By S.Gokulachari
நம்முடைய இந்து சமயத்தில் பற்பல விரதங்கள் உண்டு.ஒவ்வொரு விரதத்திற்கும் வெவ்வேறு பலன்கள், நோக்கங்கள், கதைகள், மரபுகள் உண்டு. ஒரு சில விரதத்தை சில குறிப்பிட்ட பிரிவினரே அனுசரிப்பார்கள்.
சில விரதங்களை, சில மாநிலங்களில் ,சில ஊர்களில் உள்ளவர்கள் மட்டுமே அனுசரிப்பார்கள்.சில விரதங்களை சில சம்பிரதாயத்தைச் சேர்ந்த வர்கள் மட்டுமே அனுசரிப்பார்கள்.
ஆனால், ஏதாவது ஒரு விரதம், பாரத தேசம் முழுமைக்கும், எல்லாச் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாலும் அனேகமாக ஏகமனதாகக் கடைபிடிக்கப்படுகிறது என்றால் அது ஏகாதசி விரதம் மட்டுமே.
‘ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி’ என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.
பெரும்பாலும், இந்த விரதம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்,சன்னியாசிகள்,பிரம்மச்சாரிகள்,இல்லறத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், சாதாரண வேலையைச் செய்கின்ற சாமானியர்கள், என்று அனைவராலும் பின்பற்றப்படுகின்ற விரதம்.
எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.
ஏகாதசி விரதத்தில் இருந்து சாஸ்திரப்படி யாருக்குமே விலக்கு அளிக்கப்படவில்லை.எனவே இது உத்தமமான விரதங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பெண்களுக்கும் இது மிக உயர்ந்த பலனைத் தருகின்ற விரதம்.காரணம் ஏகாதசி என்பதே ஒரு பெண்ணின் பெயர் தான்.
நம்முடைய சமய மரபில்,ஆறுகளுக்கும், நட்சத்திரங்களுக்கும், பெண்ணின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது.
கங்கை,காவிரி, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா என்ற ஆறுகளுக்கு பெண்ணின் பெயர்கள்தான் சூட்டப்பட்டிருக் கின்றன .
அதைப்போல அசுவனி, பரணி, கார்த்திகா, ரோகிணி என்று தொடங்கி ரேவதி வரை, 27 நட்சத்திரங்களுக்கும், பெண்ணின் பெயரே சூட்டப்பட்டு இருக்கின்றன.ஏகாதசி என்கின்ற திதியின் பெயரும் ஒரு பெண்ணுக்கே சூட்டப்பட்டுள் ளது.
பெண்ணின் பெயர்தான் ஏகாதசி.
இறைவன் ஸ்ரீமந் நாராயணன் தியானத்தில் இருந்த பொழுது, அவரைக் கொல்ல வந்த அசுரனை வதம் செய்வதற்காக, எம்பெருமானிடம் இருந்து வந்த பெண்ணின் பெயர்தான் ஏகாதசி.இன்னும் ஒரு செய்தி.
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். பல பொருள்கள் பாற்கடலிலிருந்து தோன்றின .நிறைவாக அமிர்தம் வெளிப்பட்டது.அந்த நாள்ஏகாதசித் திருநாள் . அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கங்கையைப் போன்ற நாதியில்லை.
தாயைப் போல உறவில்லை.
நாராயண நாமத்தைப்போல நாமமில்லை.
விஷ்ணுவைப் போன்ற தெய்வமில்லை.
ஏகாதசி விரதம் போன்ற விரதம் இல்லை.
எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும்.
ஏகாதசித் திதியானது தீமையை அழித்து நன்மையை தருவதற்கான குறியீடாக அன்று முதல் இன்று வரை பின்பற்றப்படுகின்றது.
