சுவாரஸ்யமான தகவல்கள்!
ராமானுஜர் வைணவ சமய ஆசாரியர்.வைணவர்களுக்கு குலகுரு. உடையவர், எதிராஜர். ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர். அவருக்கு ஏராளமான திருவுருவச் சிலைகள் பற்பல கோயில்களில் உள்ளன. அதில் முக்கியமான மூன்று சிலைகள், அதாவது மூன்று திருமேனிகள், தானான திருமேனி, தமர் உகந்த திருமேனி, தாம் உகந்த திருமேனி.
இதில் தமர் உகந்த திருமேனி, கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், மேல்கோட்டையில் உள்ளது. திருநாராயணபுரம் என்பார்கள்.
தமர் என்றால் அடியவர்கள். இங்கு 12 ஆண்டுகள் ராமானுஜர் தங்கி பல கைங்கரியங்களைச் செய்தார். 80 வது வயதில், அங்கிருந்து ஸ்ரீரங்கத்துக்கு கிளம்புகின்றார். அவருடைய அடியார்கள் அவர் பிரிவைத் தாங்காது அழுகிறார்கள். தங்களுக்கு அவரின் திருவுருவச்சிலை வேண்டும் எனக்கேட்க, ராமானுஜர் ஒரு சிற்பியை வரச்சொல்லி, சிலை அமைத்தார். ராமானுஜர் கைகூப்பி விடை தரும் கோலத்தில் அந்தச் சிலை இருக்கும். அதில் தன் அருட்பார்வையை செலுத்தி சீடர்களிடம் கொடுத்தார். அதுதான் தமர் உகந்த திருமேனி. அடியார்கள் மகிழ்ந்தனர்.
தானுகந்த திருமேனி என்பது ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. ராமானுஜருக்கு பிடித்த (உகந்த)திருமேனி. ஸ்ரீபெரும்புதூர் அவருடைய அவதாரத் தலம் அல்லவா. ராமானுஜர் வயது முதிர்ந்த நிலையில் திருவரங்கத்தில் இருந்த போது, ஸ்ரீபெரும்புதூரில் அவரின் சீடர்கள் ராமானுஜருக்கு ஒரு சன்னதி அமைத்து, பிரதிஷ்டை செய்ய அவரிடம் ஒரு திருவுருவச் சிலையை வேண்டினர். அந்தச் சிலை ராமானுஜரின் அருள் சக்தியோடு அருளப்பட்டது. ராமானுஜர் இந்தச் சிலையை தழுவிக் கொடுத்தார் .அது தானுகந்த திருமேனி.
அடுத்தது தானான திருமேனி . இதில்தான் பலரும் புகுந்து விளையாடுகிறார்கள் .முதலில் இதன் பின்னணி தெரிந்து கொள்வோம்.
120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பிய ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரம பதித்தார். அவரை திருவரங்க நாதன் கருவறைக்கு வெளியே தென்கிழக்கே அகளங்கன் திருச்சுற்றில் உள்ள வசந்த மண்டபத்தில் திருப்பள்ளிப் படுத்தினார்கள்.
எதிகளை அடக்கம் செய்வது மரபு. அவர்கள் திருமேனியை எரிப்பதில்லை .இவர் திருமேனியை அடக்கம் செய்த போது நடைபெற்ற அந்திம ஸம்ஸ்கார நிகழ்வுகள் குருபரம்பரை நூல்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள், யார் யார் என்னென்ன ஓதினார்கள், என்னென்ன மாலை பிரசாரங்கள் சாற்றப்பட்டன என நுட்பமான பல விஷயங்கள் குருபரம்பரையில் உண்டு.
ஆனால் திருமேனி பள்ளிப் படுத்தப்பட்டதாகத் தான் குறிப்பு உள்ளது. அப்படியே அந்த திருமேனி உட்கார வைக்கப்பட்டதாக இல்லை.
