பத்மாலயா நிறுவனர் இல்லத் திருமண விழா
நாம்” பத்திரிகை ஆசிரியரும் பத்மாலயா நிறுவனரும் சிறந்த வைணவ வித்வானுமாகிய ஸ்ரீமாந். கோவிந்த சீதாராமன் – திருமதி. விசாலாட்சி ஆகியோரின் மூத்த குமாரன் திருநிறைச் செல்வன். சீதா. விஜெய் வெங்கட்ராகவனுக்கும், சிதம்பரம் திரு. பொன். சேதுராமன் – திருமதி. கீதா ஆகியோரின் இளைய குமாரத்தி திருவளர்செல்வி சேது. ஆர்த்தி இவர்களின் திருமணம் 26.4.2020 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மணமகள் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஊர் அடங்கு உத்தரவுகளால் எளிமையாக நடைபெற்ற திருமணம்
கொரொனா பாதிப்பு ஊர் அடங்கு உத்தரவுகளால் மிக எளிமையாக நிச்சயதார்த்தமும், மணவிழாவும் நடைபெற்றது. திருக்கோவலூர் ஜீயரின் மங்களாசாசனமும், திருச்சித்ரகூடம் ஸ்ரீ.ஏ.வி.ஆர். ஸ்வாமிகளின் அருளாசியும், அண்ணன்கோயில் ஸ்ரீ சடகோப. கல்யாணராமன் ஸ்வாமியின் ஆசீர்வாதத்தோடும் நடைபெற்றது.
நிச்சயதார்த்த மணவிழாவை ஆலயதரிசன ஆசிரியர் அவர்கள் மிகவும் விரிவாக – ஆண்டாள் காட்டிய சம்பிரதாய முறைப்படி ஆங்காங்கே உரிய பாசுரங்களை ஓதி நடத்தி வைத்தார். சீர்பாடலும், அருளப்பாடும் நடைபெற்றது. மிக முக்கியமான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மணமக்கள் நீடூழி வாழ ஆலயதரிசனம் வாழ்த்துகிறது.
புலவர். திருவாரூர். சண்முக வடிவேல் இல்லத்திருமண விழா
புலவர். திருவாரூர். “நகைச்சுவை இமயம்” சண்முகவடிவேல் அவர்கள் நம்மிடத்தில் நட்பும் அன்பும் கொண்டவர். நாம் கல்லூரியில் பணிபுரிந்த பொழுது பலமுறை கல்லூரிக்கு அழைத்திருக்கிறேன். நம்முடைய நண்பர் திரு. மோகன் அவர்கள் அமைத்த விழாக்களிலும் அழைத்துப் பேசவைத்திருக்கிறேன். புவனகிரியில் உள்ள இலக்கிய அமைப்புகளோடு சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருக்க கூடியவர். அய்யாவின் மகள் திருவளர்செல்வி. சுடர்விழிக்கும், திருவளர்செல்வன். விக்னேஷூக்கும் திருமணம் 11.6.2020 வியாழன் அன்று திருவாரூர் ஏ.கே.எம். திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புலவர். திருவாரூர். சண்முகவடிவேல் இல்லத்திருமண விழாவில்
தமிழ் பேரவை உறுப்பினர்கள்…
நம்முடைய தமிழ்ப் பேரவை அன்பர்கள், பேராசிரியர். அன்பழகன் அவர்கள் தலைமையில் சென்று வரவேற்பில் கலந்து கொண்டனர். மணமக்கள் நீண்ட பல நலனும் வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ ஆலயதரிசனம் தன்னுடைய ஆயிரக்கணக்கான வாசகர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
ஈரோடு டாக்டர்.சுதர்சன ராமானுஜதாஸர் இல்லத் திருமண விழா
நமது ஆலய தரிசனம் பத்திரிகையின் பல்லாண்டு வாசகர். நல்ல ஆலோசகர். பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு உதவிகள் பல புரிந்து வரும் பரம பாகவதர் டாக்டர்.கணேஸ்வரன் என்கின்ற சுதர்சன ராமானுஜதாசர் அவர்கள். இவர் செய்து வரும் பகவத் பாகவத தொண்டுகள் பலப்பல. வைணவம் தழைக்க வேண்டும்- ஆன்மீகம் சிறக்க வேண்டும் -கோயில்கள் மிகச் சிறப்பான முறையில் துலங்கவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருபவர். பலப் பல மஹான்களின் நல்லாசிகள் பெற்றவர்.
