கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்று பெயர் இதற்கு அடுத்து வருகின்ற மார்கழி ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். அடுத்தடுத்து வருகின்ற இந்த இரண்டு ஏகாதசிகளும் மிக முக்கியமான ஏகாதசிகள் .

கைசிக ஏகாதசி டிசம்பர் 4ஆம் தேதி வருகின்றது. பஞ்சாங்கத்தில் ஸ்மார்த்த ஏகாதசி என்றும் வைஷ்ணவ ஏகாதசி என்றும் இரண்டு விதமாகப் போட்டிருக்கும். ஸ்மார்த்த ஏகாதசி முதல் நாள் சிலர் அனுசரிப்பார்கள் ஆனால் வைஷ்ணவ ஏகாதசி 4.12.22 தான் வைஷ்ணவ ஆலயங்களில் அனுசரிக்கப்படும்.கைசிக ஏகாதசி என்பது டிசம்பர் 4ஆம் தேதிதான் . சில ஆலயங்களில் சென்றமாதம் ஏகாதசி அனுஷ்டித்திருக்கிறார்கள். இது அந்த சம்பிரதாயம் கோயில் நடைமுறை பொறுத்து மாறுகிறது.அவரவர்கள் அதற்கேற்ப பின்பற்றலாம்.
கைசிக ஏகாதசி என்பதை உத்தான ஏகாதசி என்றும் சொல்லுவார்கள். உத்தானம் என்றால் எழுந்திருத்தல். நான்கு மாதங்களுக்கு முன்பு ஜேஷ்டாபிஷேகம் முடிந்து யோகு துயில் கொண்ட பெருமாள் இந்த ஏகாதசியில் எழுகிறார். சாதுர்மாஸ்ய முடிவு என்று சொல்வார்கள்.
இந்த ஏகாதசி பற்றிய குறிப்பு வராக புராணத்தில் உள்ளது. அதில் ஒரு பகுதியாக கைசிக மஹாத்மியம் என்று உள்ளது .வராகப்பெருமாள் இந்த கைசிக ஏகாதசியின் மகாத்மியத்தைச் சொல்வதாக உள்ளது .இதிலுள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் நம்முடைய மனதை உருக்கும்.நாராயண பரத்துவத்தை நானிலத்தில் நிலைநாட்டும். இந்தக் கதை நடந்தது திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தில். அது திருநெல்வேலிக்கு அருகே உள்ள திருத்தலம். மேற்கு தொடர்ச்சி மலை அற்புதமாய் காட்சி தரும்.
கீழே பிரதானமான கோயில் உண்டு. மலைக்கு மேலேயும் ஒரு கோயில் உண்டு. மலைமேல் நம்பி என்று சொல்வார்கள். இப்பொழுதும் இந்த திருகுறுங்குடி தலம் பெரிய வசதிகளோடு இல்லை. ஆனால் கோயில் மிகப் பிரமாண்டமானதாக இருக்கிறது. மேலே பெருமாளை தரிசிப்பதற்காக வசதிகள் உண்டு.
கரடு முரடான பாதை.
சரி கதைக்கு வருவோம்.
ஒரு காலத்தில் நம்பாடுவான் என்ற ஏழை இங்கே பெருமாளுக்கு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்து கொண்டிருந்தார் அழகான பாடல்களால் பெருமாளின் பெருமையைப் பாடுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவரை பிரம்மராட்சஸ் ஒருவர் வழிமறித்தான். நம்பாடுவானைக் கொன்று, தனக்கு உணவாக கொள்வதாகச் சொன்னான்.
அந்த பிரம்ம ராட்சசைப் பார்த்துப் பயப்படாத நம்பாடுவான்,” சரி நீ என்னை கொன்று உண்ணலாம். ஆனால் அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. அதை முடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றான் .
பிரம்ம ராக்ஷஸ் நம்பவில்லை .”மனிதர்கள் வாக்கு தவறுவார்கள். ஆகையால் நான் நம்ப மாட்டேன்” என்று பிரம்மராட்சஸ் சொல்ல, அந்த பிரம்ம ராக்ஷஸனிடம் பலவிதமான சத்தியங்களைச் செய்து கொடுக்கின்றார் நம்பாடுவான்.
பிறகு கோயிலில் போய் பெருமாளை மனமுருகப் பாடுகின்றார். அவர் பாடிய பண்ணிலேயே கைசிகப் பண் உயர்ந்தது.
ஏகாதசி விரதம் முடிந்து யாருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் அல்லவா .நம்பாடுவான் ஏழை. என்ன செய்வார் ? வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸுக்கு உணவாகி விடுவோம் என்று வந்தார்.
மனம் திருந்திய பிரம்மராட்சஸ் அவரை வணங்கி சாப விமோசனம் பெற்றான் என்பது கதை.
தான் பாடிய கைசிக பண்ணின் பலனை தத்தம் செய்து கொடுத்து அவனுக்கு சாபவிமோசனம் கொடுத்தான் நம்பாடுவான்.
பிரம்ம ராட்சசன் சாபம் தீர்த்த எகாதசி என்பதால் இதற்கு கைசிக ஏகாதசி என்று பெயர். இன்றைக்கும் இந்த சம்பவம் திருக்குறுங்குடி திவ்விய தேசத்தில் விடிய விடிய நடக்கிறது.
இந்த ஏகாதசி விரத நாளிலேயே ஷீராப்தி சயன விரதமும் வருகிறது .அன்று துளசியாலும் வாசனை மலர்களாலும் பாற்கடல் துயில் கொண்ட பகவானைத் துதிக்க வேண்டும்.
இந்த ஏகாதசிக்கு முதல் நாள் வைதரணி விரதம் என்று ஒரு விரதம் இருப்பார்கள் .இந்த வைதரணி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தில் மிக மோசமான வைதரணி ஆற்றை கடக்க வேண்டிய தேவை இருக்காது என்பார்கள்.
கைசிக ஏகாதசி விரதத்தை வழக்கம்போல தசமியில் மதியம் முதல் விரதமிருந்து துவக்க வேண்டும்.ஏகாதசி முழுக்க எந்த உணவு உட்கொள்ளாமல் பகவான் விஷ்ணுவின் இதிகாச புராண கதைகளைக் கேட்டும் நாமசங்கீர்த்தனம் பாடியும் இருந்து,அடுத்த நாள் துவாதசி பாரணை செய்து முடிக்க வேண்டும்.
ஏகாதசியில் மிகமுக்கியமாக ஹரிவாசரம் என்ற பகுதி இருக்கிறது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏகாதசி கடைசி ஆறு மணி நேரம் முதல்,துவாதசி முதல் 6 மணி நேரம் ஹரிவாசரம் என்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவும் உட்கொள்ள கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது .குடும்ப வழக்கத்தை அனுசரித்து ஏகாதசி விரதத்தைப் பின்பற்றலாம். ஆண்டாளின் பாசுரமான கீழே உள்ள பாசுரத்தை அன்று பாடலாம்.
செம்மையுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகைப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே திருமங்கையாழ்வாரின் பாசுரமான குலம் தரும் செல்வம் தந்திடும் பாசுரத்தையும் பாடி முடிக்கலாம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
