ஒரு தொகுப்பு (படங்களுடன்)
ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி கண்ணன் திருவடி அடைந்தார்
31.8.1934-31-8-2023)
அண்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி இன்று அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் திருவரங்கத்தில், கோலாகலன் திருவடி அடைந்தார்.
கிருஷ்ணா பிரேமை என்பதிலேயே ஊறித் திளைத்தவர். அவர் இன்று க்ருஷ்ண பதம் சேர்ந்தார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் நினைத்து நினைத்து உணர்ச்சியோடு பேசிய நாக்கு இன்று ஓய்வு பெற்றது.
அவருடைய பூத உடல் இல்லாமல் நம் காதுகளில் இன்றும் அந்த காந்தக் குரல் ரீங்கரித்துக் கொண்டு இருக்கிறது.
ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் மீது அவர் கொண்ட அன்பு பக்தி பிரேமை அளவற்றது .
கும்பகோணத்துக்கு அருகில் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த சேங்கனூர் என்ற திவ்ய தேசத்தை பாருங்கள் அது அவருடைய பெருமையை கூறிக் கொண்டே இருக்கும். அவருடைய பெற்றோர்கள் ஸ்ரீ வெங்கட்ராம சாஸ்திரிகள், பார்வதி அம்மாள். 1936ம் ஆண்டு பிறந்தவர்.
நாம சங்கீர்த்தனம்.. கலிகாலத்தில் அது ஒன்று தான் உத்தாரகம்… என்று அகில பாரதமெல்லாம் நடையாய் நடந்து ,பாடிப் பாடிப் பேசி பக்தர்களை எல்லாம் ஒருங்கிணைத்தவர்.
அகில பாரத சாது சங்கம் என்ற உன்னத அமைப்பை ஏற்படுத்தியவர்.
திருக்கோவிலூருக்கு பக்கத்திலே பரனுர். அங்கே அவருடைய அபிமான தெய்வமான பகவான் கிருஷ்ணரை, கோலாகலன் என்று பெயர் சூட்டி அற்புதமான கோயிலைக் கட்டி அங்கேயே வாழத் தொடங்கினார்.
சுப்ரபாதம் தொடங்கி இரவு டோலோட்சவம் வரை அவரே தன்னுடைய கையால் பகவான் கண்ணனுக்கு சகல விதமான சேவைகளையும் செய்தார்.
அவருடைய ஸ்ரீ ராமானுஜ வைபவம் அடடா அற்புதம்….
108 திவ்ய தேசங்களைப் பற்றி அவர் எழுதிய உன்னதமான நூல் அற்புதமானது. திவ்ய தேசங்களுக்கு எல்லாம் அவரே கீர்த்தனைகளை இயற்றி இருக்கின்றார்.
கண்ணனுடைய பக்தியில் திளைத்து அவர் ஒவ்வொரு உற்சவங்களிலும் பாடுவதற்கான உற்சவக்ருதிகளை இயற்றி,அதுதான் பரனூரில் பாடப்ப டுகிறது.
ஒரு புரந்தரதாசர், ஒரு அன்னமய்யா..ஒரு தியாகராஜர்,ஒரு கோபாலக்ரிஷ்ண பாரதி…
ராகவ சதகம், ராதிகா சதகம், யுகல சதகம் ,கோவிந்த சதகம் ,ரங்க சதகம் என்று பல சதகங்களை இயற்றியுள்ளார். சதகம் என்பது 100 பாடல்கள்.
சாந்தமான முகம் .கோபி சந்தனம் .கண்களில் ஒளி. பேச்சில் கம்பீரம்.
இந்திய மரபுகள் சமயம் இவற்றையெல்லாம் காக்க வேண்டும் என்ற இடைவிடாத ஈடுபாடு.
புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஸ்மிருதிகளிலும் இருக்கக்கூடிய புதையல்கள் போன்ற செய்திகளை எல்லாம் வாரி வாரி வாரி வள்ளல் போல வழங்கியவர்.
எந்தவிதமான குறிப்பும் இன்றி ஆசுகவியாக கீர்த்தனைகளை இயற்றி கம்பீரமாகப் பாடக்கூடியவர். அவர் ஸ்லோகங்களை ராகத்தோடு சொல்லும் அந்த தொனியே கேட்பவர்களை ஆகர்ஷித்து எதிரே அமர வைக்கும்.
எந்தச் சொற்களிலும் கடுமை இருக்காது. புலமை இருக்கும்.
ஒரு குழந்தைக்கும் புரியும் வண்ணம் வேதாந்த விஷயங்களை எல்லாம் விளக்க வல்லவர்.
திருக்கோவலூரில் தேர் ஆரம்பித்து திருநாங்கூர் திவ்ய தேச திருப்பணிகள் வரை அவர் செய்த திருப்பணிகள் எண்ணில் அடங்காது.
ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஸ்ரீரங்க வாசத்தை மிக மிக விரும்பியவர். அவருடைய ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதா, வேத விஞ்ஞானம் வேதத்தின் சாரத்தை நமக்குச் சொல்வது.
பாகவத தர்மம் என்கின்ற ஒரு இதழ் பாகவதர்கள் வரலாறுகளை மாதா மாதம் வழங்குகின்ற உன்னதமான மாத சஞ்சிகை.
