திருக்குறள் விளக்க உரை .பகுதி – 1 பாயிர இயல், முனைவர் இரா அன்பழகன், பாரதி பதிப்பகம், 147, முதன்மைச் சாலை, புவனகிரி- 608 601. 944 254 1553, நூல் விலை ரூபாய் 125 /-
முனைவர் இரா அன்பழகன் அவர்களை தமிழ் உலகம் நன்கு அறியும். முத்தமிழ் வித்தகர். ஆழ்ந்த கருத்துக்களோடு அவையை மயக்கும் வண்ணம் பேசுகின்ற ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.
அவர் திருக்குறளுக்கு உரை எழுதுகிறார் எனில், அதில் புதுமையும், இனி மையும், ஆய்வு நோக்கும், அழகு தரும் அற்புத கருத்துகளும், இல்லாமல் இருக்குமா என்ன?
இறைமறுப்புக் கொள்கை தான் தமிழன் கொள்கை என்று ஒரு சிலர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதோடு, திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு, புதுப்புது பொருட்களை வலிந்து விளக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
முனைவர் தன் முன்னுரையிலேயே அதை உடைக்கிறார்.
வைணவ சமயத்திலும் சைவ சமயத்திலும் சொல்லப்படும் முப்பொருள் உண்மை என்பது பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் உருவான தத்துவம். மிகப் பழங்காலத்திலேயே மெய்ப்பொருள் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டவன் தமிழன் என்பதற்கு இது ஒரு சான்று என்று நிறுவுகிறார்.

முதல் அதிகாரத்திலேயே 5 உண்மைகள் நிறுவப்படுகின்றன.
இறைவன் இயல்பு, இறைவனால் படைக்கப்பட்ட உலகின் இயல்பு,உலகில் பிறப்பிக்கப்பட்ட உயிர்களின் இயல்பு, உலகில் செய்த இருவினைகளால் மனித வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள், அவற்றில் இருந்து மீள்வதற்கான வழிகள்.
இப்படி கடவுள் வாழ்த்துப் பகுதியைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து எல் லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகக் கொடுத்தவர்கள் சிலரே.
இதில் முனைவர் முன்னே நிற்கிறார்.
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது எனும் குறட்பாவின் விளக்க ஆய்வு புதுமையானது.
பிறவாழி என்பதற்கு பரிமேலழகர் தந்த பொருளை ஆராய்ந்து,பிற என்பதற்கு, கடல், பொருள், இன்பம் எனப் பொருள் கொள்வதைவிட,பிறவாழி என்பதைப் பிரித்து பிறவு +ஆழி எனப் பொருள் கொள்வதே சிறந்தது.பிறவு =பிறவி எனும் கடல்.எனப் பொருள் கொள்வதே பொருத்தம் உடையது என்பதை தர்க்க ரீதியாகவும் தக்க சான்றுகளை காட்டியும் நிறுவுகிறார்.
அதைப்போல, எண் குணத்தான் தாளை வணங்காத் தலை என்பதில் உள்ள எண் குணத்தானுக்கு எட்டு விதமான குணங்களை உடையவன் இறைவன் என்று பொருள் கொள்வதைவிட, எண் + குணம், அதாவது எளிய குணங்களை உடையவன் என்ற பொருள் கொள்ளலாமே என்று இயம்புகிறார்.
பரிமேலழகர் கொண்ட பொருளை ஏற்கலாம். ஆனால் முனைவர் அன்பழகனார் கூறும் பொருள் இன்னும் நெருக்கமாகப் பொருந்தி வருகிறது. இதற்கு மேலும் நெருக்கமான பொருள் இருந்தாலும் வரவேற்கத்தக்கதே. இந்நூலில் ஆங்காங்கே அழகான இலக்கணக் குறிப்புகளைக் கொடுத் திருக்கிறார். தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் இக்குறிப்புகள் பயன் தரும்.

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
மழை பெய்யாவிட்டால் புல் கூட முளைக்காது என்பது எளிய பொருள். ஆனால் இங்கே வள்ளுவர் வார்த்தைகளில் விளையாடும் அற்புதத்தைச் சுட்டிக்காட்டுகிறார் .
விசும்பின் துளியும் பசும்புல்லும் என்பதில் உள்ள ரகசியத்தை வெளிப் படுத்துகிறார்.
நீரின் மிகச்சிறிய அளவு விசும்பின் துளி.
தாவரத்தின் மிகச்சிறிய அளவினது புல்லின் நுனி.
எனவே இரண்டும் இங்கே இணைகிறது.
தம்முடைய ஆய்வுக் கருத்துக்கள் தவிர, பிற தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கருத்துக்களையும், நுட்பமான விளக்கங்களையும் ஆசிரியர் தரத் தவற வில்லை.
இதனால் திருக்குறள் ஆய்வு நூல்கள் பலவற்றையும் ஒரே நூலில் படித்த நிறைவு ஏற்படுகிறது.
