லோகங்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் பாராயணம் செய்து அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து பூஜை செய்து துளசி தீர்த்தம் அன்னத்தை படைத்து ஆகாரத்தை முடித்துக் கொண்டால், (இதற்கு பாரணை என்று சொல்லுவார்கள்) இந்த ஏகாதசி அனுஷ்டித்த அத்தனை பலன்களும் உங்களுக்கு சேரும்.இது ஒன்றும் சிரமமில்லை.சிரமம் என்று நினைத்தால் தான் சிரமம்.
கேள்வி : மாவிளக்கு போடுவதன் தாத்பர்யம் என்ன ?
பதில் : உங்கள் வீட்டில் ஒரு சுப காரியம் நடத்த நிச்சயித்து இருக்கிறீர்கள். தேதி குறித்து ஆகிவிட்டது. அல்லது உங்கள் வீட்டில் சுபகாரியம் நடத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்தாலும் ஏதேனும் தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்பொழுது இந்த இரண்டுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது.இது ஒரு சக்தி வாய்ந்த வழிபாடு.
அது என்ன எத்தனையோ தீபங்கள் இருக்கின்ற பொழுது மாவிளக்கு தீபம் ஏன் ஏற்ற வேண்டும் என்று ஒரு கேள்வி எழலாம்
சில செயல்கள் வழிவழியாக நம்முடைய முன்னோர்களால் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தத்துவத்தை தெரிந்து கொள்ளாவிட்டாலும் இப்படி எங்கள் வீட்டில் செய்வார்கள் என்று சொல்லி பலரும் அதை கடைபிடித்து வருகிறார்கள். ஒரு நேர்த்திக்கடன் அல்லது ஒரு பிரார்த்தனை என்பதற்காக இயற்றப்படுகின்ற விளக்கு மாவிளக்கு. கிரகப்பிரவேசம் திருமணம் சீமந்தம் போன்ற விசேஷங்கள் நம் வீட்டில் நடைபெறுகின்ற பொழுது இந்த மாவிளக்கு ஏற்றி பூஜை செய்வார்கள்.
பெரும்பாலும் குலதெய்வம் கோயிலுக்குப் போய் மாவிளக்கு போடுவார்கள். விசேஷம் இல்லாவிட்டாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது பொங்கலிட்டு படைப்பார்கள்.
சுருக்கமாக சொன்னால் இந்தம் மாவிளக்கானது எல்லா விதமான இடர்பாடுகளையும் அதை இருட்டு என்று எடுத்துக்கொள்ளலாம் நீக்குகிறது.
நாம் என்ன நினைக்கிறோமோ எது நல்லபடியாக நினைக்க வேண்டும் என்று வேண்டுகின்றோ@மா அதனை நடத்திவைக்கும்.
தத்துவார்த்தமாகப் பார்க்கும்பொழுது ஐம்பூதச் சேர்க்கையாக இந்த மாவிளக்கை நாம் பார்க்கலாம்.
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் எணவு.அன்னம்.அதற்கு ஆதாரமாகத் தான் அந்த அரிசியை மாவாக்கி அதிலே ஆகாயத் தத்துவமான இனிமையை விளக்கும் வெல்லத்தை சேர்த்து நீர் ஆகிய நெய்யை விட்டுப் பிசைந்து வாயுவின் உதவியால் அக்கினி என்னும் தீபத்தை ஏற்றுகிறோம்.
இயற்கையோடு இணைந்த ஓர் வாழ்வியலை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் ஒளியாலும் உதவியாலும் வாழ்கின்றோம் என்பதைக் காட்டுவது தான் இந்த மாவிளக்கு.
ஆன்ம தீபத்தை ஏற்றி தெய்வத்திடம் நம்முடைய பாரத்தை இறக்கி வைத்து பிரார்த்தனை செய்வதுதான் மாவிளக்கின் தத்துவம். இதன் பலன்கள் அற்புதமானது.
மா என்பதற்கு செல்வம் மஹாலட்சுமி பெரிய நிலம் என்று பல பொருள்கள் உண்டு.
இது துர் சக்திகளை ஓட்டிவிடுகிறது. நம்மிடையே இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் அகத்திலே இருந்தாலும் புறத்துல இருந்தாலும் இருட்டு எப்படி ஒளியைக் கண்டால் ஓடி விடுமா அதைப்போல இந்த விளத்தால் கண்ணுக்குத் தெரியாத இடைஞ்சல்கள் நீங்க விடுகின்றன.
எதிர்மறை அலைகள் மாறி நேர்மறை அலைகள் அதிகரிக்கின்றன. நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இந்த சுடர் விளக்கில் முப்பெரும் தேவியரும் இருப்பதாகவும் ஒரு தத்துவத்தைச் சொல்லுவார்கள் பொதுவாக குலதெய்வத்துக்கு மாவிளக்கு ஏற்றுவது போலவே புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை படையல் போடுகின்@றாம். வீட்டிலே மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.
அந்த உருண்டையான மாவுதான் ஏழுமலையானின் திருமலை. அதிலே சுடராக ஒளிவீசி நம்முடைய இடர் ஆகிய இருட்டை நீக்குபவன் ஏழுமலையான். அவரை ஜோதி என்று ஆழ்வார் ஒரு பாசுரத்தில் பாடுகின்றார். நீசனேன் நிறை ஒன்றுமில்லை என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி என்று இந்த மாவிளக்கு ஏற்றினால் திருப்பதி பெருமான் நம்முடைய குற்றங்களை எல்லாவற்றையும் நீக்குகிறார். நம்மிடத்தில் பாசம் வைக்கிறார்.
நம்மை அன்போடு கனிவோடு கருணையோடு பார்க்கிறான். அந்தக் கருணையைப் பெற வேண்டும். அதன் மூலமாக குடும்பம் செழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் தளியல் போட்டு ,மா விளக்கு ஏற்றுகிறோம்.
