இந்த பூஜையை மிக எளிமையாகச் செய்யலாம். அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் 100 ரூபாய்க்குள் இந்தக் கல்யாணத்தை முடித்து விடலாம். இருபது ரூபாய்க்கு புஷ்பம் , இரண்டு வாழைப்பழங்கள், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், சிறு அளவில் மங்கலபொருட்கள், கண்ணாடி வளையல்கள், கொஞ்சம் சர்க்கரை பொங்கல், மஞ்சள் தாலி சரடு, ஒரு முழம் மஞ்சள் வஸ்திரம்
துளசியை பிருந்தை, விஷ்ணுப்ரியை, விஸ்வ பூஜிதா, புஷ்பகாரா , நந்தினி ,கிருஷ்ண ஜீவனி ,விஸ்வ பாவனி என்று பல பெயர்களில் அழைப்பார்கள். பகவானுக்கு மிகமிகப் பிரியமானவள் துளசி தேவி என்பார்கள். நிறைய துளசி செடிகள் இருக்கக்கூடிய காட்டை பிருந் தாவனம் (விருந்தாவனம் ) என்று அழைப்பார்கள்.
துளசியின் மகிமையைப் பற்றியும், துளசிக்கும் பெருமாளுக்கும் நடந்த துளசி விவாகம் பற்றியும் பத்ம புராணத்தில் செய்திகள் உண்டு .துளசியின் தோற்றத்தைப்பற்றி பல புராணக் கதைகள் உண்டு. ஜலந்தரன் என்ற அசுரனுக்கு மனைவியாகி கிருஷ்ண பக்தியினால் தனக்குரிய ஏற்றத்தை அவள் பெற்றாள் என்று ஒரு புராணம் கூறுகிறது.
பாற்கடல் கடைந்த போது பல அற்புதமான பொருள்கள் கிடைத்தன. தேவர்கள் கடலில் இருந்து வந்த அமுதத்தைப் பெற்றனர். அவர்களுடைய நன்மையைக் கருதிய பகவான் ஆனந்த கண்ணீர் வடித்த போது அந்த ஆனந்தக் கண்ணீரின் ஒரு துளி தான் துளசியாக வடிவெடுத்தது என்றும் ஒரு புராணம் உண்டு.
பொதுவாகவே புஷ்பங்களைத் தான் மாலையாகச் சூட்டுவது வழக்கம். ஆனால் பெருமாள் துளசி இலைகளை மாலையாக கட்டி போட்டுக் கொள்வதில் மிகுந்த விருப்பம் உடையவர். மற்ற பூக்கள் மலர்ந்து தான் மணம் வீசும்.ஆனால் துளசி பிறக்கும்போதே மணத்தோடு இருக்கும். துளசிச்செடியின் அடியில்தான் ஆடிப்பூரத்தில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்தார்.
ஆண்டாள் தாம் பாடிய நாச்சியார் திருமொழியில் கண்ணனை விருந்தா வனத்தில் கண்டதாக ஒரு பதிகமே பாடியிருக்கிறார்.
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
என்பது ஆண்டாள் பாசுரம். ஆண்டாள் கண்ணனை நினைத்து நினைத்து ஏங்குகின்றாள் . அவளுடைய உடல் இளைக்கிறது. அப்பொழுது “கண்ணன் சூடிய துளசி மாலையை எனக்குச் சூட்டுங்கள். அப்போதுதான் என் னுடைய உயிர் பிழைக்கும்” என்று கண்ணன் விரும்பிய அந்த
துளசி மாலையை தான் விரும்புவதாக ஒரு பாசுரத்தில் பாடி இருக்கின்றார்.ஆழ்வார்கள் துளசியின் ஏற்றத்தை பாசுரங்களில் இணைந்துப் பாடியிருக் கிறார்கள்.
நதிகளில் கங்கை நதி புனிதமானது. அதைப்போலவே விருட்சங்களின் துளசி புனிதமானது .துளசி சேர்த்த கங்கை நீரை யாரொருவன் கடைசி தருணத்தில், தன்னுடைய வாயிலே விட்டு கொள்கின்றானோ, அவருடைய பாவங்கள் எல்லாம் நசிந்து, அவன் மறுபிறப்பு இல்லாத நிலையை அடைவான்.
துளசியைப் பறிக்கும் போது சில நடைமுறைகள் உண்டு. நகங்களால் கிள்ளக் கூடாது. அமாவாசை, துவாதசி, பௌர்ணமி, கிரகணம் முதலிய நாள்களில் துளசியைப் பறிக்கக்கூடாது.பூஜைக்குத் தேவைப்படுகின்ற துளசியை முன்னாலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகப்படுத்தப்பட்ட மலர்களை நிர்மால்யம் என்று சொல்வார்கள். அதனை மறு உபயோகம் செய்ய முடியாது . ஆனால் துளசியை பொறுத்த வரையில் நிர்மால்யம் கூட பயன்படுத்துவார்கள். அது கட்டையாக இருந்தாலும் காய்ந்துபோனதாக இருந்தாலும் துளசியை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
பகவான் கீதையில் தன்னுடைய எளிமையான பூஜையைப் பற்றி கூறுகின்ற போது ஒரு மலரோ பழமோ தீர்த்தமோ கொடு என்று சொல்லாமல் ஒரு இலை என்று சொல்வது துளசி இலையைத் தான் என்பது பெரியவர்கள் நிர்வாகம்.
பகவான் முதலில் சொல்வது பத்ரம் தான்.
பத்ரம், புஷ்பம், பலம்,தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி|
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி ப்ரயாத்மன: ||
என்று சொல்கிறார் அச்நாமி என்றால் சாப்பிடுகிறேன் என்று அர்த்தம். பூஜை செய்யும் பத்ரத்தை யாராவது சாப்பிடுவார்களா? ஆனால் வில்வம் துளஸி இரண்டையும் சாப்பிடலாம். அவை மருந்தாகவும் பயன்படுகிறது. எந்த வீட்டில் துளசி வனம் இருக்கின்றதோ அந்த வீட்டில் பகவான் கிருஷ்ணரும் இருக்கிறார்.துளசிச் செடிக்கு பக்கத்திலேயே மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லி செடியை வைத்து திருக்கல்யாணம் செய்வார்கள். துளசிச் செடிக்கு பந்தல் அமைத்து மாடம் கட்டி பூக்களால் அலங்கரித்து பக்கத்திலேயே கண்ணனுடைய படமோ அல்லது சாளக்கிராமமோ வைத்து, இல்லத்தில் அல்லது கோயில்களில் எப்படி திருமண வைப வத்தை நடத்துவார்களோ அதைப்போலவே நடத்துகின்ற வழக்கமுண்டு.
சிறிய தொட்டியில் துளசி மாடம் இருந்தால் அதை வைத்து அங்கேயே விளக்கு ஏற்றி அதற்கு மஞ்சள் ஆடை அணிவித்து, பூக்களை வைத்து, குங்குமம் மஞ்சள் இட்டு ,சர்க்கரைப் பொங்கல் முதலிய நிவேதனங்களை செய்து வைத்து, அதற்கு மணிகள் போன்றவற்றை அணிவித்து ,பக்கத்திலேயே ஒரு கிருஷ்ணருடைய படமும் வைத்து, மஞ்சள் சரடு ,வேத மந்திரம் சொல்லி துளசி மரத்துக்கு மாங்கல்யம் கட்டி தூப தீப ஆராதனைகள் செய்து துளசி மாடத்தை வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து மற்றவர்களுக்கு வினியோகத்தை தரலாம்.
