கோவிந்தராஜ கோவிந்த ராஜா
குளிர் சோலை தில்லை நகர் கோவிந்தராஜா
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தராஜா
குறை தீர்க்க வேண்டுமே கோவிந்தராஜா
கலையாளன் நடராஜன் மலையாளனின்
மகளோடு சமமாக நடமாடவும்
ஆடாமல் அசையாமல் தாடாளனே
அரவத்தில் சயனித்தாய் அரவிந்தனே
மலர் போன்ற மகள் அங்கு துணையாகிட
மங்கை மன்னன் உன்னைக் கண்டு துதி பாடிட
சங்கோடு சக்கரம் கரம் தாங்கிட
இங்கு நீ அமர்ந்தாயே அருள் செய்திட
இராமனே நீ என்றே குலசேகரன்
பாடிப் பரவினான் பதிகத்திலே
கீதாச்சாரியன் நீ என்றுதான்
சாதாரண மக்கள் கொண்டாடுவர்
இராமனா கிருஷ்ணனா கோவிந்தனா
இராமகிருஷ்ண கோவிந்தன் ஆனாயோ நீ
உலகுக்கே உயிர்ப்பான இடம் தன்னிலே
ஒய்யாரமாகவே பள்ளி கொண்டாய்
ஓம் என்னும் ஓங்கார உருவானவா
உனையன்றி கதி இல்லை உயர்வானவா
ஒரு மூன்று முறை உன்னை திருப்பாவையில்
திருவில்லிபுத்தூராள் அழைத்தாள் ஐயா
பெரியாழ்வார் பெண்ணையே பெரியோனே நீ
உரியாளாய் உயர்த்தினாய் அரி யான நீ
அடியோமும் அது போல் அடி வாழ்ச்சியே
அடைந்துய்ய வழிகாட்டி அருள்வாய் அப்பா
அறியோமே பிறிது ஒன்றே அமுதானவா
அரி நீயே அரி நீயே அரிதானவா
மதுரகவியாழ்வான்
மதுராந்தகம்