டாக்டர்.கணேஷ்வரன் – டாக்டர்.கீதா இவர்களின் மூத்த புதல்வி சௌபாக்கியவதி. ப்ரீத்தி என்கின்ற டாக்டர். ஐஸ்வர்யாவுக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் திரு. சதாசிவம்- திருமதி. சித்ரா இவர்களின் குமாரன். சிரஞ்சீவி. சக்தி என்கின்ற டாக்டர்.சுதாகருக்கும் 10.6.2020 புதன்கிழமை அன்று ஈரோட்டில் மிகச் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது.

ஈரோடு டாக்டர்.சுதர்சன ராமானுஜதாஸர் இல்லத் திருமண விழாக் காட்சி.
மிக விரிவாக – அமர்க்களமாக நடக்கவேண்டிய இந்த திருமணமானது – இப்பொழுது உள்ள சூழ்நிலையின் காரணமாக – மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பாகவதர்கள் உறவினர்களுடனும் நடைபெற்றாலும் எந்த குறையுவின்றி மங்களகரமாக நடைபெற்றது.
ஆழ்வார் வாக்கின்படி, “வாயும் நன்மக்களைப் பெற்று- எந்தை எதிராஜன் இன்னருளால் பெரும் செல்வத்தை பெற்று-வாழ்வாங்கு வாழ ” ஆலய தரிசனம் தமது ஆயிரக்கணக்கான வாசகர்களோடு இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றது.
வேதப்பிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் ஸ்வாமியின் குமாரருக்கு முனைவர் பட்டம்
பொங்கும் பரிவால் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் வம்சத்தில் வந்தவர்வேதப்பிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் ஸ்வாமி . எந்தை தந்தை தந்தை எனத் தொடங்கி வழிவழியாக வேதப்பிரான் பட்டர் என்னும் பெயர் கொண்டு தாயாருக்கும் பெருமாளுக்கும் வேத விண்ணப்பக் கைங்கரியத்தைத் செய்து வரும் வம்சத்தில் 224 பட்டம் ஸ்ரீ.உ.வே.வேதப்பிரான்பட்டர் அனந்த ராம கிருஷ்ணன் ஸ்வாமி.
இப்பொழுதும், இவர் பெரியாழ்வார் வம்சத்தின் பிரதிநிதியாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் எம்பெருமானுக்கும் கைங்கரியம் செய்து வருகின்றார். வேத விண்ணப்பம் செய்து வருகின்றார். அந்த சுவாமிகளுடைய திருக்குமாரன் ஸ்ரீ.உ.வே.வேதப்பிரான்பட்டர் சுதர்ஸனன் சுவாமிகள். ஆண்டாள் சன்னதியில் மிகச் சிறப்பாக இவர் கைங்கரியம் செய்து வருவதை நாம் காணலாம். இப்பொழுது, இவர் வேறு ஒரு மிகப்பெரிய காரியத்தையும் செய்திருக்கிறார்.
ஆண்டாள் திருக்கோயில் பற்றி பற்பலச் செய்திகளை திரட்டி சரிபார்த்து ஆண்டாள் திருக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்து பல சான்றுகளுடன் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி இன்டர்நேஷனல் பீஸ் பல்கலைக் கழகத்தில் இவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரை வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறது ஆலய தரிசனம் மாத இதழ்.
