தைப்பூசம் இன்று சகல சிவாலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் கொண்டாடப்படும். தைப்பூச திருவிழா ஒட்டி முருகனுக்கு பால்காவடி, பன்னீர் காவடி முதலிய காவடிகளை எடுத்துக் கொண்டும், அலகு குத்தியும் பால்குடம் சுமந்து கொண்டும் அங்கங்கே உள்ள கோயில்களுக்கு சென்று அபிஷேகங்கள் செய்வர். இன்றைய தினம் பௌர்ணமி பூஜை செய்ய உகந்தது.சத்திய நாராயண பூஜையும் செய்யலாம் . மலை உள்ள கோயில்களில் கிரிவலம் வருவது நல்லது. 4.2.23 இரவு பத்தே முக்கால் மணி முதல் 5.2.23 இரவு 12 மணி வரை பௌர்ணமி இருப்பதால் இக்காலங்களில் கிரிவலம் வரலாம். கிரிவலம் வருவதன் மூலம் பாவங்கள் தொலையும். புண்ணியம் பெருகும். மனதிலும் உடலிலும் பொது உற்சாகம் பிறக்கும்.
தை பூசம் ஒட்டி எத்தனையோ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றாலும், வடலூர் சத்திய ஞான சபையின் தைப்பூச தரிசனமும், பெரு விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று லட்சக்கணக்கான மக்கள் வடலூரில் கூடுவர். அங்கே ஜோதி தரிசனம் நடைபெறும். ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும். .ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை – கிரியாசக்தி, பச்சைத் திரை – பராசக்தி, சிவப்புத் திரை – இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை – ஞான சக்தி, வெண்மைத் திரை – ஆதிசக்தி, கலப்புத்திரை – சிற் சக்தி! அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து.அன்று எங்கெங்கு பார்த்தாலும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
