ஐம்பது அறுபது ஆண்டு காலங்களில் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்பொழுதும் திரைப்படங்கள் எடுத்தார்கள். பாடல்கள் எழுதினார்கள்.
அவைகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான தத்துவங்கள் இருந்தன.
சமூகத்திற்குப் பயன்படாத, இசையால் மயக்காத பாடல்களை எழுதவில்லை. நல்ல கருத்துக்களை திரைப்படப் பாடல்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
கவிஞர்கள் பெரும்பாலோர் சமூக பொறுப்பு அறிந்து பெரும்பாலான பாடல் களை இயற்றினார்கள்.(விதி விலக்குகள் அப்போதும் உண்டு.
அப்படி இயற்றிய திரைப்படப் பாடலாசிரியர் கா. மு. ஷெரீப்.
ஆகஸ்ட் 11, 1914 ல் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் காதர்சா ராவுத்தர் என்பவருக்கும், முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் என்பவருக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தார் .
ஜூலை 7, 1994 ல் 80 ஆவது வயதில் மறைந்தார்.
விடுதலைப் போராட்ட வீரரான அவர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மட்டுமல்ல.சிறந்த கவிஞர், பத்திரிகையாளர். ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, ஆகிய ஏடுகளுக்கு ஆசிரியராக இருந்தார்.
பல நூல்களை எழுதியிருக்கிறார்.அவற்றில் சில.
1.சிறுகதை நூல்கள் 3,
2.நவீனம் 3,
3.நாடக நூல்கள் 4,
4.இலக்கியக் கட்டுரை நூல் 1,
5.அறிவுரைக் கடித நூல் 1,
6.பயண நூல் 1,
7.கவிதை நூற்கள் 7,
8.குறுங் காவியம் 1,
9அரசியல் நூல் 3, .
10.உரை நூல் சீறாப்புராணம் – 8 பாகங்கள்
அவருடைய சிறந்த பாடல்கள்
1.ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…!”இப்பாடல் அப்பொழுது பட்டிதொட்டியெல்லாம் பரவியது. டி எம் சௌந்தரராஜனின் கணீர் குரலில் ஆரபி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் விரசம் இல்லாமல் நாட்டுப்புற மெட்டமைப்பில் அமைப்பில் அமைந்து புகழ்பெற்றது.
2.”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே” – இது ஒரு அற்புதமான தத்துவப் பாடல். சித்தர்களின் பாடல்களை நன்கு பயின்று இருந்தால்தான் இப்படிப்பட்ட பாடல்களை எழுத முடியும். தாயுமானவரின் “ஆசைக்கோர் அளவில்லை” பாடலின் சில வரிகள் இந்தப் பாடலில் அற்புதமாக எதிரொலிக்கும் . சீர்காழி கோவிந்தராஜனின் மணிக் குரலில் இந்தப் பாட்டு ஒலிக்கும் பொழுது நம்முடைய மனது இசையிலும் பொருளிலும் கரையும்……
3.பணம் பந்தியிலே-இதுவும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்தான். மனிதர்கள் மனங்களை விட பணத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதைச் சொல்லும் பாடல். ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான். அந்த பணம் இல்லை என்றால் புகழ்ந்த அதே கூட்டம் இகழும் என்பதும் உண்மைதான் என்பதை ஆணி அடித்தாற் போல் சொல்லியிருப்பார். உலக உண்மையை என்றைக்கும் பொருந்தும் படியாக உரக்கச் சொன்னவர் .அதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு..
4.அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை – அன்னையின் ஆணைபடத்தில் வந்த இந்த பாட்டு டி எம் சௌந்தரராஜன் பாடிய பாட்டு. தாயின் பெருமையைப் பற்றி எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் வந்திருக்கின்றன. ஆனால் ஒரு அன்னை படும் அத்தனைத் துயரங்களையும் கண்களில் கண்ணீர் பெருகி வரும்படி சொல்லி, உணர்வினை உருக்கி, நம்முடைய சிந்தனைகளை மேம்படுத்தும் பாடல் இது. இந்தப் பாடலை ஒருமுறை கேட்டுவிட்டால் பெற்ற அன்னையை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பது புரியும்.
5.சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா !- டவுன் பஸ் படத்தில் வந்த இந்தப் பாடல் எம்எஸ் ராஜேஸ்வரி என்ற அற்புதமான பாடகியின் குழந்தைக் குரலில் ஒலிக்கும் நம் சிந்தனைகளை மயக்கும் அப்பொழுது வெகு பிரபலமான பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடல் திகழ்ந்தது. இப்படிச் சக்கையாக இல்லாமல் சாரமான பல பாடல்களைத் தந்து திரைப்படப்பாடல் துறையை வளர்த்தவர்களில் மிக முக்கியமானவர் கவி கவி கா.மு.ஷெரீப் .
பேராசிரியர்.எஸ்.கோகுலாச்சாரி,ஆசிரியர்,ஆலய தரிசனம்