கலியன் ஒலி மாலை 2020 மாநாடு – விருது வழங்கும் விழா
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி திருநாங்கூரில், 126 ஆண்டுகளாகப் பிரசித்தி பெற்று வரும் 11 கருடசேவை திருவிழா 25.1.2020 சனிக்கிழமை நடைபெற்றது. அதனைஒட்டி திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயிலில் கலியன் ஒலி மாலை பத்தொன்பதாவது கருத்தரங்க மகாநாடு 26.1.2020 ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. சான்றோர் பெருமக்கள் பலரும், இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு திருமங்கை மன்னனின் புகழ் பாடி, கண்களுக்கும் செவிகளுக்கும் உள்ளத்திற்கும் இனிய விருந்து படைத்தார்கள்.
இவ்விழாவுக்கு வைணவச் செம்மல் வித்வான் அரங்கநாதாச்சாரியார் தலைமை வகித்தார். இம்முறை இம் மகாநாடு முதல் நாள் வெகு சிறப்பாக பல்வேறு பஜனைகளோடு தொடங்கியது. பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்த நாள் காலையில் முதல் நிகழ்வாக டாக்டர் வேங்கடேஷ் ஹரிணி -மற்றும் மதுரை ஸ்ரீராம்- பால கிருத்திகா ஆகியோர் திருமணப்பாராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து ஆலய தரிசனம் ஆசிரியர் அவர்களுக்கு, மணி விழாவை முன்னிட்டும், ஆலய தரிசனம் 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும், ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சித்திரகூடம் டாக்டர் ஏவிஆர் சுவாமிகளும், டாக்டர். சுதந்திரா கோவிந்தராஜன் அவர்களும், ஆசுகவி ஸ்வாமிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஸ்ரீ கோஷ்டி பூர்ணாச்சாரியார் திருக்கோட்டியூர் சுவாமிகளுக்கு வைணவப் பேரறிஞர் விருது வழங்கப்பட்டது. திருச்சித்ரகூடம் ஸ்ரீமதி ஹரிப்பிரியா தேவநாதன் அவர்களுக்கு இவ்விழாவில் “சொல் அமுதச் செல்வி” விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் நந்தா விளக்கே அளத்தற்கரியாய் என்கிற தலைப்பில் மிக அற்புதமாக உரையாற்றினார்.

திருநாங்கூர் கருட சேவை தொடங்கி, பல ஆண்டுகளாக, விழாவை, சீரும் சிறப்புமாக நடத்துகின்ற சென்னை டி.கே.வடிவேல் பிள்ளை அவர்களுக்கு “வைணவ சேவா ரத்னா” விருது வழங்கப்பட்டது. இப்பெருமகனாரின் தலைமுறையினர் இவ்விழாவை கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில், பல வைணவப் பணிகளை இடையறாது மேற்கொள்ளும் ஸ்ரீமான் வேலு மணி அவர்களுக்கும் வைணவ ரத்னா விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரியில்,பல்வேறு வைணவப்பணிகளைச் செய்து, வைணவத்தை வளர்ப்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட அரங்க செல்வநம்பி ராமானுஜதாசர் அவர்களுக்கும், சீர்காழி டி.கே. சுவாமிநாதன் அவர்களுக்கும், பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறுகின்ற கருடசேவை குறித்து பிரச்சாரம் செய்து வருகின்ற திருச்சி கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், ஸ்ரீரங்கத்தில் ஒரு அருமையான ராமானுஜ கூடத்தை நடத்தி வைணவ கைங்கரியங்கள் புரிந்து வருகின்ற ஸ்ரீமான் வெங்கடசாமி ராமானுஜ அடிகளுக்கும், நாடி ஜோதிடரான சீர்காழி ஸ்ரீமான் சிவசாமி அவர்களுக்கும், (இவர் திருவரங்கம் கோயில் நாயக்கர் காலத்தில் எப்படி இருந்தது என்பது குறித்து மிக அருமையான ஆராச்சி செய்து முனைவர் பட்டத்தைப் பெற்றிருக் கிறார். பல நல்ல காரியங்களைச் செய்து வருகின்றார்.
