
பக்தியின் எல்லையில் நின்று, பாமரருக்கும் புரியும்படி பரந்தாமனைப் பாடிய ஞான வள்ளல் பக்த துக்காராம் .நாம சங்கீர்த்தனம் ஒன்றே நாரணனை அடையும் வழி என்று மேதினியில் ஓங்கிச் சொன்னவர்
இவர் ஆன்மீக ஞானி மட்டுமல்ல சமய சீர்திருத்தவாதியும்கூட.. மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர்.கிருஷ்ண சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான விட்டலரின் பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாமதேவர் என்பவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.
ஒரு இரவு துக்காராம் கனவில் பகவான் தோன்றி, வருகிற “ஏகாதசி” தினத்தன்று ,“மனித சரீரத்தோடு” வைகுண்டம் வர தன்னுடைய “கருட வாகனத்தை” தாம் அனுப்புவதாகவும், அதில் ஏறி துக்காராம் தன் வைகுண்டலோகத்தை அடையுமாறு கூறி மறைந்தார்.
இக்கனவைக் கண்டு மிகவும் மகிழ்ந்த துக்காராம் தன் மனைவி ஜிஜியாவிடம் இக்கனவைப் பற்றி கூறினார். அதற்கு ஜிஜியா துக்காராம் தன்னை சிரிக்க வைக்க இவ்வாறெல்லாம் அவர் கூறுவதாக கூறி மீண்டும் உறங்கினார்.
ஏகாதசி நாளும் வந்தது
பெருமாள் தன்னிடம் கூறியது போலவே அந்த தேஹு எனும் இடத்திற்கு வந்தார். ஊர்மக்கள் எல்லோரும் அங்கு கூடியிருந்தனர்
அப்போது வானிலிருந்து மஹாவிஷ்ணுவின் கருட வாகனம் கீழே வந்து இறங்கியது.
அந்த கருட வாகனத்தில் ஏறி அமர்ந்தார் துக்காராம்.
அவரின் மனைவியான ஜிஜியாவிடம் யாரோ ஒருவர் இவ்விஷயத்தைப்பற்றி கூற, அவர் வேகமாக ஓடோடி வந்தார். அதற்குள் அந்த கருட வாகனத்தில் விண்ணுலகம் சென்று மறைந்தார் துக்காராம். இதைக் கண்டு அதிர்ந்த அவரின் மனைவி ஜிஜியா அங்கேயே இறந்து விட்டார். இது வியப்பான நிகழ்ச்சி.
இவரைப் போற்றி, “பக்த துக்காராம்” என்ற திரைப்படம் 1937-இல் தயாரிக்கப்பட்டது. இதில் இவரது வாழ்க்கை வரலாறு திரையிடப்பட்டது. 1938இல் துகாராம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியானது. 2012 ஆம் ஆண்டிலும், மராத்திய மொழியில் துக்காராம் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 1973இல், தெலுங்கில் பக்த துக்காராம் என்ற பெயரில், இவரைப் பற்றிய திரைப்படம் உருவானது. சந்த துக்காராமா என்ற பெயரில் 1963இல் கன்னடத் திரைப்படம் வெளியானது.
இனி அவரின் போதனைகள் சில…
1. ஹரியின் நாமத்தை தவிர கலியில் எளிதாக முக்தி அடைய சாதனம் எதுவும் இல்லை
2. ஹரி நாமத்தை விடுத்து தீர்த்த யாத்திரை தேசாந்திரம் போவது எல்லாம் கால விரயம் உடலுக்கு அலைச்சல் அன்றி வேறு இல்லை
3. ஹரியை தேடி எங்கும் அலையாமல் ஒரு இடத்தில் அமர்ந்து ஹரி நாமத்தை ஸ்மரி நீ இருக்கும் இடம் தேடி ஹரி ஓடோடி வருவான்
3. பரம பொக்கிஷமான ஹரி நாமத்தை விடுத்து உலகில் வாழ்விதில் அர்த்தமில்லை அவன் விலங்குக்கு சமமாவான்
4. ஹரி நாமத்திற்கு முன்னாள் வைகுண்டத்தை வைத்தாலும் சமமாகது
5. ஹரி நாமத்தை சொல்பவர் பாதரா விந்தங்களில் விழுந்து புரண்டாளே உன் பாவம் அனைத்தும் சர்வ நாசம் என்பது நிச்சயம்
6. சகல சாத்திரமும் வேதமும் ஆகமும் ஒரே ஒரு கோவிந்த நாமத்திற்கு ஈடாகாது
7. ஹரியின் பாதார விந்தத்தில் சயனிக்கும் ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேசனால் கூட ஒரு ஹரி நாமத்தின் மேன்மையை முழுவதுமாக கூற இயலாது
8. எத்தனை கோடி பிறவி பிறக்கவும் நான் தயாராக உள்ளேன் ஆனால் அப்பிறவியில் எல்லாம் என் நாவில் ஹரி நாமம் குடி கொள்ளட்டும்
9. ஹரி நாமத்தை நாவிலே வைத்திருக்கும் பாக்கியசாலி இவ்வுலகில் மகா உத்தமர்களுக்கு எல்லாம் மேம்பட்டவர் ஆவார்
10. எப்போதும் அந்த ஸீஹரி தமது நாமத்தை உச்சரிப்பவரை பின் தொடர்ந்தே செல்வார் பிறகெங்கே அந்த ஜீவனுக்கு ஆபத்து என்பது வரும்
11.ஒரு துஷ்டன் ஹரியின் நாமத்தை உச்சரிக்கும் போது கூட ஹரியின் வாத்சல்யம் பல கோடி மடங்கு பெருகி அவனுக்கு மோட்சத்தை தருகிறது
12. பிரம்மனின் பதவி கூட ஹரி நாமத்தை உச்சரிப்பவருக்கு ஒரு தூசு
13. ஹரியின் நேரடி பார்வையை பெற ஹரி நாமமே அஸ்திரம்
14. நோயில் படுத்து கொண்டு கூட ஹரி நாமத்தை உச்சரிப்பவன் பரலோகத்தின் ராஜ்யத்தை அடைவான்
15. பரம பாவனமான இந்த ஹரி நாமத்தின் ரகசியம் அரியாமல் பல கோடி ஜீவன்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வந்து அழுந்துகின்றனர்.