அவருடைய அமுத மொழிகளில் ஒரு துளி
கடந்த ஓரிரு மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் இன்று பகவான் கண்ணனின் திருவடியை அடைந்தார் .அவருடைய சேவைகளை மனதில் கொண்டு அவருக்கு நம் இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துவோம்.
அன்பன் செங்கோட்டை ஸ்ரீராம் பதிவிலிருந்து
அடியேன் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் திருக்கோவிலூர் – ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் நடைபெற்ற ஸற்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை மகோத்ஸவத்தின் போது ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கிருஷ்ண ப்ரேமி சுவாமியை பார்த்து நமஸ்கரித்தேன்
அவரால் தொடர்ந்து பாகவத சப்தாகம் செய்ய முடியவில்லை … உடல் வெகுவாக தளர்ந்திருந்தது. அவரால் இயலாத நேரத்தில் உடன் வந்த ரங்கன் சுவாமி உபன்யாசம் செய்தார். உடல் தளர்ந்து உட்காரவே சிரமப்பட்ட அந்த சூழ்நிலையிலும் தனது இயல்பான நகைச்சுவை உணர்வுடன் நாசுக்காக நறுக்கென்று இன்றைய நடப்புகளை விமர்சித்து பாகவதத்தை உபந்யஸித்தார். ருக்மிணி கல்யாணம் குறித்த அவரது விவரிப்பில் இன்றைய பெண் குழந்தைகளின் மனோபாவம் கண்முன் நின்றது.
தற்போது தபோவனத்தில் பாலாலயமாகி அடுத்த வருடம் மகா கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆராதனை நேரத்தில் அங்கு வந்திருந்த நிர்வாகிகள் சிலர், தங்களுக்குள் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தபோவன ஆலய கட்டடங்கள் கட்டி வெகு காலம் ஆகிவிட்டது அவற்றை தற்போதைய நவீன முறைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று ஓரிருவர் கருத்து தெரிவித்தார்கள். அது அவர்களுக்குள் ஒரு மனக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.
மறுநாள் உபன்யாசத்தின் போது ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்கள் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் மகிமையை சொல்லிக் கொண்டு வந்தவர், ஸ்வாமி தன் மனதில் தோன்றியபடி இங்கே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த ஆலயம் எந்த ஆகமங்களுக்கும் கட்டுப்படாதது … இது சுவாமியின் மனத்தில் தோன்றிய ஆகமம். இந்த பழமையும் சுவாமியின் அருளும் தான் ஞான ஆலயத்துக்கு பொலிவு. எனவே இதை மாற்றி விட வேண்டாமே…. என்றார்.
ஸ்ரீஞானானந்த சுவாமியின் திருவுள்ளத்திலிருந்து என்ன வார்த்தைகள் வருமோ அதுவே ஸ்ரீஸ்ரீ அண்ணாவின் வாக்கில் இருந்தும் வந்தது… அதைக் கேட்டு முந்தைய நாள் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்… தங்களுக்குள் பேசிக் கொண்ட ஒரு குழப்பத்துக்கு சுவாமி ஸ்ரீ அண்ணா மூலம் ஒரு தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார் என்று மெய்சிலிர்த்துப் போனார்கள்…
தொடர்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் தபோவனத்தில் அவர் பாகவத சப்தாகம் செய்து வந்தார் என்பது ஆச்சரியமூட்டும் விஷயம்.
சந்யாச எண்ணத்திலிருந்து அவரை குடும்பஸ்தராக்கி… அவருக்கு திருமணம் செய்வித்து…. இந்த அளவுக்கு பாகவத பிரச்சாரகராக… சமுதாயத்தில் நல்வழிப்படுத்தும் ஆச்சார்யராக அவரை உருவாக்கி விட்ட பெரும் கைங்கரியத்தை ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் செய்தார் என்பது அவரது வாழ்க்கையில் பதிவான விஷயம்.
வேறு ஒரு அன்பரின் பதிவிலிருந்து
நீங்கள் படத்தில் காணும் அவரது திருமாளிகைக்கு இன்று காலை சென்று அவரின் சரம திருமேனியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் ..
ஸ்வாமிகளின் திருமாளிகைக்கு சரியாக நான்கு ஐந்து வீடுகள் மேற்கே – இருந்த வீட்டில் – மிக புகழ் வாய்ந்த கிருஷ்ணசைதனியர் என்கிற சுவாமி சைதன்ய மஹாபிரபு 18 பிப்ரவரி 1486 – 14 ஜூன் 1534 (வயது 48) ஒரு கோவில் பட்டர் பிரான் வீட்டில் ஆறுமாதங்கள் தங்கி அரங்கனை தரிசித்தார். (1510)
நமது ஸ்வாமிகளும் அந்த ஸ்வாமிகள் போலவே பக்தர்களுக்கு கிருஷ்ண லீலைகளை பற்றி தங்களது பிரவசரணங்கள் மூலமாக பக்தி மற்றும் ஞானத்தை ஊட்டியவர் – அவர் இருந்த அதே தெருவில் திருமாளிகையை அமைத்து அவரது அந்திம காலத்தை – அரங்கன் திருவடி நிழலில் கழித்தவர் ..
ஸ்வாமிகளின் அந்திம காரியங்கள் இன்று காலை 11 மணிக்கு மேல் ஸ்ரீரங்கம் வட திருக்காவேரி கொள்ளிட கரை – திருமங்கை மன்னன் படித்துறையில் நடைபெறும்.
for vedio;