வைணவ வளர்ச்சிக்கு நல்ல முறையில் தொண்டு செய்து வருகின்றார்),மயிலாடுதுறை ஸ்ரீமான் ஸ்ரீனிவாசராமானுஜருக்கும் (வைத்தமாநிதி ஆசிரியராக இருந்தவர்.கைங்கர்ய ஸ்ரீமாந்.) மதுரையில், மிக அற்புதமாக வைணவப்பணி ஆற்றி வருகின்ற ஸ்ரீ பராங்குச ஜெகந்நாத ராமானுஜதாசர் அவர்களுக்கும் வைணவ ரத்னா விருது வழங்கப்பட்டது.

நிறைவாக சென்னையில் இருந்து பல ஆண்டுகளாக”கவலைப்படாதே” என்கிற வைணவ இதழை தொவின்றி நடத்தி வருகின்ற திருமதி சாய்லட்சுமி நாகநாதன் அவர்களுக்கும், அவருடைய சகோதரர் ஸ்ரீமாந் ராகவேந்திரா அவர்களுக்கும் இணைந்து வைணவரத்னா விருது வழங்கப்பட்டது.
மாநாட்டில் பல அறிஞர் பெருமக்கள் வைணவ நெறியை குறித்து வாழ்த்துரை வழங்கினர். குறிப்பாக திண்டுக்கல் விளாஞ்சோலைப் பிள்ளை அவர்கள் மிகச்சிறந்த வாழ்த்துரை வழங்கினார். டாக்டர். பன்னீர்செல்வம் வரவேற்புரையை நிகழ்த்தினார். ஸ்ரீமான் கல்யாணராமன் ஸ்வாமி நன்றி உரை நிகழ்த்தினார்.

மூன்று நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் இருந்தும் கோயில்பட்டி போன்ற பல திவ்ய தேசங்களிலிருந்தும் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் இவ்விழாவினை சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தனர்.
மூன்று நாட்களும் ஸ்ரீஹரி பஜனை ஸ்ரீ வாரி நாம ஸங்கீர்த்தனசபா ராமசந்திரன் ஸ்வாமி கோபால்சாமி ராமாநுஜதாசர், சீனு (ராமதாஸ்), கஸ்தூரி இளையாழ்வார், தஞ்சாவூர் தேவராஜன் குழுவினர் என இடைவிடாது பஜனை நடந்தது.
ஸ்ரீ உ.வே மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மற்றும் டெல்லி மற்றும் நேபாள ஜீயர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர்.
கோவில்பட்டி ஸ்ரீ பகவத் ராமானுஜர் 1004 திருநக்ஷத்ர பெருவிழா
சித்திரை ஏய்ந்த திருவாதிரை நாள்
15-4-21முதல்18-4-21வரை
காலை 9-00to12-00, மாலை 3-00to6-00
நாலாயிர திவ்யப் பிரபந்த சேவாகாலம்
18-4-21ஞாயிறு , காலை 10-00
நம் ஸ்ரீ உடையவருக்கு விசேஷ திருமஞ்சனம்.
மதியம் 12-00 திருவாராதனம்
திருவாய்மொழி சாற்றுமறை கோஷ்டி நடைபெறும்
மாலை 5-30 ஊஞ்சல் உற்சவம்
நாம சங்கீர்த்தனம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு நம் ஸ்ரீ உடையவரின் அனுக்ரஹம் பெற்றுய்யவும்.
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ இராமஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ இராமநவமி பிரமோற்சவம் 2021
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ இராமஸ்வாமி திருக்கோயில் ஸீதாதேவி ஸமேத ஸ்ரீ ராமசந்திர ஸ்வாமி ஸ்ரீ இராமநவமி பிரமோற்சவம் 2021 நாள் (12.04.2021 முதல் 23.04.2021) 13.04.21 இரவு முதல் நாள் இந்திர விமானம் ஸ்ரீ சீதை ஸ்ரீ லக்ஷ்மணன் ஹனுமன் ஸமேத ஸ்ரீ இராமர் அலங்கார ஸேவை..
