Sri VenkataRamana Bhagavathar Jayanthi Vizha 2020-21
ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா 2020 -21
அண்மையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி (Venkataramana Bhagavathar) விழா நடைபெற்றது. ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் தியாகராஜ சுவாமிகளுடைய சீடர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் பிறந்த ஊர் அய்யம்பேட்டை. இராமச்சந்திரபுரம் அய்யம்பேட்டையில் பிறந்த அவர் தனது மத்திம காலத்தில் வாலாஜாபேட்டை சென்று வாழ்ந்தார். எனவே, இவரை வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் என்றும் அய்யம்பேட்டை வேங்கட்ரமண பாகவதர் என்றும் அழைப்பது உண்டு.
தியாகராஜருடைய மிகச் சீரிய அணுக்கத் தொண்டராக இவர் விளங்கினார். கர்நாடக சங்கீத உலகத்தில் புகழ் பெற்ற இவர் அற்புதமான பல கீர்த்தனைகளை அருளிச் செய்திருக்கிறார். இவ்வாண்டு ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா அய்யம்பேட்டை கீழத் தெருவில் உள்ள சங்கீத மகாலில் மூன்று நாட்கள் மிகச் சீரிய முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இசைக்கு அருந்தொண்டாற்றிய பல பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பற்பல இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு ஒரு நாளைக்கு நான்கு கச்சேரிகள் வீதம் மூன்று நாட்களும் கோலாகலமாக கச்சேரிகள் நடத்தினர்.
இரண்டாம் நாள் விழாவில் சென்னை ஸ்ரீமதி. விஷ்ணுப்பிரியா சுதர்சன் அவர்கள் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கினார். முதல் பாடலாக ஸ்ரீ ராகவேந்திரரின் வர்ணம் ஒன்றை வழங்கிய அவர்,அடுத்து ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் இயற்றிய “குரு சரணம்” என்கிற பாடலைப் பாடினார்.(சங்கராபரணம்)
தொடர்ந்து, “தெலுசு ராமச்சந்திர” என்ற பூரண சந்திரகா ராக தியாகராஜ கீர்த்தனையை வழங்கினார். தொடர்ந்து, வேங்கட்ராம பாகவதர் அருளிய “ராதா ரமணா” கீர்த்தனையைப் பாடி அதில் துரிதகால ஸ்வரப்பிரயோகம் வழங்கினார். தியாகராஜ சுவாமிகள் மாயாமாளவகௌளையில் அருளிய அதி அற்புதமான “துளசி தள” கீர்த்தனையை, துல்லியமான மாயமாளவ ராக ஆலாபனை செய்து வழங்கி, அதன் ஸ்வரப்பிரயோகம் பாடினார்.
நிறைவாக நேயர்கள் கேட்டதற்கு இணங்க, மதுரை நடன கோபால சுவாமிகள் அருளிச்செய்த, “இஸோ யேட் ஸதா ஸ்ரீகேசவா” என்கிற ஆரபி ராகப் பாடலை உருக்கமாகப் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார். விஷ்ணுபிரியா சுதர்சன் கச்சேரிக்கு முனைவர் ஸ்ரீராம் அவர்கள் வயலின் வாசிக்க, அய்யம்பேட்டை ஸ்ரீகோதண்டராமன் அவர்கள் ம்ருதங்கம் வாசித்தார். கஞ்சிராவை திரு.ஹரிபிரசாத்தும் முகர்சிங்கை திரு. குமரனும் வாசித்தனர். கச்சேரியை பிரமுகர்கள் பாராட்டினர். தொடர்ந்து திருமதி. சுசித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் அவர்களின் 240வது ஜெயந்தி இசைவிழா 2021
Madurai Sri Math Venkataramana Bhagavathar 240th Isai Vizha 2021
கர்நாடக சங்கீதத்தில் புரட்சி செதவரும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் பிரதான சீடரான ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் அவர்களின் 240வது ஜெயந்தி இசைவிழா மதுரை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சேவா சமாஜத்தால் மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் மதுரை ஸ்ரீரங்க மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
6.3.2021 சனிக்கிழமை காலை 6 மணி அளவில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலிலிருந்து ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் அவர்களின் உற்சவமூர்த்தி, அவர்கள் உபயோகித்த தம்புரா, பாதுகைகள், கிரந்தங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளுடன் பல்லக்கில் எழுந்தருளப்பட்டு மங்கல இசையுடன் ஸ்ரீரங்க மகாலுக்கு எடுத்துவரப்பட்டது. பின் அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன..