ஆனால் இன்று அதே திருமேனி ஆயிரம் வருடங்களாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். வைணவம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருமேனியை இரண்டு விதமாக வைணவம் சொல்கிறது. ஒன்று விபவத் திருமேனி. இன்னொன்று அர்ச்சா திருமேனி. விபவத் திருமேனி என்பது அவர்கள் வாழ்ந்த பொழுது உயிருடன் இருந்த திருமேனி. அர்ச்சா திருமேனி என்பது அவர்கள் மறைந்த பிறகு அவர்களைப் போலவே சுதை ,அல்லது கருங்கல்லினால் அல்லது மரத்தினால்அல்லது உலோகங்களினால் முறைப்படி செய்யப்பட்டு மந்திர ஆவாகனம் செய்யப்பட்ட திருமேனிகள்.
பகவான் சுயம் வியக்த திருமேனிகள் கூட அர்ச்சா ரூபம் தான் தவிர விபவம் அல்ல. எனவே வைணவ ஆகம விதிகளின்படி ராமானுஜரின் திருமேனியை அப்படியே வைப்பது மரபும் இல்லை. சாத்தியமுமில்லை. அங்கே இருக்கக்கூடிய திருமேனி உயிரோட்டமாக இருக்கிறது என்பது உண்மை. அதில் ராமானுஜரின் ஆன்மா இருப்பதும் உண்மை. காரணம் அவர் விரும்பிய திருவரங்கம் அல்லவா.
பொதுவாக மகான்களின் திருவரசு உள்ள இடத்தில் அவர்கள் ஆன்மா பரிபூரண சக்தியோடு இருக்கும். அதைப் போலத்தான் இங்கும் உள்ளது .ஆனால் ஆயிரம் வருடங்களாக பாதுகாக்கப்பட்ட அதே திருமேனி என்று சிலர் சொல்வது ஏற்புடையதல்ல.
இதுகுறித்து பல்லாண்டுகளுக்கு முன்னர் கல்கி வார இதழில் ஒரு கட்டுரை வந்தது. அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் பேட்டி தந்திருந்தார் .ஆனால் ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற அறிஞர்கள் உறுதிபட மறுத்தனர். அப்படி இருந்தால் கோயில் தல வரலாறு புத்தகத்திலோ அல்லது அங்கே வரலாற்று குறிப்பு பலகையோ வைக்கப்பட்டிருக்கும். இந்த அதிசயம் குறித்து அறநிலையத்துறை கட்டாயமாக ஒரு போர்டு வைத்திருப்பார்கள். இப்படி ஒரு விஷயத்தை விட்டு விடுவார்களா?
ஆனால் அங்கே எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் விஷய சுவாரஸ்யம் கருதி சிலர் இதனைத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
வசந்த மண்டபத்தில் அவர் திருப்பள்ளி படுத்தப்பட்டது தான் முக்கிய விஷயம்.அதுவே அந்த காலத்தில் அதிசயம்.மற்ற வைணவ ஆசாரியர்களுக்கு அந்தப் பெருமை இல்லை. ஆனால் அதே பூதவுடல் தான் இன்றும் இருக்கிறது என்பது நான் அறிந்த வரையில் தவறான விஷயம்.
அதே அசல் திருமேனி என்பதால்தான் அபிஷேகம் இல்லை என்பது ஏற்புடைய வாதமல்ல. பல திருக்கோயில்களில் மூலவர் திருமேனி திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. திருமேனி அபிஷேகம் செய்தால் குறை வரும் என்பதால் செய்வது கிடையாது .’
எனவே ராமானுஜர் திருமேனி அதே திருமேனி அல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உண்டு.
- முறையான அறிவிப்பு பலகை இல்லை .
2.மூல நூல்களில் ஆதாரம் இல்லை
3.விபரம் தெரிந்த அறிஞர்களும் ஏற்கவில்லை
4.நடை முறையில் சாத்தியமில்லை
இந்த நான்கு காரணங்களினால் அங்கு ஆயிரம் வருடங்களாக அதே திருமேனி சாத்தியமில்லை எனத் தெளிவாகிறது.
இல்லை, அதே திருமேனி உண்மை என்றால், நிர்வாகம் அல்லது அரசு அல்லது தொல்பொருள் துறை ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
