நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் இன்று திருக் கார்த்திகை தீபம் .அந்த திருக்கார்த்திகை தீபத்தைப் பார்த்து விட்டுத் தான் அவரவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழா அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கி, கோயிலில் பரணி தீபம் (பரணி தீபத் திருவிழா) ஏற்றப்படுகிறது. பிற்பகல் ஸ்ரீ சுப்பிரமணியர் பிரம்ம தீர்த்தக்குளம், தீர்த்தவாரி திருவிழா திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது , மாலையில் ஆறு மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் – பஞ்சமூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் அலங்கார தரிசனம் மற்றும் மகா தீபம் (மகா ஜோதி தரிசனம்) ஏற்றப்படும்.அருணாசலேஸ்வரர் மலை உச்சியில் அக்னி வடிவில் காட்சி தருவார்.
தீப மங்கள ஜோதி நமோ நம என்று இறைவன் ஜோதி வடிவாக இருப்பதாக ஆன்றோர்கள் கூறுகின்றார்கள் .வையம் வாழ வந்த வள்ளலார்” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார்.அந்த அருட்பெருஞ்ஜோதி தான் ஆன்மீக ஜோதியாக திருவண்ணாமலை ஏற்றப்படுகின்றது.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஜோதி ஸ்வரூபம் உடையவை. இந்த ஜீவாத்மா தன்னை அறியாமல் மாயை என்னும் இருட்டில் சிக்கித் தவிக் கிறது. பேரருள் ஜோதியான அண்ணாமலையாரின் ஜோதி பிரகாசிக்கின்ற பொழுது இந்த ஆன்மாவும் அந்த ஜோதியில் தன் ஜோதியையும் கண்டு மகிழ்கிறது.
தீபம் ஏற்றுதலும் தீபத்தின் சுடரும் ஆன்மீகத்தின் அற்புதக் குறியீடுகள். திருத்தொண்டுகளிலே திருக்கோயில்களிலே தீபம் ஏற்றும் திருத் தொண்டு மிகச் சிறப்பான தொண்டு.
ஒளி என்றாலே சிவம் தான். சிவத்தின் இயல்பே ஒளிவது தான்.ஒளி வளர் விளக்கான அந்த அருட் பெரும்ஜோதியை அகல் விளக்கில் காண்கிறது ஆன்மீக மனம்.
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்!
துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்!
விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்!
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே’
என்கிறது தேவாரம். எனவே வீடெங்கும் விளக்கேற்றுவோம்.வினைகளைப் போக்கிக்கொள்வோம்.
27.11.2023 -திங்கள்கிழமை -பாஞ்சராத்ர தீபம்.
இன்று சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகவானுக்கு தீபங்கள் சமர்ப் பிக்கப்படும். பௌர்ணமியுடன் கிருத்திகை இணையும் நேரத்தில் தீபங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் கூறுகிறது. அதுவும் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் ரிஷப லக்னத்தில் விளக்கு ஏற்றினால் விளைச்சல் அதிகரிக்கும்; ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படும் என்றெல்லாம் விதிகள் சொல்லப்பட்டு இருக்கின்றது. கார்த்திகை தீபத்தில் பெருமாள் புறப்பாடும் உண்டு .பெருமாள் கோயிலுக்கு வெளியே வந்து நிற்க, அவர் முன்னால் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.இது பல சிவாலயங்களிலும் நடத்தப்படும்.