குறிப்பாக தானம், தவம் என்ற இரண்டு சொற்களின் பல்வேறு பொருள்களை இனிதே விளக்குகிறார். தானம்-புற ஒழுக்கம். தவம்-அக ஒழுக்கம் என்ற திரு.வி.க கருத்து அனைவரும் அறியத்தக்கது.
துறவு நிலையில் உள்ளோர் எதை தானம் தர முடியும்? அவர்கள் கல்வியை தானமாகத் தரலாம் .
பரிமேலழகர் உரை பொருந்தாது என சில இடங்களில் மறுக்கும் ஆசிரியர், சில இடங்களில் வேறு உரைகளைச் சொல்லி,அவைகளில் பரிமேலழகர் உரையே ஏற்புடையது என்றும் ஆதரிக்கிறார்.
இதனால் திருக்குறளின் செம்பொருளை நடுநிலை நின்று ஆராயும் ஆசிரி யரின் மனப் பாங்கு வெளிப்படுகிறது.
ஆய்வு நூலுக்கு இந்நடுநிலை அன்றோ முதல் தேவை.
மறை மொழி என்பது மந்திரம். தமிழில் சொல்லப்படும் மந்திரம்.மனத் திண் மையால்,ஆணை இட்டுச் சொல்லி நிறைவேறும் மொழி என்ற விளக்கம் சிந்திக்கத்தக்கது.
அந்தணர் என்ற சொல்லைப் பதம் பிரித்து, அம் +தண் +அர் =அருள் பொருந்திய உள்ளத்தார் அந்தணர் என்பது கல்வியையும் ஒழுக்கத்தையும் இணைத்துக் கொண்ட சொல். அது பிறப்பால் மட்டும் வருவது அன்று என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
இன்னும் ஒரு அற்புதமான குறள்.
அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
மனிதன் புரியும் நல்வினையும் தீவினையும் தொடர்ந்து வந்து இன்பத்தையும் துன்பத்தையும் தருகின்றன.
இங்கே பல்லக்கில் ஒருவன் உட்கார்ந்து செல்கிறான்.
மற்றவர்கள் அவனை தூக்கிச் செல்கிறார்கள்.
உட்கார்ந்தவன் புண்ணியம் செய்தவன்.தூக்குபவன் பாவம் செய்தவன்.
இதை ஏற்றுக்கொண்டால் நன்றாக வாழ்பவன் -முதலாளி- அரசன், புண்ணியம் செய்தவன்.
கீழே வேலை செய்பவன்,தொழிலாளி, பாவம் செய்தவன்,அடிமை என்று சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பூர்வபுண்ணிய விளைவு என்று ஆகி விடுமே .
திருவள்ளுவர் ஆண்டான் அடிமை கருத்தை சரிதான் என்று சொல் கிறாரா?முயற்சிக்கு வேலை இல்லை.அண்ணல் உயர்வு இல்லையா?
இது ஒரு குறியீடே தவிர வள்ளுவரின் நோக்கம் தூக்குபவனை இகழ்வதோ, உட்கார்ந்திருப்பவனை புகழ்வதோ அல்ல என இதற்கு மிகச் சரியான தீர்வும் விளக்கமும் தருகிறார் நூலாசிரியர்
இதற்கு உதாரணமாக கம்பராமாயண பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
இலங்கையில் அரக்க மாதர்களை அமர மாதர்கள் அடிமைகளாக நீராட்டம் செய்ய உதவுகிறார்கள். இது அரக்கர்களின் உழைப்பையும்,அமரர்கள் தவக் குறைவையும் காட்டுகிறது.
உண்மையில் யாராக இருந்தாலும் முயன்றால் உயரலாம் என்ற கருத்தே உட் பொதிந்து இருக்கிறது.
எனவே இது.அளவை குறியீடு.
பல்லக்கு தூக்குபவன் அமைதி மகிழ்ச்சி இல்லாதவனாகவோ,பல்லக்கில் அமர்ந்து இருப்பவன் மகிழ்ச்சியுடன் உள்ளவனாகவோ சொல்லப் படவில்லை.
இதற்கு சான்றாக அலெக்சாண்டர் வரலாற்றைக் காட்டுகிறார்.
பிச்சைப்பாத்திரம் கூட இல்லாத டயோசெனஸ் என்னும் துறவியைப் பார்த்து பேரரசரான நான் இந்த உலகத்தையே வைத்திருந்தும் மகிழ்ச்சியில்லையே . எதுவுமே இல்லாத நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே .. அடுத்த பிறவியில் நான் உங்களைப் போல் பிறக்க விரும்புகிறேன்.என்று சொல்லுகிறான்.
அதிக புண்ணியம் பண்ணினால் தான் ,ஒன்றும் இல்லாத துறவியாகப் பிறக்கலாம் என்பதும் தேறுகிறது
இப்படித் தொட்ட தொட்ட இடங்கள் எல்லாம் அழகான மேற்கோள்கள், உதாரணங்கள், தர்க்க வாதங்கள், இலக்கணக் குறிப்புகள் ,என செம்மையான நூலாக ஆக்கி இருக்கிறார் ஆசிரியர்.

