ஒருவன் இறைவனை உணர வேண்டும் என்று சொன்னால் , தவம் செய்ய வேண்டும். ஆனால் தவம் செய்வது எளிமையான செயல் அல்ல.”ஊன் வாட, உண்ணாது, உயிர் காவலிட்டு, உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து, தாம் வாட வாட, தவம் செய்வது கடினம்” என்கிறார் திருமங்கை ஆழ்வார்.
துறவியர்கள் தவம் செய்யலாம். அது அவர்களுக்கு உரியது. ஆனால் இல்லறத்தாருக்கு தவம் என்பது கடினமானது .ஆனால், அவர்களும் உய்வு பெறுவதற்கு எளிய வழியாக பல விரதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஒவ்வொரு பருவத்திலும் வரக்கூடிய ஏகாதசி விரதம்.
உள்ளத்தின் ஆன்ம சக்தியை வலுப்படுத்துகின்ற ஏகாதசி விரதம், உடலின் ஜீரண சக்தியையும் வலுப்படுத்தி, நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றுகிறது. வயிற்றுக்குள் தேங்கி இருக்கக்கூடிய பல நச்சுப் பொருள்களை, ஏகாதசி விரதத்தில், நாம் கடைபிடிக்கும் உணவு உண்ணாமை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. அதனால் உடல் புத்துணர்வு பெறுகிறது.
ஏகாதசியை தேவர்கள் அனுஷ்டிக்கிறார்கள். முனிவர்கள் அனுஷ்டிக் கிறார்கள். அரசர்கள் அனுஷ் டிக்கிறார்கள். சாதாரண இல்லத்தில் உள்ளவர் களும் அனுஷ்டிக்கிறார்கள்.
கார்த்திகையில் புஷ்கரம் தீர்த்தத்தில் நீராடினால் கிடைக்கின்ற பலனும், சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் பொழுது பிரயாகையில் நீராடினால் கிடைக்கும் பலனும், சிவராத்திரியன்று காசியில் விரதம் இருந்தால் கிடைக்கக்கூடிய பலனும், கயா விஷ்ணு பாதத்தில் செய்யக் கூடிய வழி பாட்டின் பலனும் , குரு சிம்ம ராசியில் இருக்கும்போது கௌதமி நதியில் தீர்த்தம் ஆடுகின்ற புண்ணிய பலனும், ஆனி மாதம் தேய்பிறை ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் .
இந்த ஏகாதசியின் அபாரமான, அளவில்லாத நற்பலன்களைக் கருத்தில் கொண்டு, இதற்கு “அபரா ஏகாதசி” என்று பெயரிட்டார்கள்.
ஒரு மரத்தை கூர்மையான வாள் எப்படி வெட்டுமோ , அதுபோல இந்த ஏகாதசி விரதம் நம்மிடம் வளர்ந்திருக்கும் பாவம் என்னும் மரத்தை வெட்டி விடுகின்றது.
இதை, “பாரமாய பழவினை பற்றறுத்து” என்று பாடுவார் திருப்பா ணாழ்வார். இந்த ஏகாதசி விரதத்தில் பகவானுக்கு கிருஷ்ண துளசியைப் பயன்படுத்த வேண்டும். நல்ல கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். நல்ல சந்தனத்தை அரைத்து இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இயன்றால் கங்கா ஜலத்தைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
இந்த ஏகாதசி குறித்த கதை ஒன்று உண்டு. இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் பதவி குறித்த சண்டை வந்தது. அண்ணனி டமிருந்து அரசபதவியை அப கரிக்க விரும்பிய தம்பி தந்திரமாக அண்ண னைக் கொன்றான்.
எதிர்பாராத ஒரு மரணம் ஏற்பட்டதால் அந்த ஆவி கரை சேராமல் ஒரு அரச மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. போவோர் வருவோருக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதனை அறிந்த தௌமியர் என்கிற முனிவர், அந்த ஆவிபடும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல், அது கடைத்தேறுவதற்கு ஒரு வழி சொன்னார். உருவம் இல்லாத அந்த ஆவியும் ஏகாதசி தினமன்று பகவானை ஸ்மரணம் செய்து, நல்ல கதியை அடைந்தது.
கர்ம வினைகளை நீக்கக்கூடிய ஏகாதசி இந்த ஏகாதசி.
”அஜலா ஏகாதசி” என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. அதாவது தண்ணீர் கூட குடிக் காமல் இருக்க வேண்டிய விரதம். இந்த விரதத்தைத் தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு எம்பெருமானுடைய திருவருள் மட்டுமல்ல, திருமகனின் திருவருளும் கிடைத்து, பெரும் செல்வங்களோடு வாழ்வார்கள் .
இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந் நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