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650 வது திருநட்சத்திர வைபவம்
சுவாமி ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650 வது திருநட்சத்திர வைபவம் சிறப்பு மகாநாடு திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனத்துடன் வருகிற கார்த்திகை மாதம் 14ஆம் தேதி 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை சேலம் எருமாபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கின்ற இம்மாநாட்டில் வரவேற்புரையை துணைத் தலைவர் திரு.ரவிச்சந்திரன் அவர்களும் தலைமை உரையை மாநாட்டுத் தலைவர் ஸ்ரீராம் அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.
மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றுபவர் திருச்சித்ரகூடம் ஸ்ரீ உ.வே.ரங்காசாரிய சுவாமிகள். இம்மாநாட்டில் ஸ்ரீ உ.வே மகாவித்வான் கே. பி. தேவராஜன் சுவாமி ,திருக்கோவலூர் மணிவண்ணன் சுவாமி, மன்னார்குடி. ஸ்ரீ பிரசன்ன பட்டாச்சாரியார் சுவாமி, ஸ்ரீமதி. ஆசூரி சுதா அம்மங்கார், ஆலய தரிசன ஆசிரியர் ஸ்ரீமான். கோகுலாச்சாரியார் சுவாமி, சென்னை. பள்ளிக்கரணை ஸ்ரீ பி.டி.சேஷாத்திரி சுவாமி, கள்ளக்குறிச்சி. ஆசுகவி. ஆராவமுதன் சுவாமி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். நன்றி உரையை செயலாளர் ஸ்ரீமாந். ஜி.ஆர் முரளிதரன் அவர்கள் நிகழ்த்த உள்ளார்கள்.
தொடர்புக்கு: 98947 66501, 98651 11230, 98428 15398 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
தஞ்சை 23 கருட சேவை மற்றும் நவநீத சேவை மகோத்சவம்
தஞ்சையில் ஸ்ரீராமானுஜ தர்சன சபையால் முன்னின்று நடத்தப்படும் 23 கருட சேவை மற்றும் நவநீத சேவை மகோத்சவம் வழக்கம்போல் 86 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் வைகாசி திருவோணம் நட்சத்திரத்தில்10.6.2020 புதனன்று தஞ்சை திவ்யதேச திருக்கோயில்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் துவக்கப்பட்டு மறுநாள் 11. 6. 2020 அந்தந்த திவ்ய தேச பெருமாள்களுக்கும் ஆலயத்திற்கு உள்ளேயே பெருமாள் கருடவாகனத்தில் சேவை சாதித்தார்கள். தொடர்ந்து, மறுநாள் 12.6.2020 நவநீத சேவை ஆகியது.
மறுநாள், 13.6.2020 பெருமாளுக்கு திருமஞ்சனம் விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஏற்பாடுகளை, திரு ஜி. பாபு நாயுடு, ஆர்.ராகு, எல். ராஜ மகேந்திரன், ஆர்.புருஷோத்தமன், வி.எஸ்.வெங்கடேசன் ஆகிய சபை நிர்வாகிகள் முன்னின்று நடத்தினார்கள்.
அம்மையப்பன் கா.சு.பா ஸ்ரீகிருஷ்ண பஜனை மடம் 119 வது கோகுலாஷ்டமி உற்சவம் :
அம்மையப்பன் கா.சு.பா ஸ்ரீகிருஷ்ண பஜனை மடம் 119 வது கோகுலாஷ்டமி உற்சவம் 9.9.2020 புதன்கிழமை முதல் 19.9.2020 சனிக்கிழமை வரை கோலாகலமாக நடைபெற்றது. விசேஷ பஜனைகளும் உரியடி சம்பிரதாய பஜனையும் சிறப்பாக நடைபெற்றது. 16.9.2020 ஸ்ரீ ருக்மணி கல்யாணம் அடுத்த நாள் இரவு பெருமாள் வீதி உலாவும் நடைபெற்றது.
