BY எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம்
ஒரு கடுமையான காலத்தை, ஜோதிட இயல் துணை கொண்டு “மகத்தில் புக்கதோர் சனி”- என பாடுகின்றார் சுந்தரர்.
மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையல் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
என்று தேவாரத்தில் வருகிறது.
சுந்தரர் தமது கண் பார்வை இழந்து ,அந்த வருத்தத்தை, ஒரு முழுப் பாட்டில் தெள்ளத் தெளியப் பாடிக் கசிந்து உருகுகிறார்.
அதாவது சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தின் மேல், சனி நிலை கொண்டி ருக்கும் பொழுது, வறுமையும், பஞ்சமும் ,கஷ்டங்களும் எல்லையற்று இருக்கும் என்று இந்த தேவாரம் தெரிவிக்கிறது.
இங்கே எத்தனை அற்புதமாக ஜோதிட சாஸ்திரம் விளக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது.
சிம்ம ராசி சனியின் பகை வீடு.
காலச்சக்கரத்தின் ஐந்தாவது ராசி.
மகம் என்பது கேதுவின் நட்சத்திரம்.
சூரியனுக்கு பகை பெற்ற கிரகங்கள் சனியும் கேதுவும்.
கேதுவின் சாரம் பெற்ற சனி, பகை வீடான சிம்மத்தில் அமர்ந்து, தனது 3, 7, 10 ம் பார்வையின் மூலமாக, ஏழாவது வீட்டையும், 11வது வீட்டையும், இரண்டாவது வீட்டையும் பார்க்கிறது.
இதில் 11வது வீடு என்பது ஒருவரின் லாபத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும், காட்டுகின்றது.
ஏழாம் வீடு என்பது ஒருவனின் இல்லற இணையையும்(கணவன்/மனைவி ), நட்பையும்,சுய தொழிலையும் காட்டுகிறது.
இரண்டாம் வீடு என்பது குடும்ப விருத்தியையும், கல்வியையும், செல்வத் தையும் காட்டுகின்றது.
இப்பொழுது மக நட்சத்திரத்தில் சனி போகின்ற பொழுது இந்த வீடுகள் பாதிக்கும் அல்லவா.
ஒருவனுடைய நட்பு பாதிக்கும்.
குடும்ப உறவுகள் பாதிக்கும்.
லாபங்கள் குறைந்து நஷ்டம் ஏற்படும்.
மகிழ்ச்சி குறையும்.
எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படும்.
குடும்ப உறவுகள் சிதைந்து செல்வங்கள் குறைந்துபோகும்.
இப்படிப்பட்ட ஒரு நிலையை சனி மக நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் பிரவேசிக்கும்போது வரும் என்பது அடிப்படையான ஜோதிட சாஸ்திர விதி.
ஒருவனுக்கு பஞ்சம ஸ்தானத்தில், சனி பாப பலத்தோடு அமர்கின்ற பொழுது, அந்த வீடு மட்டும் அல்லாது, அந்தச் சனியால், மற்ற வீடு களும் பாதிக்கும்.
மற்ற பாவங்களும் பாதிக்கும். செல்வம் இல்லாத போது தூக்கம் போய் விடும் என்பதால் பன்னிரண்டாம் வீடு பாதிக்கும்.
உறவுகள் பாதித்ததால் உடம்பு மெலிந்து நோய்வாய்ப்படும் என்பதால் ஆறாம் வீடு பாதிக்கும்.
தொழிலில் கவனம் செலுத்த முடியாது, பத்தாம் வீடு பாதிக்கும்.
சுகம் என்பதே இருக்காது; நான்காம் வீடு பாதிக்கும்.
இப்படிக் காலில் அடி விழுந்தால் ,கண்கள் அழுவதைப் போல, மனம் துடிப்பது போல, ஏதோ ஒரு பாவத்தில் அடி விழுந்தாலும், அது மற்ற பாவங்களை பாதிக்கும் என்பதையெல்லாம் சுந்தரர் ஒரே வரியிலே,” மகத்தில் புக்கதோர் சனி ” என்று பாடுகின்றார்.
