அனுமன் பற்றிய செய்திகள் புராண இதிகாசங்களில் கொட்டிக்கிடக்கின்றன. செவி வழியாக வருகின்ற கர்ணபரம்பரைக் செய்திகளும் நிறைய உண்டு. ஆனால் அனுமனின் புகழ் பிரதானமாக வெளிப்படுவது வால்மீகி பகவான் இயற்றிய இராமாயணத்தில் தான். புத்தியிலும் உடலிலும் பலசாலியான அனுமான், குருவான சூரியனிடம் பாடம் கற்றதனால், சூரியனின் புதல்வரான சுக்ரீவனுக்கு மதி மந்திரி ஆனார். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் பகை ஏற்பட்டு சுக்ரீவன் நாட்டை விட்டு விரட்டப்பட்ட போது .அனைத்து செல்வங்களும் இழந்த சுக்ரீவனுக்கு பக்கத் துணையாக இருக்க வேண்டும் என்று தாமும் புறப்பட்டார் . தன்னை நம்பிய சுக்ரீவனுக்கு இழந்த நாட்டை கிடைக்கச் செய்தார். நம்பியவர்களை கடைசிவரை காப்பாற்றுபவர் அனுமான் என்பது ராமாயணத்தில் இருந்து தெரிகிறது. ஏழு காண்டங்களில் கிஷ்கிந்தா காண்டத்தில் தான் அனுமன் ராம லட்சுமணர்களுக்கு அறிமுகமாகிறார். இராமாயண கதா பாத்திரங்களுள் உயிரானவர் அனுமான்.
அனுமனின் சந்திப்பு ராமாயணத்தில் நிகழ்வது கிஷ்கிந்தா காண்டம் பம்பை படலத்தில். சுக்கிரீவன் அண்ணனான வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் பகை. வாலியால் விரட்டப்பட்ட சுக்கிரீவன், ஒரு சாபத்தினால் வாலி வர முடியாத ஒரு இடத்தில் குறிப்பிட்ட தோழர்களோடு மறைந்து வாழ்கிறான் அப்பொழுது வில்லும் கையுமாக சீதையைத் தேடிக் கொண்டு வந்த ராம லட்சுமணர்களைப் பார்த்தவுடன் சுக்ரீவன் பயப்படுகிறான். நம்மை அழிப்பதற்காகத் தான் இவர்கள் வில்லும் கையுமாக வந்து இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடுகின்றார்கள்.அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் சொல்லி அவர்கள் உயிரை அனுமன் காப்பாற்றுகின்றார்..
பாற்கடலைக் கடைந்தபோது உண்டான கொடிய விஷத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சத் தொடங்கியபோது அவர்கள் அச்சம் நீங்கும்படி அந்த நஞ்சை உண்ட சிவபெருமானைப் போல அநுமன் சுக்ரீவன் மற்றும் வானரர்களின் அச்சத்தை நீக்கினார், என்று கூறும் பாடலில் ,சிவனுடைய அம்சமாக அனுமன் அவதரித்தார் என்கின்ற செய்தியை கம்பன் சுட்டிக் காட்டுகின்றார்.
அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விட, “தனி அருளு தாழ் சடைக் கடவுள் என”,
‘இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்‘ என்று இடை உதவி,
என்று சிவபெருமானுடைய அம்சம் அனுமன் என்று அறிமுகப்படுத்துகிறார்.
ஒருவரைச் சந்திக்க சொல்லுகின்ற பொழுது, நம்மைப் பற்றி நாமே அறிமுகம் (self Introduction) செய்து கொள்ளும் நிகழ்ச்சி இப்பொழுது அனேகமாக எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையை வைத்தே அவருடைய தகுதியை நேர்முகத் தேர்வுகளில் நிர்ணயம் செய்துவிடுவார்கள். சமய உலகில் பெரியவர்களையும் விருந்தினர்களையும் சந்திக்கின்ற பொழுது தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் என்பதை அபிவாதயே சொல்லுதல் என்று சொல்வார்கள். இதற்கு எடுத்துக்காட்டு அனுமன்செய்து கொண்ட அறிமுகம்.முதன்முதலாக அனுமன் ஒரு அந்தணர் வேடம் புனைந்து ராம லட்சுமணர் முன்னால் சென்று” உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னவுடன், ராமன் அனுமனைப் பார்த்து “நீ யார்?” என்று கேட்கிறான். எப்படிப் பெரியவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற சிந்தனை உள்ள இளைஞர்களுக்கு இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம் .
மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்;
- எதற்காக என்னை அனுப்பி வைத்தார்?
இந்தப் பாடல் நாலு வரி. ஆனால் மூன்று வரியில் இராமரின் அழகு, ஆற்றல், தோற்றம் பற்றி கூறுகிறார்.இது ஒரு உளவியல்.எதிரில் உள்ள பெரியவர்களின் பெருமையைச் சொல்லும் போதே அவர்கள் நீங்கள் அடுத்து பேசுவதை உள்வாங்கிக் கொள்வது என்ற ஒரு அமைப்பு வந்துவிடுகிறது. உங்கள் பேச்சு குறித்து அவருடைய ஆர்வம் அதிகப்படும். உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது அது பசுமரத்தாணி போல பதியும்.
முதல் பாடலில் ஒரே வரியில் காற்றின் வேந்தற்குஅஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன் என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அடுத்த பாடலில், தான் இப்பொழுது இருக்கும் நிலை, வந்த காரணம் பற்றிக் கூறுகிறார்.
இம் மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன்‘ என்றான்–
எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான்.
யாரிடம் வேலை பார்த்து வருகின்றேன். அவருடைய நிலை என்ன ,எதற்காக என்னை அனுப்பி வைத்தார், இத்தனைச் செய்திகளையும் சொல்லி விடுகின்றார் .
