இன்று கருட பஞ்சமி. கருடன் என்றாலே மங்களகரமானவன் என்று பொருள். காஞ்சி மகா சுவாமிகள் தம்முடைய தெய்வத்தின் குரல் பகுதியில் வைணவ ஆலயங்களைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார். கருடனின் சிறப்பு வைணவத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் குறிப்பிடுவதோடு, அந்த மங்களகரமான கருடனை இந்து மதத்தில் எல்லோருமே சிறப்போடு வணங்குகின்றனர் என்கிறார் .

கருடனை பார்த்து விட்டாலே பீதியும், அச்சமும் தோஷமும் விலகிவிடும். வைணவக் கோயில்கள் மட்டுமல்ல சைவக் கோயில்களிலும் – அல்லது வேறு மரபைச் சார்ந்த கோயில் குடமுழுக்குகளிலும்- கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் தருணங்களில், – அந்தப் பறவை அரசன் – எங்கிருந்தோ பறந்து வருவதை – நாம் காணலாம்.
அது எந்த இடமாக இருந்தாலும் -அந்த குடமுழுக்கு தருணத்தில்- கருடன் வானில் வட்டமிடுவதை – நாம் நிச்சயம் காணமுடியும். அப்படி வருவதே- அந்த குடமுழுக்கு மிக சிறப்பாக- நிறைவாக முடிந்ததாகப் பொருள். .
அவன் மங்களகரமானவன் என்பதை மந்திரங்கள் சிறப்பாக எடுத்துச்சொல்லும்.
மங்களம் பகவான் விஷ்ணு
மங்களம் மதுசூதனா.
மங்களம் புண்டரீகாட்ஷா
மங்களம் கருடத்வஜ என்று- கல்யாண சமயத்தில் தாலி கட்டியவுடன் -இப்படி ஒரு மங்களத்தைச் சொல்பவர்கள் உண்டு.
இந்த கருடனைத் தரிசிப்பது சகுன சாஸ்திரத்தில் மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது .வைஷ்ணவ ஆலயங்களில் வெளியே பெருமாளைப் பார்த்தபடி கருடாழ்வார் இருப்பர்.அதுவும் ஸ்ரீரங்கத்தில் விஸ்வரூப கருடன்.
ஆடி மாதம் ஸ்வாதி நட்ஷத்திரத்தில் அவதரித்த அவருக்கு- பெருமாள் ஒரு மிகப்பெரிய வரத்தைத் தந்திருக்கிறார். பெருமாளின் வாகனமாக இருக்கும் ஒரு மிகப்பெரிய பேற்றினைப் பெற்றிருக்கிறார்.
பெரிய திருவடி என்று அவருக்கு பெயர்.
நீங்கள் எத்தனையோ வாஹன தரிசனத்தைப் பார்க்கலாம் ஆனால் வைணவ கோயில்களில் மிகச் சிறப்பான தரிசனம் என்று சொன்னால் கருட சேவை தான். லட்ஷோப லக்ஷம் திரள்வர்.
அதுவும் காஞ்சிபுரம் கருட சேவையும் திருப்பதி கருட சேவையும் திருநாங்கூரில் ஆடி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் மிகப்பெரிய கருட சேவையும் திருநெல்வேலி மாவட்டத்தில் நவதிருப்பதி கருட சேவையும் மிகப் பிரசித்தி பெற்ற கருட சேவைகள்.
பட்சிராஜன், சுபர்ணன், வினதை சிறுவன் என்றெல்லாம் கருடாழ்வாருக்கு பல பெயர்கள் உண்டு.
மகா பலம் உடையவர். மகா பலம் தருபவர். கும்பகோணம் பக்கத்தில் திருநறையூர் என்று ஒரு ஊர் இருக்கிறது.
நாச்சியார்கோயில் என்று சொல்வார்கள். அங்கே கல் கருடன். மிகப் பிரசித்தி. கொஞ்சம் கொஞ்சமாக அந்த கல்கருடன் கனத்துக் கொண்டே போவார் என்பது அந்த கருடனுக்கு உள்ள விசேஷம். முதலில் தூக்கும்போது நாலுபேர். கொஞ்ச தூரம் போனஉடன் 8 பேர் அப்புறம் 16 பேர் அப்புறம் 32 பேர் என்று. அற்புத விஷேஷம் இது.
இந்த கருடனுக்கு பெருமாள் பல முக்கியமான விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார். அதுவே ஒரு புராணம். அதற்கு கருட புராணம் என்று பெயர்.
அந்த கருட புராணத்தை மட்டும் ஒருவர் படித்துவிட்டார் என்று சொன்னால் -நெஞ்சில் தைக்கும் படியாக- சும்மா தினசரி பேப்பர் படிப்பது போல் படித்தால் சரியாக வராது- நெஞ்சில் தைக்கும்படி படித்துவிட்டால் -அவன் வாழ்வில் எந்தப் பாவங்களும் செய்யமாட்டான் –
கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைத்து விடும் . நம்முடைய பாபங்களையெல்லாம் போக்குவதற்காகவே கருடபகவான் இருக்கிறார்.
அதுவும் இன்றைக்கு மிகப்பெரிய தொற்று இருக்கக்கூடிய நிலை. இந்த கிருமி நோய்க்கு விஷம் அல்லது தோஷம் அல்லது நஞ்சு என்று பெயர். இந்த நஞ்சினை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் கருடன் வேண்டும்.நஞ்சுக்கு விரோதி அல்லவா கருடன் .
இந்த கருடனை தினசரி நீங்கள் தியானத்தில் ஒரு நிமிஷம் நினைத்துக் கொள்ளலாம். ஒவ்வொருநாள் கருடனைப் பார்க்கும்போது ஒரு பலன் சொல்லப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பார்த்தால் பிணி விலகும்.
திங்கட்கிழமை குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய்க்கிழமை தைரியம் கிடைக்கும்.
புதன்கிழமை கடன் பகை இவைகள் எல்லாம் விலகிவிடும்.
வியாழக்கிழமை நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூரணமான அருள் கிடைக்கும்.
சனிக்கிழமை மன உறுதி கிடைக்கும்.
நம்முடைய வாழ்க்கைக்கு பிறகு நமக்கு மோட்ஷம் கிடைக்கும்.
பகவானுடைய இரண்டு திருவடிகளையும் அவர் பிடித்திருப்பார். நாம் அந்த பெருமாளின் திருவடியை பிடித்த கருடனுடைய திருவடியை வணங்கினால் நமக்கு எல்லா விதமான தோஷங்களும் விலகி பூர்ணமான நன்மை கிடைக்கும். ஒரே ஒரு நிமிஷம் நீங்கள் உங்கள் பூஜையில் பல மந்திரங்களைச் சொன்னாலும் கருடனையும் நினைத்துக்கொள்ளுங்கள். வானத்தில் அவரைப் பார்க்கும்போது மனதார ஒரு வணக்கத்தைச் செலுத்துங்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் கூடும் .ஒரு பக்கம் வேதம் பரப்பிய காஞ்சி மஹான் திருவடி. இன்னொரு பக்கம் வேத வடிவாகிய கருடன் திருவடி .வேறு என்ன குறை எல்லாம் நிறைதான்.
