ஒருவன் உய்வு பெறுவதற்கு இரண்டு வழிகளைச் சாத்திரம் காட்டுகின்றது. அதில் ஒன்று தவம் செய்வது. இன்னொன்று தானம் செய்வது.
தானங்களில் எது உயர்ந்தது என்பது குறித்து பல வரையறைகள் உண்டு.
தானங்களில் சிறந்தது குதிரைகளைக் கொடுப்பது. குதிரை தானத்தைவிட கஜ(யானை) தானம் உயர்ந்தது. கஜ தானத்தைவிட பூமி தானம் உயர்ந்தது. பூமிதானத்தைவிட எள் தானம் உயர்ந்தது. எள் தானத்தைவிட தங்கத்தை (சொர்ண)தானம் செய்வது உயர்ந்தது . சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம்.
மற்ற தானத்தில் போதும் என்று சொல்ல மனம் வராது. ஆனால் அன்னதானம் ‘போதும், போதும்‘ என்று சொல்ல வைக்கும்.
ஒருவனுக்குப் பசியால் உயிர் போகின்ற பொழுது, அவனுக்குத் தங்கத்தையும், குதிரையையும் தானம் செய் வதால் பயனில்லை. ஆனால் ஒரு வாய் அன்னத்தை அவருக்கு இட்டால் , அவன் உயிர் தங்கும். எனவேதான் அன்ன தானத்தை உயர்வாகச் சொன்னார்கள். அப்படிப்பட்ட அன்ன தானத்தை மேற்கொள்வதற்கு இணையான பலனை ஏதாவது ஒரு விரதம் நமக்கு கொடுக்கிறதா என்று ஆராய்ந்த பொழுது ‘வரூதினீ ஏகாதசி விரதம்‘ அத்தகைய பலனை நமக்கு அருளும்.
ஒருவன் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்றால் , அவனுக்கு ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஏகாதசி விரதத்தின் பலனை பற்பல தர்ம நூல்களும் பேசுகின்றன.வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ணதானம் செய்வதற்கு இணையானது’ என்று தர்ம நூல்கள் சொல்கின்றன. இதில் ஒரு செய்தி உண்டு.
குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ணதானம் செய்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
முதலில் நாம் குருசேத்திரப் புண்ணிய பூமியில் இருக்க வேண்டும். அதுவும் சூரிய கிரகணத்தின்போது இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தங்கத்தை தானம் செய்ய வேண்டும். ஒரு தானத்தின் மூன்று இலக்கணங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. எந்த இடத்தில் செய்கிறோம், எந்த புண்ணிய தினத்தில் செய்கிறோம், என்ன பொருளை செய்கின் றோம்என்ற மூன்றும் இதில் ரகசியமாகச் சொல்லப்பட்டிருக் கின்றன.
நம்முடைய செயல்களுக்கு ஏற்பவே புண்ணியம் பாவம் என்ற வினைகள் நம்முடைய வாழ்க்கை அமைப்பை தீர்மானிக்கின்றன. ஒருவன் வாழ்வில் நிகழும் அத்தனை நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் செய்த வினைப்பயன் அடியாகவே அமைகிறது. அதில் துன்பப்படுகிறவர்களுக்கு விமோசனமாக சில விரத நாள்களை முறையாகக் கடைப் பிடித்து பரிகாரம் பெறும்படிபெரியவர்கள் மாத, நட்சத்திர, திதி , வார அடிப்படையில் அமைத்துத் தந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விரதங்களில் ஒன்றுதான் ஏகாதசி விரதம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து ஏகாதசி 11 வது நாள். இந்த நாளில் நம் உடலுக்கு ஓய்வு கொடுத்து மனதுக்கு உற்சாகம் கொடுக்க அமைந்த உன்னதமான நாள் தான் ஏகாதேசி விரத நாள். அன்று முழுமையாக விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் நம் மனம் அமைதி பெறும். சிந்தனை வலிமை பெறும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.பாவங்கள் தீரும். பரமன் அடி காட்டும்.
இதில் வைகாசி தேய்பிறை ஏகாதசியில் வரும் விரதமே வரூதினீ ஏகாதசி விரதம். தொடர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துவரும் பெண்கள் இந்த ஏகாதசி விரதத்தை முறையாக அனுசரித்து, பெருமாளை வழிபட்டால் விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும் என்று உறுதி கூறுகின்றன விரத மகாத்மிய நூல்கள்.
இந்த விரதத்தின் மகிமை குறித்து தர்மபுத்திரர் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறார். அப்பொழுது இந்த ஏகாதசியின் மகிமை குறித்து கிருஷ்ண பரமாத்மா விளக்கமாக எடுத்துரைக்கிறார்.
இந்த விரதத்தை ஒருவன் கடைபிடித்தால், அவன் வாழும் பொழுதும் அதற்குப் பின்னாலும் ,பாவத்தின் விளைவு நீங்கி, மகிழ்ச்சியைத் தருவதோடு, நல்ல அதிர்ஷ்டத் தையும் தரும். இல்லத்தரசி பாக்கியம் பெற்றவள் ஆவாள் . சந்ததிகளும் நல்ல நிலையில் இருக்கும். நிறைவாக , பிறப்பு இறப்பு சுழலிலிருந்து விடுபட்டு என் திருவடியை அடை வான்.
ஒரு காலத்தில் இந்த ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைபிடித்து மாந்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றான். இராமன் பிறந்த இஷ்வாகு குலத்தில் துந்துமாரா என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். அவன் செய்த தவறுக்காக சிவ பெருமானால் சபிக்கப் பெற்றான். பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து இந்த ஏகாதசி விரதம் இருந்து வழி பட்டதால், சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான். ” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
