வைதரணி (பைத்தரணி நதி) என்னும் நதியைப் பற்றி மிக கருட புராணம் பயங்கரமாக வர்ணிக்கிறது,யமபுரி செல்லும் பாதையில் இந்த நதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.அங்கு நுழைய நான்கு வாயில்கள் உண்டு. உலகெங்கிலும் உள்ள தவறு செய்பவர்கள் அனைவரும் தெற்கு நுழைவாயில் வழியாகச் செல்ல வேண்டும், இது இறுதியில் நரகத்திற்கு வழிவகுக்கிறது. அந்த வழியில் உள்ள நதி வைதரணி .
மகா பாவங்களைச் செய்தவர்கள் இந்த நதியைக் கடந்தே ஆக வேண்டும். கடக்காமல் இருப்பது முடியாது.ஆனால் கடப்பது கடினம்.காரணம் இந்த நதியின் தன்மை அப்படி.
வைதரணி நதி என்பது மிகவும் மோசமான ஒரு நதி ஆகும். ரத்தமும், சீழும், மலமும், சிறுநீரும் கலந்திருக்கும்.(இன்றும் நம் நாட்டில் சில நதிகள் அப்படித்தான் இருக்கின்றன) இந்த நதியில் வித்தியாசமான முகங்களுடன் கூடிய பிராணிகளும், ஜந்துக்களும் வாழ்ந்து கொண்டிருக்கும். நீங்கள் இறந்த பின்பு எமலோகம் செல்லும் வழியில் இந்த நதியில் உங்களை எமதூதர்கள் தள்ளி விட்டு விடுவார்கள். இதில் கிடந்து நீங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை ஏற்று அதில் உழன்று அந்த ஜந்துக்களிடம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து ஆக வேண்டும் என்பது விதியாகும்.
சீழும் ரத்தமும் மாமிசத்துண்டுகளும் சகிக்க முடியாத துர்நாற்றத்தோடு இந்த நதியை கடந்து தான் ஆக வேண்டும். இந்த நதியில் மூழ்கி எழ வேண்டும்.யார் யார் முழ்கி எழ வேண்டும்.
சில பாவங்களை கருட புராணம் பட்டியலிடுகிறது.
- தனக்கு இணையாக யாரும் இல்லை என்று செருக்கூற்றவன்.
- தாய் தந்தை குருவை அவமதித்தவன்.
- தன்னை நேசித்தவர்களுக்கு அநீதி செய்தவன்.
- உடல் ஊனமுற்றவர்களை அவமதித்து ,”குருடன் நொண்டி செவிடன்” என்று கேலி பேசியவன்.
- ஒருவருக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி வாக்களித்து விட்டு வாக்கு தவறியவன். உதாரணமாக” நீ போய் ஆபரேஷனுக்கு தயார் செய். உனக்கு பணம் வந்துவிடும் “என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில்,” என்னால் முடியவில்லை” என்று சொல்பவன்.
- திருமணம் முடியும் நேரத்தில் ஏதேனும் கோள் சொல்லி அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தியவன்
7.யாரிடம் தொழில் கற்றுக் கொண்டானோ, அவனை ஓட்டாண்டி ஆக்கி தெருவில் நிறுத்திவிட்டு, அவனுடைய வியாபாரத்தையும் தன்னுடைய வியாபாரமாக மாற்றிக் கொண்டவன்.
- சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகவும் மனவியல் ரீதியாகவும் தொந்தரவு செய்தவன்.
9.சத் சங்கம் பேசும் இடத்தில் போய் கலாட்டா செய்து இடையூறு செய்தவன்
10.புலால் உணவு உண்ட பிராமணன்.( இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புலால் உணவு எல்லோரும் உண்ணக்கூடாது என்று கூடச் சொல்லவில்லை. உடல் பலத்திற்காக சில பேர் உண்ணுகின்றார்கள். ஆனால் யார் விரதம் இருக்க வேண்டுமோ, யார் வேதம் சொல்ல வேண்டுமோ அவர்கள் பிற உயிர்களைக் கொன்று புசிப்பது கூடாது)
11.தர்ம அனுஷ்டானங்களை கைவிட்டவன்
12.எப்பொழுதும் பிறரை கோபத்தோடு தகாத வார்த்தைகளால் வசை பாடுபவன்.( கோபம் பாவம் சண்டாளம் என்பார்கள்)
13.எப்பொழுதும் எந்தக் கருத்தாக இருந்தாலும் பேசியவரை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே வீண் வாதம் செய்தவன்.
இப்படிப் பல பாவங்களைப் பட்டியலிடுகிறது கருட புராணம்.
கருட புராணத்தினுடைய பல பாவங்களை வள்ளலாரும் மனு முறை கண்ட வாசகத்தில் சொல்கின்றார்.
அப்படிப்பட்ட பாவங்களை செய்பவர்கள் இந்த வைதரணி நதி வாசத்தையும் ஸ்நானத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும்.
இந்த பாவங்களை செய்யாமல் நல்லவற்றையே பிறருக்குச் செய்தவன் தன்னுடைய ஆத்மாவுக்கும் நல்லது செய்து கொள்கின்றான்.
அவன் வினை வசமாக திரும்பவும் பூவுலகத்தில் வந்து பிறந்தாலும் நல்ல சௌகரியமான வாழ்க்கையையே வாழ்வான் .
ஒருவரின் சாந்தமான குணம், ஒழுக்கம், கல்வி, நீதி போன்ற குணங்களை பரிசீலித்துத் தான் அவனுடைய முற்பிறவியின் நன்மை தீமைகளை நம்மால் அறிய முடியும்.
அவன் வெறுமனே ஆடம்பரமாக செல்வ சுகங்களை மட்டும் அனுபவிப்பதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.
ஏன் என்று சொன்னால் அரக்க மனம் படைத்தவர்களிடம் கூட இன்றைக்கு எல்லை இல்லாத செல்வம் இருக்கிறது.
