வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்
தூயோன் சுடர் மானவேல்
மண் அளந்த பெருமானுக்கு சொல் அளந்த பெருமான்தான் திருமங்கை ஆழ்வார். அவர் பெண் எடுத்த ஊர் இந்த ஊர்.
ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழ்வார் என்று அத்தனை வைணவர்களாலும் போற்றப் படுபவர் நம் திருமங்கை ஆழ்வார். அவர் அவதரித்த ஊர் திருக்குறையனூர்.
நீலன் என்ற பெயரோடு சோழ மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட திருவாலி நாட்டின் அரசனாக இருந்தவர். அவர் எப்படி ஆழ்வாராக மாறினார் என்பது ஒரு சுவையான கதை. எல்லா அரசர்களையும் போலவே, அவரும் போரில் வெல்லுதல், செல்வங்களைத் திரட்டுதல், சிறப்பாக வாழுதல் என்று சாதாரண மனிதர்களுக்குரிய அத்தனை குணங் களோடும் இருந்தார் .இதை ஆழ்வாரே,
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.
என்ற பாசுரத்தில் கூறுகின்றார் அவரை மாற்றியது ஒரு பெண்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற உலக வழக்கை மெய்ப்பித்துக் காட்டிய உதாரணம்தான் திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை .
அதனால் தான் இந்த ஆழ்வாருக்கே திருமங்கை ஆழ்வார் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கலியன் ஒலி மகாநாடு நடக்கக்கூடிய ஊருக்கு திருவெள்ளக்குளம் என்று பெயர் .
இங்கே அவதரித்தவர் குமுதவல்லி நாச்சியார் குமுதவல்லி நாச்சியாரை மணந்து கொள்ள ஆசைப்பட்டார் திருமங்கை ஆழ்வார் .
அப்பொழுது அவர் ஆழ்வார் ஆகவில்லை. ஆனால் அவரை ஆழ்வார் ஆக்கியே தீருவது என்று முடிவெடுத்த பெருமாள், குமுதவல்லி நாச்சியாரை வைத்து ஒரு விளையாடலை அரங்கேற்றினார். குமுதவல்லி நாச்சியார் திருமங்கையாழ்வாரை மணந்து கொள்ள இரண்டு நிபந்தனைகளை விதித்தார்.
ஒன்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு வைணவராக வேண்டும்.
இரண்டு தினசரி 1008 திருமால் அடியார்களுக்கு அமுது படைக்க வேண்டும்.
திருமங்கை ஆழ்வார் இரண்டையும் செய்யத் துணிந்தார். தினசரி 1008 வைணவர் களுக்கு ததியாராதனம் என்றால் எத்தனைச் செல்வம் வேண்டும்?
கையில் இருந்த செல்வம் எல்லாம் கரைந்தது. ஆயினும் வைராக்யமிக்க ஆழ்வார் கொள்ளை அடித்தாவது ,கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத் தார்.
“இவரைத் திருத்துவதற்கு இதுதான் சமயம்” என்று நினைத்த பெருமாள், கல்யாண ரங்கநாதர், மகாலட்சுமியோடு புதிதாக மணம் புரிந்து கொண்டவர் போல் ஒரு காட்டின் வழியாகச் சென்றார்.
திருமங்கையாழ்வார், தன்னுடைய ஆடல்மா குதிரை மீது ஏறி, பெருமாளையே கொள்ளை அடிக்கத் துணிந்தார்.
எல்லா நகைகளையும் கழட்டி கொடுத்த திவ்ய தம்பதிகள், ஆழ்வார் முன் நடுங்கியது போல நடித்தனர். ஆழ்வா,ர் பெருமாள் திருவடி விரலில் அணிந்திருந்த மெட்டியை, கால் பற்றிக் கழற்ற வேண்டும் என்று இழுத்தார். முடியவில்லை .அடுத்து கொள்ளையடித்த அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டித் தூக்கினார். ஆனால் அந்த மூட்டையையும் தூக்க முடியவில்லை. அப்பொழுது பெருமாள் சிரித்தார். திருமங்கையாழ்வாருக்கு கோபம் வந்தது. தன்னுடைய வாளை உருவி “என்ன மந்திரம் போட்டாய்?” என்று பெருமானைக் கேட்க,” இந்த மந்திரம் தான் போட்டேன் தெரிந்துகொள்” என்று அவருடைய காதோடு மந்திரத்தைச் சொன்னார். அந்த மந்திரம் தான் ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரம்.
இந்த மந்திரம் செவியில் விழுந்த அடுத்த வினாடி திருமங்கை ஆழ்வார் தன்னிலை மறந்தார். தான் யார் என்கின்ற ஞானத்தைப் பெற்றார். தன் எதிரில் நிற்கக்கூடிய திவ்ய தம்பதிகள் யார் என்பதையும் புரிந்து கொண்டார். அடுத்த நிமிடம் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அழகான தமிழில் தன்னுடைய முதல் பிரபந்தமாகிய பெரிய திருமொழியைத் துவக்கினார்.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடி யிளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி.
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராய ணாவெனும் நாமம்
இந்த மந்திரத்தை சொன்னால் நமக்கு கிடைக்காதது எதுவுமே இல்லை என்பதையும் ஒரு அழகான பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
குலந்தருஞ் செல்வந் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராய ணாவென்னும் நாமம்.
திருமங்கையாழ்வார் எல்லா திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றி பாடுவதையே வழக்கமாக்கிக் கொண்டார் .ஆழ்வார்களிலே அதிக திருத்தலங்களை சேவித்துப் பாடியவர் திருமங்கையாழ்வார். திருமங்கையாழ்வார் இல்லாவிட்டால் இத்தனை திவ்யதேசங்கள் நமக்குக் கிடைத்திருக்காது.
பல திருத்தலங்களுக்கும் சென்று அவர் தொண்டாற்றினார். பெரிய திருமொழி, சிறிய திருமடல்,,பெரிய திருமடல்,,திருஎழு கூற்று இருக்கை, திருகுறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் என்று ஆறு பிரபந்தங்கள் பாடினார். நம்மாழ்வார் வேதத்துக்கு இணையாக பாடிய நான்கு பிரபந்தங்களுக்கு இந்த ஆறு பிரபந்தங்களும் அங்கங்கள் என்று சொல்வார்கள் பெரியவர்கள்.திருவரங்கத்தில் பல காலம் இருந்து பல திருப்பணிகளைச் செய்தார் .நிறைவாக திருக்குறுங்குடி என்ற ஊரில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள பெருமானுக்குக் கைங்கரியம் செய்து பரமபதம் அடைந்தார். திருமங்கை ஆழ்வாரை ஒரே ஒரு தரம் மனதில் நினைத்தாலும் நமக்கு சிலிர்ப்பு ஏற்படும். மணவாள மாமுனிகள் திருமங்கையாழ்வார் பெருமையை இப்படிப் போற்று கின்றார்.
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே! வாழ்த்து
வாழ்க திருமங்கை ஆழ்வார் புகழ்.வாழ்க வைணவம்.