காலை 10 மணி அளவில் ஜெயந்தி இசைவிழா சமாஜ தலைவர் திரு கீ.கீ. பாஸ்கர் அவர்கள் தலைமையில் இனிதே தொடங்கியது. இறை வணக்கத்தை திருமதி. கீதா பாரதி மற்றும் திருமதி. ஜனாபா அவர்கள் பாட வித்வான்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பல்வேறு துறையில் சாதனைகள் படைத்தவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கர்நாடக இசைப் பாடகர், மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனான திரு. ராஜ்குமார் பாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனையாளர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
ஸ்ரீமத். வேங்கடரமண பாகவதர் விருது குடந்தை. திரு. சரவணன் அவர்களுக்கும், ராமநாதபுரம். திரு V.N நாகராஜ பாகவதர் விருது புவனகிரி திருமதி. விஷ்ணுபிரியா சுதர்சன் அவர்களுக்கும் மதுரை. திரு T.K. ராமரத்தினம் பாகவதர் விருது மதுரை Dr.G. பாஸ்கர் ராஜன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல், தேசிய சிந்தனையாளர் என்ற பாராட்டுதலை திரு. A.G.S ராம்பாபு அவர்களுக்கும் கொடை உணர்வு நன்மணி என்கின்ற விருதினை திரு.Dr.K.B. ராதாகிருஷ்ணன், செயலாளர் ,KLN பாலிடெக்னிக் கல்லூரி ,மதுரை அவர்களுக்கும் வித்யா ஞான சிரோன்மணி என்ற விருதினை திரு.N.M.R.K ஜவஹர் பாபு ,தலைவர், சௌராஷ்ட்ரா பெண்கள் வித்யா சங்கம் மதுரை அவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
வாழ்த்துரையை திரு. ஜெயபிரகாஷ், திரு கோபி, வித்யா பூர்ணா சாரி வழங்கினர். இத்துடன் காலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
மாலை 4 மணி முதல் பல்வேறு இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக மாலை 7 மணி அளவில் விருது பெற்ற திருமதி. விஷ்ணுபிரியா சுதர்சன் அவர்களின் வாப்பாட்டு இசைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அவர்களுக்கு பக்கவாத்தியமாக குடந்தை. சரவணன் மிருதங்கம், Dr.G.ஸ்ரீராம் வயலின், புதுக்கோட்டை. சுரேஷ் குமார் கஞ்சிரா வாசித்தனர்.
இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயா இசைக்கல்லூரி மாணவ மாணவியரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10.30 மணி அளவில் திரு. V.N. நாகராஜ பாகவதர் அவர்களின் சிஷ்யர்களின் பஞ்சரத்தின கீர்த்தனை இனிதே நடைபெற்றது.
காலை 12 மணி அளவில் நலம் தரும் இசை என்கின்ற தலைப்பில் திரு தா. கு. சௌந்தரராஜன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாலை 4 மணி முதல் பல்வேறு இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முத்தாப்பாக சிறப்பு நிகழ்ச்சியாக சென்னை. திருமதி. சுவாதி கிருஷ்ணா அவர்களின் வாப்பாட்டு இசைநிகழ்ச்சி நடைபெற்றது .
மூன்றாம் நாள் திங்கட்கிழமை 9:30 மணி அளவில் சமாஜ மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது வரவேற்புரை திரு. பால குருமூர்த்தி அவர்கள் நடத்தினார்.
காலை 10 மணி அளவில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பசுமலை மதுரை மாணவ மாணவியரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணி அளவில் திருமதி. கீதா பாரதி அவர்களின் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 4 மணி முதல் பல்வேறு இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.. முக்கிய இசைநிகழ்ச்சியாக காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தஞ்சை. திரு. ராஜா ஸ்ரீவத்சன் அவர்களின் வாப்பாட்டு இசைநிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அவர்களுக்கு பக்கபலமாக மதுரை திரு. சச்சிதானந்தம் அவர்கள் வயலினும், அயம்பேட்டை திரு.செந்தில்குமார் அவர்கள் மிருதங்கமும், திருவையாறு பாலமுருகன் அவர்கள் முகர்சிங்கும் வாசித்தனர். 9 மணி அளவில் ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்று மூன்று நாள் ஜெயந்தி விழா இனிதே நிறைவுற்றது.
– நமது நிருபர்.
