குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.
திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்த ரிஷிகளின் ஆலோசனைப்படி திருத்தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.
வங்கக் கடலும் மாசி மகமும்
மாசிமகத்தன்று காந்தசக்தி மிகுந்த புதிய நீரூற்றுகள் தோன்றி கடலில் கலக்கும். எனவே அன்றைய தினம் கடலில் நீராடும்போது, அந்த காந்தசக்தி உடலில் கலந்து உடலையும் மனதையும் புத்துயிர்ப்பு கொள்ளச்செய்யும். இதை மனதில் கொண்டே நம் முன்னோர் மாசிமகத்தன்று கடல் நீராடுவதை ஆன்மிகச் சடங்காக வைத்திருக்கின்றனர்.
திருவேட்டக்குடியில் மாசி மகம்
ஒருசமயம் உமையவள் மீனவப் பெண்ணாக அவதரித்தாள். அவளை மணம்செய்ய விரும்பிய ஈசன் ராட்சத மீனொன்றை சிருஷ்டித்து மீனவர்களை அச்சுறுத்தினார். பின்பு தானே மீனவனாக வந்து அந்த மீனை வென்றடக்கி, வெற்றிப் பரிசாக மீனவத் தலைவனின் மகளான உமையை மணந்து கொண்டார். இருவரும் மீனவர்களுக்கு சிவசக்தியாக காட்சி தந்த ருளினர். மீனவர் தலைவன் பேணி வளர்த்த தன் பெண்ணைப் பிரிவதையெண்ணி துயரம் கொண்டார். அவரது துயராற்றும் முகமாக ஈசன், “”யாம் ஆண்டுக்கொருமுறை மாசிமகத்தன்று கடலாட வருவோம்; கண்டுமகிழலாம்” என கூறினார்.இந்நிகழ்வு திருவேட்டக்குடியில் நிகழ்ந்தது. மாசி மகத்தன்று ஈசனும் உமையும் மீனவப் பெண்ணாகவும் மீனவனாகவும் திருவேட்டக்குடி கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அச்சமயம் கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அகரம்பேட்டை மீனவர்கள் ஒன்றுகூடி, தங்கள்குலப் பெண்ணை மணந்த ஈசனை “மாப்ளே, மாப்ளே’ என கூவியழைத்து சொந்தம் கொண்டாடி, தீர்த்தவாரி மேற்கொள்வர்.
மெரினா மாசி மகம்
சென்னையில் மெரினா கடற்கரையில் கபாலி உட்பட்ட 7 சிவாலயங்கள், பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் எழும்பூர் சீனிவாசப்பெருமாள், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களின் சுவாமிகள் கடல் நீராட்டலும் தீர்த்தவாரியும் நடைபெறும் . இதேபோல் எலியட்ஸ் கடற் கரையிலும் நடைபெறும் .பூந்தமல்லி, பட்டாபிராம்,பெருமாள்கள், திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில் , பாரிமுனை காளிகாம்பாள் கோயில், மயிலாப்பூர் வெல்லீ,ஸ்வரர் கோயில், கருமாரியம்மன் கோயில் ,குன்றத்தூர் முருகன் பெரம்பூர் அகரம் முருகன் கோயில் சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் வராகி கோயில் என பல ஆலயங்களின் உற்சவமூர்த்திகளை தரிசிக்கலாம்.காலை நேரத்தில் கடற்கரை சர்வீஸ் சாலையில் வரிசையாக நிற்கும் உற்சவ மூர்த்திகளைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் .
மாமல்லபுரத்தில் மாசி மகம்
கருட வாகனத்தில் தலசயனப் பெருமாள் ஆதிவராகர் ஆகியோர் எழுந்தருள்வர். சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு யோகராமர் மற்றும் அருகில் உள்ள திருக்கோவில்களின் உற்சவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். மாமல் லபுரம் கடற்கரையில் பழங்குடிகளான இருளர்கள் தங்களின் குலதெய்வமான கன்னியம்மனை மாசிமகத்தில் வழிபடுவர். அதற்காகவே பல்வேறு ஊர்களிலிருந்து இருளர்கள் மாமல்லபுரம் வந்து சேர்வார்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும்.பிறகு அவர்கள் பாரம்பரிய முறைப்படி கன்னியம்மனை வழிபடுவர்.அதனை ஒட்டி அவர்களுடைய சடங்குகள் திருமணம் நிச்சயம் காது குத்துதல் மொட்டை அடித்தல் முதலியவற்றை நிறைவேற்றிக் கொள்வார்கள்