நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர்.
விழா நாட்களில் தினசரி வாகன சேவை உண்டு.தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
நாளை 7.3.23 (செவ்வாய்க்கிழமை) காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வருவார். 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருகண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரம் மாசித் திருவிழாவின் ஒரு நிகழ்வாய், பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாய் மாற்றி, ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாபம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாய் இருப்பது வழக்கம். “எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை” என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது, சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.
12-ந்தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது.
