நாம் வாழ்க்கையில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
BY எஸ். கோகுலாச்சாரி
பராசரபட்டர் ஸ்ரீரங்கத்தில் அமர்ந்து சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் .அப்பொழுது இராம அவதார நிகழ்வுகளைப் பற்றியும், பாரதத்தில் கண்ணனின் பெருமையைப் பற்றியும் சீடர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.
பராசரபட்டர் இராமாயணத்திலும், இராமன் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் என்று சீடர்களுக்குத் தெரியும்.
இராமாயண நிகழ்வுகளைச் சொல்லுகின்ற பொழுது சிலிர்த்து விடுவார் .அப்பொழுது ஒரு சீடர் கேட்டார்.
“சுவாமி! இராமனுக்கு எத்தனை பெருமைகள் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனாலும் கண்ணனுக்கு உள்ள பெருமை அவனுக்கு இல்லையே சுவாமி” என்றார்.
பராசரபட்டர்,” ஏன் அப்படி சொல்கிறீர்கள்?”என்று கேட்டார்.
அதற்கு சீடர் சொன்னார்.
” கண்ணன் தூது நடந்தான். அந்த ஏற்றம் இராமனுக்கு இல்லையே”
“அதில் என்ன பெரிய பெருமை வந்துவிடப்போகிறது. தூது நடக்காதது இராமன் தவறா என்ன? இராமனை யாராவது தூது செல்ல வேண்டும் என்று கேட்டு அவன் மறுத்தானா என்ன?
இருவரும் தூது நடந்து இருந்தால் யார் சிறந்த தூது என்று பேசலாமே தவிர, தூது சென்ற ஒருவனையும், செல்ல வாய்ப்பில்லாத அல்லது அவசியமில்லாத ஒருவனையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது” என்றார்.
நாம் வாழ்க்கையில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.நம் அமைதியின்மைக்கு இது தான் காரணம்.
இவன் ஏன் அப்படி இல்லை? அவன் ஏன் இப்படி இல்லை? என்று சதாசர்வகாலமும் ஒப்பிட்டுக் கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பிறரையும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நான் அவன் ஏன் அவனைப் போல் இருக்க வேண்டும்?
அவன் அவன் தான் !
இவன் இவன் தான்!
அவனுக்குள்ள பெருமை அவனுக்கு!
இவனுக்கு உள்ள பெருமை இவனுக்கு, என்று சிந்தித்தால் வாழ்க்கை தெளிவடையும்.
