தேஜஸ்வி
நாம் சற்று உணர்ந்து நோக்கினால் நம்முடைய பாதை, நாம் செய்யும் செயல்கள், அதன் அடிப்படையாக வரும் விளைவுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.அந்த பக்குவம் வந்துவிட்டால் இறைவன் விட்ட வழி என்று இருந்துவிட முடியும். வேடிக்கையான ஒரு கதை உண்டு.
ஒரு முறை, 20 பேர் கங்கையில் படகை கடந்து கொண்டிருந்தார்கள் , அதில் ஒரு ஞானி இருந்தார். திடீரென்று மிகப்பெரிய காற்று அடித்தது. படகு கவிழ்ந்து விடும் போல் தோன்ற படகுக்காரன் சொன்னான்.” எல்லோரும் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் படகு மூழ்கி விடக்கூடும்.”
உடனே எல்லோரும் கடவுளை வேண்டிக் கொண்டனர். ஆனால் ஞானி மட்டும் தன்னுடைய கையில் உள்ள கமண்டலத்தினால் கங்கை நீரை எடுத்து படகுக்குள் விட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
” நீங்கள் என்ன பைத்தியமா? படகு மூழ்கிவிடும் போலிருக்கிறது. நீங்கள் தண்ணீரை வேறு படகில் ஊற்றிக் கொண்டிருக்கிறீர்களே”
ஆனால் ஞானி அவர்கள் கோபத்தை காதில் வாங்கிக் கொள்ளாமல் மறுபடியும் கங்கை நீரை எடுத்து படகில் விட்டார் .
“சரியான பைத்தியம்” என்று நினைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் போது காற்று நின்றது. படகோட்டி சொன்னான்.
“ம் இனி நமக்கு அபாயம் இல்லை.”
உடனே எல்லோரும் தங்கள் பிரார்த்தனை பலித்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஞானி இப்பொழுது படகில் விட்ட தண்ணீரை தன்னுடைய கமண்டலத்தினால் எடுத்து கங்கையில் விட்டுக் கொண் டிருந்தார்.
“பைத்தியம் என்பது சரியாகத்தான் இருக்கிறது.” என்று மற்றவர்கள் திட்டிக் கொண்டே இருந்தனர்.
அதற்குள் கரை வந்தது. எல்லோரும் பாதுகாப்பாக இறங்கிக் கொண்டனர். ஞானியும் கடைசியாக இறங்கினார்.
அப்பொழுது படகுக்காரன் ஒரு கேள்வியைக் கேட்டான்.” சுவாமி, உங்களை எல்லோரும் பைத்தியம் என்று சொன்னார்கள் நீங்கள் செய்த காரியம் அப்படித்தான் இருந்தது படகு மூழ்குவது போல் இருக்கும் நேரத்தில் நீங்கள் கங்கைத் தண்ணீரை எடுத்து படகில் விடுகிறீர்கள். ஆபத்து இல்லை என்று சொன்னவுடன் ஏற்கனவே விட்ட தண்ணீரை எடுத்து வெளியேவிடுகிறீர்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?”
அப்பொழுது ஞானி சொன்னாரா.
” அப்பா, நீ கேட்பது சரிதான். நான் எப்பொழுதும் கடவுளின் கட்டளையை அனுசரித்து வாழ்பவன்.”
இப்பொழுது படகுக்காரன் கேட்டான்.
“கடவுள் என்ன கட்டளை இட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? உங்களிடம் வந்து சொன்னாரா?”
” அவர் சொல்ல மாட்டார். நாம் தான் யூகிக்க வேண்டும் .படகு கவிழ்ந்து விடும் போலிருக்கிறது.நாமெல்லாம் கங்கையில் மூழ்கி விடுவோம்” என்று நீ சொன்னாய் அல்லவா . அப்பொழுது இதுதான் இறைவன் திருவு ள்ளம் போல் இருக்கிறது. அவருடைய திருதிருவுள்ளத்துக்கு எதிராக நாம் ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்த செயலை விரைவுப்படுத்துவதற்காக கங்கை நீரை எடுத்து படகிலே விட்டேன் .
“அது சரி.அப்புறம் திடீரென்று மறுபடியும் படகிலிருந்து தண்ணீரை எடுத்து ஆற்றில் விட்டீர்களே”
ஞானி சிரித்தார்.
“நண்பனே…நீ படகு மூழ்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற சொன்னவுடனே படகை மூழ்கடித்து விடுவது தான் கடவுள் திருவுள்ளம் போல் இருக்கிறது என்று நினைத்தேன். அதற்கு உதவினேன். பிறகு நீ சொன்னாய். இனி ஆபத்து இல்லை என்றாய். ஓ, கடவுள் காப்பாற்ற நினைக்கிறார் போல் இருக்கிறது. இனி அதற்கு உதவ வேண்டும் என்பதற்காக படகின் உள்ளே இருந்த நீரை எடுத்து வெளியே விட்டேன்”
ஞானிகள் செய்யும் செயல்களின் காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் எதையும் கடவுள் விட்ட வழி என்று எடுத்துக் கொள்கிறார்கள். எதற்கும் கோபப்படுவதில்லை. எதற்கும் சந்தோஷப் படுவதில்லை.எதற்கும் கலங்குவதில்லை.